மதுரை மீனாட்சி அம்மன் குடமுழுக்கு விழாவில் தமிழ் ஓதுவார்களுக்கு உரிய முக்கியத்துவம் தர வேண்டும்: ஐகோர்ட் கிளை உத்தரவு
மதுரை மீனாட்சி அம்மன் குடமுழுக்கு விழாவில் தமிழ் ஓதுவார்களுக்கு உரிய முக்கியத்துவம் தர வேண்டும்: ஐகோர்ட் கிளை உத்தரவு
மதுரை: மீனாட்சி அம்மன் குடமுழுக்கு விழாவில் தமிழ் ஓதுவார்களுக்கு உரிய முக்கியத்துவம் தருவதை உறுதி செய்ய வேண்டுமென ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. நாம் தமிழர் கட்சி மீனவர் பாசறை ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் தீரன் திருமுருகன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் வரும் 17ம் தேதி குடமுழுக்கு விழா நடைபெறுகிறது. இதில், தமிழ் சைவ பக்தி மற்றும் பண்பாட்டு மரபுகளுக்கு உரிய பங்கேற்பும், முக்கியத்துவமும் வழங்க வேண்டும்.
சமஸ்கிருதத்தை நீக்க வேண்டும் என்றோ, ஆகமச்சடங்குகளை மாற்ற வேண்டும் என்றோ கோரவில்லை. ஆகம விதிகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில், குடமுழுக்குடன் தொடர்புடைய நிகழ்ச்சிகள் மற்றும் பொதுநிகழ்வுகளில் தேவாரம், திருவாசகம் உள்ளிட்ட தமிழ் சைவ பக்தி மரபுகளுக்கு உரிய இடம் வழங்க வேண்டும். இதுதொடர்பாக கடந்த வாரம் அதிகாரிகளிடம் மனு அளித்திருந்தேன். எனவே, எனது மனுவை பரிசீலித்து, 17ம் தேதி நடைபெற உள்ள குடமுழுக்கு விழாவை, தமிழ் மொழியிலும் நடத்த தேவையான ஏற்பாடுகளை செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார்.
இதேபோல் மதுரையை சேர்ந்த ரமேஷ்குமார் என்பவரும், மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு அமைதியான முறையில் நடைபெற நிலையான செயல்பாட்டு நடைமுறையை உருவாக்க வேண்டும் என கூறியிருந்தார். இந்த மனுக்கள் நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், சக்திவேல் ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், ஏற்கனவே மீனாட்சி அம்மன் கோயிலில் 6 தமிழ் ஒதுவார்கள் உள்ளனர். குடமுழுக்கு விழாவில் ஆழ்வார் பாடிய பன்னிரு தமிழ் திருமுறை பாடப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், மீனாட்சி அம்மன் கோயிலில் கடந்த காலங்களில் நடந்த குடமுழுக்கு விழாக்களில் தமிழ் மந்திரங்களை ஓதும் ஓதுவார்களுக்கு உரிய முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது. அதைப் போல தற்போதைய குடமுழுக்கு விழாவிலும் தமிழ் மந்திரங்களை ஓதும் ஓதுவார்களுக்கு உரிய முக்கியத்துவம் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். ஏற்கனவே கலெக்டர், போலீஸ் கமிஷனர் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு கூட்டம் நடத்தி உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. எனவே, இரண்டு மனுக்களும் தள்ளுபடி செய்யப்படுகிறது என உத்தரவிட்டனர்.
* வைகையாற்றில் தங்கக்குடத்தில் புனித நீர் எடுத்து சிறப்பு பூஜை
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் வரும் 17ம் தேதி குடமுழுக்கு நடைபெறுகிறது. இதற்காக கடந்த 6ம் தேதி குடமுழுக்குக்கான பூர்வாங்க பூஜை தொடங்கியது. 2ம் நாளில் நவக்கிரக ஹோமம், திசா ஹோமம் மற்றும் பிரசாதம் வழங்குதல் நடைபெற்றது. 3ம் நாளான நேற்று முன்தினம் ஆடி வீதி, கம்பத்தடி மண்டபத்தில் சாந்தி ஹோமம், மூர்த்தி ஹோமம், ஸம்ஹிதா ஹோமம் உள்ளிட்டவை நடத்தப்பட்டன.
4ம் நாளான நேற்று வைகை ஆற்று பகுதியான யானைக்கல் தரைப்பாலம் அருகே காலை 7 மணி முதல் 9.30 மணி வரை மங்கள இசை, தீர்த்த சங்கிரஹணம், திருமுறை விண்ணப்பம், தீபாராதனை, திருநீறு திருவமுது பிரசாதம் வழங்குதல் நடைபெற்று, பின்னர் வைகை ஆற்றில் உள்ள கோயிலுக்கு சொந்தமான கிணற்றில் இருந்து தங்க குடத்தில் புனித நீர் எடுத்து, மேளதாளம் முழங்க பசு, ஒட்டகம், குதிரை முன்னே செல்ல யானைகளில் பட்டர்கள் புனித நீர் எடுத்து சிம்மக்கல், கீழமாசி வீதி வழியாக கோயிலுக்கு சென்று சிறப்பு பூஜைகள் செய்தனர்.
நேற்று மாலை 5 மணி முதல் 7 மணி வரை வைகை ஆற்றில் மங்கள இசை, புனித மண் எடுத்தல், திருமுறை விண்ணப்பம், தீபாராதனை, திருநீறு திருவமுது பிரசாதம் வழங்கிய பின்னர் வைகை ஆற்றில் இருந்து புனித மண் எடுத்து ஊர்வலமாக சென்று, கோயிலில் சிறப்பு பூஜைகள் நடத்தினர். இந்நிகழ்ச்சியில் 1,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.