முதல்வர் விஜய்யே வந்து பிரச்சாரம் செய்தாலும் மதுராந்தகத்தில் திமுக வெற்றி வாகை சூடும்
முதல்வர் விஜய்யே வந்து பிரச்சாரம் செய்தாலும் மதுராந்தகத்தில் திமுக வெற்றி வாகை சூடும் - வேட்பாளர் பரந்தாமன் நம்பிக்கை
மதுராந்தகத்தில் எத்தனை முனை போட்டிகள் வந்தாலும் திராவிட முன்னேற்ற கழகம் வெற்றி வாகை சூடும் என்று வேட்பாளர் பரந்தாமன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
Published : September 15, 2026 at 3:29 PM IST
செங்கல்பட்டு: முதலமைச்சர் விஜய் வந்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டாலும் மதுராந்தகம் தொகுதி வாக்காளர்கள், இந்த முறை அவர்களுக்கு தக்க பாடம் கற்பிப்பார்கள் என்று அந்த தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்துள்ள திமுக வேட்பாளர் பரந்தாமன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்ற பொதுத்தேர்தலில், மதுராந்தகம் (தனி) தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட மரகதம் குமரவேல் வெற்றி பெற்றார். தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அவர், தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்து விட்டு தவெகவில் இணைந்தார். அவருடைய ராஜிநாமா ஏற்கப்பட்டதால், மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து, மதுராந்தகம் தொகுதிக்கு அக்டோபர் மாதம் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 9ஆம் தேதி தொடங்கியது.
இந்த இடைத்தேர்தலில் திமுக சார்பில், மூத்த வழக்கறிஞரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான பரந்தாமன் போட்டியிடுகிறார். அவர், இன்று மதுராந்தகத்தில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து, தொண்டர்கள் புடைசூழ ஊர்வலமாக சென்று, வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் நரேந்திரனிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
மதுராந்தகம் தொகுதியில் போட்டியிடுவதற்கு இதுவரை 4 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்த நிலையில், தற்போது பிரதான கட்சியான திமுக சார்பில் வேட்பாளர் பரந்தாமன் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பரந்தாமன் பேசுகையில், "மதுராந்தகம் சட்டமன்ற தொகுதியில் ஐந்து முனை போட்டி நிலவுகிறது. ஆனால் எத்தனை முனை போட்டிகள் வந்தாலும் திராவிட முன்னேற்ற கழகம் வெற்றிவாகை சூடும். முதலமைச்சர் விஜய் வந்து தேர்தல் பிரச்சாரம் செய்தாலும், மதுராந்தகம் வாக்காளர்கள், அவர்களுக்கு இந்த முறை தக்க பாடம் கற்பிப்பார்கள். நம்பிக்கையான சட்டமன்ற உறுப்பினர் வரவேண்டும் என்பதற்காக வாக்காளர்கள் திமுகவுக்கு வாக்களிக்க வேண்டும். கொள்கை மீதும், தலைமை மீதும், மக்கள் மீதும் பிடிப்பாக இருப்பவர்கள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வாக்களித்த மக்களை விட்டுவிட்டு வேறு கட்சிக்கு போக மாட்டார்கள்" என்று தெரிவித்தார்.