தமிழ்நாடு அரசின் ஏ.ஐ சாட்பாட் மற்றும் வாய்ஸ் பாட் சேவை|முதல்வரின் முகவரி
வணக்கம், என் பெயர் கவிதா. நான் பிரபல நாளிதழில் 14 வருடங்களாக Content Writer-ஆக பணிபுரிந்திருக்கிறேன். தற்போது பாரம்பரியமும், கலைத்துவமும் நிறைந்த கல்கி குழுமத்தின் இணையதளம் வாயிலாக எனது படைப்புகளை வெளியிடுவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். செய்திகள், விளையாட்டுச் செய்திகள், சினிமா செய்திகள், கலை, ஆன்மிகம், யோகா போன்ற செய்திகளை பதிவிடுவதன் மூலம் உங்கள் கவனத்தை ஈர்க்க கடினமாக உழைக்கிறேன். உங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற என்னால் முடிந்தவரை முயற்சி செய்வேன்.
தமிழ்நாடு அரசு பொதுமக்களின் புகார்களை மிக எளிதாகப் பதிவு செய்ய ஏ.ஐ (AI) தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய வசதியை அறிமுகப்படுத்த உள்ளது.
அதாவது பொதுமக்களின் மனுக்களைப் பதிவு செய்யவும், அவற்றின் நிலையைத் தெரிந்துகொள்ளவும், எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விவரங்களைப் பெறவும் தமிழ்நாடு அரசு ஏ.ஐ மூலம் இயங்கும் மென்பொருளை அறிமுகப்படுத்த உள்ளது.
மூத்த குடிமக்கள் மற்றும் இணையதள அமைப்புகளைப் பயன்படுத்த சிரமப்படுபவர்களுக்கு உதவும் வகையில் இந்தச் சேவைகள் வடிவமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு அரசின் ‘முதல்வரின் முகவரி’ (CM Helpline Portal) இணையதளத்தில் ஏ.ஐ (AI) மூலம் இயங்கும் சாட்பாட் (Chatbot) மற்றும் வாய்ஸ் பாட் (Voice Bot) வசதிகளை அறிமுகப்படுத்த உள்ளது.
அரசின் இந்த புதிய முயற்சியின்படி, பொதுமக்கள் தங்களது குறைகளை இணையதளத்திலோ அல்லது மொபைல் செயலியிலோ டைப் செய்யத் தேவையில்லை; வாய்மொழியாகப் பேசினாலே (Voice Dictation) அது மனுவாகப் பதிவாகிவிடும். பொதுமக்கள் தங்களின் புகார்களை வாய்மொழியாக விவரிக்கும்போது, ஏ.ஐ அதைத் துல்லியமாகக் கேட்டுப் புரிந்து கொண்டு முறையான எழுத்துப்பூர்வமான மனுவாக மாற்றும்.
மக்கள் நேரடியாகத் தாளில் எழுதிய மனுக்களைப் புகைப்படம் எடுத்து அப்லோட் செய்தாலும், அதில் உள்ள தெளிவற்ற எழுத்துக்களை ஏ.ஐ ஸ்கேன் செய்து படிக்கக்கூடிய ஆவணமாக மாற்றிவிடும்.
வாய்ஸ் பாட் (Voice Bot) மூலம் கணினி அல்லது இணையதளங்களைப் பயன்படுத்தத் தெரியாதவர்களும், முதியவர்களும் தங்களது குறைகளைத் தங்களின் சொந்தக் குரலிலேயே பேசி புகாராகப் பதிவு செய்யலாம். ஆன்லைனில் படிவங்களை நிரப்பத் தெரியாத அடித்தட்டு மக்கள், இணையப் பயன்பாட்டில் சிரமம் உள்ள முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு இந்த வாய்ஸ்-பாட் சேவை ஒரு வரப்பிரசாதமாக அமையும். மனுக்களைத் தேடி அலைவது, எழுதத் தெரிந்தவர்களை நாடுவது போன்ற சிரமங்கள் இதனால் முற்றிலும் குறையும்.
அதுமட்டுமின்றி இதன் மூலம் பொதுமக்கள் தங்களது மனுக்களைப் பதிவு செய்யவும், அவற்றின் தற்போதைய (Status) நிலையைத் தெரிந்துகொள்ளவும், புகார்களை எளிமையாகப் பதிவு செய்யவும், எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விவரங்களின் நிலையைத் தெரிந்துகொள்ளவும் முடியும்.
பதிவு செய்யப்பட்ட மனுக்கள் எந்தத் துறையின் கீழ் வருகின்றன என்பதை ஏ.ஐ தொழில்நுட்பமே தரம் பிரித்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பும். அதாவது, நீங்கள் கொடுக்கும் புகாரைப் படித்துப் பார்த்து, அது எந்த அரசுத் துறைக்குச் செல்ல வேண்டும் (உதாரணமாக: பட்டா திருத்தம் என்றால் வருவாய்த்துறை RDO/Tahsildar) என்பதை ஏ.ஐ-யே தானாகவே பகுப்பாய்வு செய்து அனுப்பிவிடும்.
இந்தச் சேவைகள் குறிப்பாக முதியோர் மற்றும் இணைய அடிப்படையிலான அமைப்புகளைப் பயன்படுத்துவதில் சிரமம் உள்ளவர்களை இலக்காகக் கொண்டுள்ளன.
லார்ஜ் லாங்குவேஜ் மாடல் (LLM) தொழில்நுட்பத்தின் கீழ் இயங்கும் இந்த மென்பொருளுக்குத் தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகள், மாவட்டங்கள், வட்டாரங்கள் மற்றும் தாலுகாக்கள் குறித்த முழுமையான விபரங்கள் கற்பிக்கப்பட்டுள்ளன.
பொதுமக்கள் பயன்பாட்டை எளிதாக்க, தமிழகத்தின் அனைத்து 38 மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் மற்றும் தலைமைச் செயலகத்தில் உள்ள முதல்வரின் தனிப்பிரிவிலும் இந்த ஏ.ஐ டிஜிட்டல் கியோஸ்க்குகள் (Digital Kiosks) நிறுவப்பட உள்ளன.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இதற்கான முதற்கட்ட சோதனை ஓட்டம் (Trial run) வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது. இந்தச் சோதனையின் முடிவுகள் மற்றும் திருத்தங்கள் முழுமையடைந்தவுடன், விரைவில் இந்த ஏ.ஐ தொழில்நுட்பம் தமிழ்நாடு முழுவதும் உள்ள 38 மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களிலும், தலைமைச் செயலகத்திலும் உள்ள டிஜிட்டல் கியோஸ்க்களிலும் (Digital Kiosks) முழுமையாகச் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்பட உள்ளது.
தொழில்நுட்பத்தின் உதவியோடு அரசு நிர்வாகத்தை மிக எளிய முறையில் மக்களின் வீட்டு வாசலுக்கே கொண்டு சேர்க்கும் ஒரு முக்கிய மைல்கல்லாக இத்திட்டம் பார்க்கப்படுகிறது.
பொதுத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது, சட்டப்பேரவையில் தமிழ்நாடு அரசு இந்த முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டது.
இதில் முதல்வரின் முகவரி, முதலமைச்சர் உதவிமைய இணையதளம் மூலம் பொதுமக்கள் மனுக்களைப் பதிவு செய்யவும், அவற்றின் நிலையைக் கண்காணிக்கவும், எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விவரங்களைப் பெறவும் ஏ.ஐ சார்ந்த சாட்பாட் மற்றும் உரையாடும் குரல்வழி சேவை அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.