📅 Monday, 13 July 2026 IST | ஆனி 29, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics July 12, 2026 04:25 PM

வியட்நாம் படகு விபத்து: 15 இந்தியர்கள் உயிரிழப்பு

வியட்நாம் படகு விபத்து: 15 இந்தியர்கள் உயிரிழப்பு

புதுடெல்லி: நடுக்கடலில் படகு கவிழ்ந்த விபத்தில் 15 இந்தியச் சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தது வியட்நாமில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

வியட்நாமின் ‘ஃபூ குவோக்’ தீவு அருகே சனிக்கிழமை இந்த விபத்து நிகழ்ந்தது. பலியான இந்தியச் சுற்றுலாப் பயணிகளில் பத்துப் பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என இந்திய வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

வியட்நாமின் ஹான் மே ரட்டிலில் இருந்து 32 இந்தியச் சுற்றுலாப் பயணிகள் நான்கு ஊழியர்களுடன் ஆன் தோய் துறைமுகம் நோக்கி, அந்த விசைப்படகு சென்று கொண்டிருந்ததாகவும் அப்போது கடும் கடல்சீற்றம் ஏற்பட்டதாகவும் வியட்நாம் ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடல் சீற்றம் காரணமாக அந்த விசைப்படகு கட்டுப்பாட்டை இழந்து கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதுகுறித்து தகவலறிந்த வியட்நாம் கடலோரக் காவல்துறையினர் விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டதாகவும் மற்ற சுற்றுலாப் படகுகள் அவர்களுக்கு உதவியதாகவும் ஊடகத்தகவல்கள் மேலும் தெரிவித்தன.

படகு ஊழியர்கள் நான்கு பேர் உள்ளிட்ட 21 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ள நிலையில், 15 இந்தியச் சுற்றுலாப் பயணிகள் கடலில் மூழ்கி மாண்டுபோனதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்டவர்களில் இருவரது நிலை கவலைக்கிடமாக உள்ளது.

இந்தியாவில் தனியார் கைப்பேசி நிறுவனத்தின் தயாரிப்புகளை அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்து சாதித்த முகவர்கள், ஊழியர்களை ஊக்கப்படுத்தும் விதமாக அந்நிறுவனம் இன்பச் சுற்றுலாவிற்கு ஏற்பாடு செய்திருந்தது.

இதையடுத்து கடந்த 8ஆம் தேதி 105 பேர் கொண்ட குழுவினர் வியட்நாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு கடலில் சென்ற போதுதான் விபத்து நேர்ந்துள்ளது. மாண்டுபோனவர்களில் பத்துப் பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

கடலில் சென்றபோது மிகப்பெரிய அலை தாக்கியதாகவும் இதில் படகு ஒரு பக்கமாகச் சாய்ந்ததில் 20 பேர் கடலில் தூக்கி வீசப்பட்டதாகவும் விபத்தில் உயிர்தப்பிய பழனியைச் சேர்ந்த நிர்மல் குமார் தெரிவித்துள்ளார். படகுக்குள் இருந்தவர்களை மீட்புப்படையினர் மீட்டதாக அவர் கூறியுள்ளார்.

விபத்து தொடர்பான தகவல், உதவிகளை வழங்க ஏதுவாக ஹோசி மின் நகரில் உள்ள இந்தியத் துணைத் தூதரகங்களில் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தாருக்கு இந்திய அதிபர் திரௌபதி முர்மு, துணை அதிபர் சிபி ராதாகிருஷ்ணன், பிரதமர் மோடி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

பிரதமர் மோடி மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, படகு விபத்து தொடர்பாக வியட்நாம் உயர்மட்டத் தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

அந்நாட்டு அதிபர் டோ லாம், பிரதமர் லே மின் ஹங் ஆகிய இருவரும் இந்திய அதிபர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி ஆகியோருக்குத் தனித்தனியாக இரங்கல் செய்திகளை அனுப்பியுள்ளனர்.

இந்தத் துயரச் சம்பவத்தின் பின்விளைவுகளை எதிர்கொள்ள இந்தியத் தரப்புடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருவதாக வியட்நாம் தலைவர்கள் கூறியுள்ளனர்.

மேலும், விபத்துக்கான சரியான காரணத்தைக் கண்டறிய சம்பந்தப்பட்ட அமைப்புகள் விசாரணையைத் தொடங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.