📅 Wednesday, 16 September 2026 IST | ஆவணி 31, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu September 16, 2026 08:34 AM

தமிழ்நாட்டில் மின்வெட்டு ஏன்? காரணங்களை அடுக்கிய அமைச்சர் நிர்மல் குமார்

தமிழ்நாட்டில் மின்வெட்டு ஏன்? காரணங்களை அடுக்கிய அமைச்சர் நிர்மல் குமார்

தமிழ்நாட்டில் மின்வெட்டு ஏன்? காரணங்களை அடுக்கிய அமைச்சர் நிர்மல் குமார்

மழைக்காலங்களில் மின்சார தட்டுப்பாட்டை சமாளிக்க எந்த ஆட்சியிலும் இல்லாத வகையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாகவே குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக நிர்மல் குமார் கூறியுள்ளார்.

Published : September 16, 2026 at 7:58 AM IST

சென்னை: காற்றாலை மின்சாரம் உற்பத்தி குறைவாக இருந்ததால் தமிழ்நாட்டில் மின்சார தட்டுப்பாடு ஏற்பட்டதாகவும், இதனை சரிசெய்ய கூடுதலாக 1,500 மெகாவாட் மின்சாரம் வாங்க திட்டமிட்டுள்ளதாகவும் எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்திருக்கிறார்.

சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் அதிகரித்து வரும் மின்வெட்டு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் அமைச்சர் நிர்மல் குமார் தலைமையில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நிர்மல் குமார்,

“தமிழ்நாட்டில் மின்சார தட்டுப்பாடு என்பது கிடையாது. அனைத்தும் சீர் செய்யப்பட்டுள்ளது. ஓரிரு இடங்களில் மின்மாற்றி (டிரான்ஸ்பார்மர்) பழுதானதால் மின்சார துண்டிப்பு ஏற்பட்டு இருக்கலாம். கடந்த சில நாட்களாகவே காற்றாலை மின்சாரம் மூலம் பெறப்படும் மின்சாரம் சரிவர கிடைக்கவில்லை. இதனால் நம் மாநிலத்தில் மட்டுமல்ல; மற்ற மாநிலங்களிலும் மின்சார தட்டுப்பாடு ஏற்பட்டது.

இருந்தபோதிலும் கடந்த முறை பொதுத் தொகுப்பில் 2,000 மெகா வாட் மின்சாரம் வாங்கப்பட்டது. இந்த முறை கூடுதலாக 1500 மெகா வாட் மின்சாரம் வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் எந்த வகையிலும் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக முதலமைச்சரின் உத்தரவின் பெயரில் மற்ற மாநிலங்களிலிருந்து பொதுத் தொகுப்பில் நாம் வாங்குகிறோம். பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு ஒரு யூனிட் மின்சாரம் ரூ. 20 விலை கொடுத்து வாங்குவதற்கு திட்டமிட்டுள்ளோம்.

அக்டோபர் மாதத்திலிருந்து நீண்ட கால ஒப்பந்தத்தின் மூலமாக மின்சார கொள்முதல் நடைபெறும். அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. மழைக்காலங்களில் மின்சார தட்டுப்பாட்டை சமாளிக்க எந்த ஆட்சியிலும் இல்லாத வகையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாகவே குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன” என்றார்.

சட்டப்பேரவையில் அவதூறான தகவல்களை தெரிவித்ததாக தன் மீது திமுக வைத்துள்ள விமர்சனம் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் நிர்மல் குமார்,

“திமுகவின் கடைசி ஆயுதம் ஆபாசம் தான். தமிழ்நாடு அரசியலில் திமுக போன்று தரம் தாழ்ந்து யாராலும் பேச முடியாது. மிசா கால சர்ச்சை தொடர்கிறது என்றால் அதில் ஏதோ ஒரு தவறு இருக்கிறது என்று தானே அர்த்தம். 60 முதல் 70 ஆண்டுகளாக இது தொடர்கிறது என்றால் அதில் ஏதோ ஒரு பிரச்சினை இருக்கிறது என்று தானே அர்த்தம்.

அவர்கள் பேசியதால்தான் நாங்களும் பேச வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டோம். அவர்கள் பேசும் பொழுது நாங்கள் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியுமா?” என கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து அறப்போர் இயக்கம் குற்றச்சாட்டு தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அமைச்சர்,

“பொறுப்பு அமைச்சர் என்ற வகையில் அமைச்சர் சரத்குமார் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்கலாம். இது தொடர்பாக விசாரணை செய்வதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.

பருவமழை தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வு கூட்டங்களுக்கு மேயர் மற்றும் துணை மேயருக்கு அழைப்பு விடுக்காதது ஏன்? என்ற கேள்விக்கு பதிலளித்த நிர்மல் குமார்,

“இது துறை ரீதியான ஆய்வுக் கூட்டமே தவிர ஒவ்வொருவருக்கும் அழைப்பு கொடுப்பதற்கு கல்யாண வீடு அல்ல. துறை சார்ந்த ஆய்வு கூட்டங்கள் நடக்கும்பொழுது அவர்களுக்கு அழைப்பு விடுக்க வேண்டிய தேவையில்லை. அதே நேரத்தில் மற்ற நிகழ்ச்சிகளுக்கு அவர்களுக்கான அழைப்பு விடுக்கப்படுகிறது” என பதிலளித்தார்.