📅 Monday, 13 July 2026 IST | ஆனி 29, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics July 12, 2026 08:52 PM

தமிழ்நாட்டில் இனி கூட்டணி ஆட்சி தான்

தமிழ்நாட்டில் இனி கூட்டணி ஆட்சி தான்

தமிழ்நாட்டில் இனி கூட்டணி ஆட்சி தான் - திருமாவளவன்

தேர்தலில் எப்படி பின்னடைவு ஏற்பட்டது என்று திமுகவும், அதிமுகவும் தங்களை சுயபரிசோதனை செய்துகொள்ள தயாராக வேண்டும் என்று திருமாவளவன் தெரிவித்தார்.

Published : July 12, 2026 at 7:49 PM IST

Updated : July 12, 2026 at 8:03 PM IST

திருவண்ணாமலை: தமிழ்நாட்டில் இனி கூட்டணி ஆட்சிதான் நடைபெறும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலையில், விசிகவின் தமிழ் தேசிய எழுச்சி மாநாடு குறித்து மண்டல செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், திருவண்ணாமலை, ஆரணி, வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் நாடாளுமன்ற தொகுதிகளின் மாவட்ட செயலாளர்கள், மண்டல செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள், நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் திருமாவளவன் பேசுகையில், "நமது வளர்ச்சி பலரின் கண்களை உறுத்துகிறது. நம் வளர்ச்சியை எப்படி சிதைக்கலாம் என்று சிலர் தனிநபர் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் அவர்களின் அவதூறுகளுக்கு உடனுக்குடன் பதில் அளிக்கும் விடுதலை சிறுத்தைகளை பாராட்டுகிறேன்.

கருத்தியல் சார்ந்து விடுதலை சிறுத்தைகள் வளர்ச்சி அடைந்துள்ளது. இன்றைய நடப்பு அரசியல் குறித்து வாதத்தில் ஈடுபட்டால் விடுதலை சிறுத்தை கட்சியினர் தான் வெற்றி பெறுவார்கள்.

ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்ற கோரிக்கையை வென்று உள்ளோம். கூட்டணி ஆட்சி என்ற அரசியல் விவாதத்தை முன் வைத்தது விடுதலை சிறுத்தைகள் கட்சிதான். இனி தமிழகத்தில் யார் ஆட்சிக்கு வந்தாலும் கூட்டணி ஆட்சிதான் நடைபெறும். தற்போது ஆட்சி மாற்றம் மட்டும் நடைபெறவில்லை, தமிழக அரசியல் போக்கிலும் மாற்றம் வந்துள்ளது. தமிழக அரசியல் புதிய காலடி எடுத்து வைத்துள்ளது. இதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி முக்கிய பங்கு வகிக்கிறது. நம்மை பாராட்ட வேண்டும் என்றால் பல கோணங்களில் பாராட்டலாம். ஆனால் தாழ்த்தி பேச வேண்டும் என்பவர்கள் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். சூழ்ச்சி, வஞ்சகம், துரோகம் நிறைந்த இந்த அரசியலில் நாம் இன்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். நீங்கள் கொடுக்கும் நிதியின் மூலம் பல மாநாடுகளை நடத்தி உள்ளோம். உங்களால் தான் இன்று மாநில கட்சியாக உருவாகி அதிகாரத்திலும் பங்கு பெற்றுள்ளோம்.

ஒரு கூட்டணியில் இருந்து வெற்றி பெற்று, இன்னொரு கூட்டணியின் மூலம் அமைச்சரவையில் இடம் பெறலாமா? என்று இன்று விவாதம் பலர் செய்து வருகின்றனர். ஆனால் அந்த கூட்டணி கட்சிகள் சிதறி விடாமல் இருப்பதற்கு விடுதலை சிறுத்தை கட்சி களத்தில் நின்றது. தேர்தலுக்குப் பின்பு கூட்டணி சிதறுகிறது என்றால், அதிமுக, திமுக ஆகிய கட்சிகளின் கூட்டணிகளை பின்னுக்குத் தள்ளி ஒரு கட்சி தேர்தலில் வெற்றி பெற்று முன்னுக்கு வருகிறது என்றால் அதற்கு என்ன காரணம் என்று அதிமுகவும், திமுகவும் தங்களை சுய விமர்சனம் செய்து கொள்ள வேண்டும்.

திராவிட அரசியலுக்கு எதிரான வெறுப்பு அரசியல் தொடர்ந்து பரப்பப்பட்டு வருகிறது. அதன் உச்சமாக கலைஞர் கருணாநிதி நினைவு பேனா சின்னம் அமைத்தால் நானே உடைப்பேன் என்று சீமான் கூறினார். ஆனால் இன்றைக்கு அவரை பொது வேட்பாளராக நிறுத்த பேசி வருகின்றனர். ஆனால், திருமாவளவன் அவர்களுக்கு எதிரியாகிவிட்டாராம்.

2009-ஆம் ஆண்டில் இருந்து திமுக கூட்டணியில் இருந்தோம்; தொடர்ந்தோம். திமுக மீதும், காங்கிரஸ் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை நானும் சுமந்தேன். நீங்கள் அமைச்சரவையில் இணைந்ததால் தான் கூட்டணி முறிந்து விட்டதாக திமுகவினர் தெரிவித்தனர்.

தமிழக அரசியலில் நாம் பெரிய அளவில் எம்எல்ஏக்கள், எம்.பி.க்களை வைத்திருக்கவில்லை. இருந்தாலும் நாம் குறிவைக்கப்பட்டுள்ளோம். திருமாவளவனையும், விடுதலை சிறுத்தை கட்சியையும் அவர்களால் உதறிவிட்டுச் செல்ல முடியவில்லை. தேர்தலுக்கு முன்பு தவெகவை நாங்கள் விமர்சித்தோம். விமர்சனங்களையும் மீறி ஆட்சி அமைக்க தவெக நம்மை நாடியபோது நாம் அவர்களுக்கு ஆதரவு அளித்தோம்.

நாங்கள் எங்கே இருந்தாலும் நேர்மையாக இருப்போம். திராவிட அரசியல் இன்று சிதறிக் கொண்டிருக்கிறது. அண்ணாமலை மூலமாக ஆர்.எஸ்.எஸ். மற்றும் பி.ஜே.பி.யின் மற்றொரு முகமாக தமிழகத்தில் அடி எடுத்து வைக்கிறது. கூட்டணி ஏன் உடைந்தது என்று திமுக சிந்திக்க வேண்டும். திமுக, காங்கிரஸ் உறவு கசந்த உறவாக மாறியது ஏன் என்று திமுக என்றும் சுய விமர்சனம் செய்து கொள்ள வேண்டும்" என்று தெரிவித்தார்.