புதிய தலைமை செயலகத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு! கருப்பு கொடியேற்றிய மீனவர்கள்
சென்னை: பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் அமைக்கப்படும் என்ற அரசின் முடிவுக்கு எதிராக, சென்னை, புறநகர் மாவட்டங்களில் மீனவர்கள் படகுகளிலும், தங்கள் வீடுகளிலும் கருப்பு கொடி ஏற்றி போராட்டம் நடத்தினர். அரசாணையை அரசு திரும்ப பெறாவிட்டால், போராட்டத்தை தீவிரப்படுத்துவது என, அனைத்து மீனவ கிராமத்தினர் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
சென்னை தலைமை செயலகத்தில் இடநெருக்கடி உள்ளதால், பட்டினப்பாக்கம் பகுதியில், 1,200 கோடி ரூபாயில், புதிய தலைமை செயலகம் அமைக்கப்படும் என, தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது.
புதிய தலைமை செயலகம் அமையும் பகுதி நிலத்தை வகை மாற்றம் செய்ய, சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமமான சி.எம்.டி.ஏ., அப்பகுதி மக்களிடம் கருத்து கேட்பு அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.
இந்நிலையில், புதிய தலைமை செயலகத்தால், தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்; வீடுகளை காலி செய்ய வேண்டிய சூழல் வரும் எனவும் கூறி, மீனவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இது தொடர்பாக, எண்ணுார் நெட்டுக்குப்பம் முதல் இ.சி.ஆர்., நைனார் குப்பம் வரையிலான அனைத்து மீனவ கிராம நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், பட்டினப்பாக்கத்தில் நேற்று நடந்தது. இதில், 300க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். கூட்டத்தில், போராட்டத்தை தீவிரப்படுத்துவது குறித்து, ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.
* பட்டினப்பாக்கத்தில் புதிதாக தலைமை செயலகம் அமைக்கப்படும் என்ற அரசாணையை திரும்ப பெற வேண்டும்
* கடந்த 1956 - 57ல் ஒதுக்கப்பட்ட முள்ளிக் குப்பம் மற்றும் முள்ளிமாநகர் நிலத்தை, மீனவர் குடியிருப்பு பகுதியாக உடனே பதிவு செய்ய வேண்டும்
* மீனவ மக்களின் வாழ்வாதார உரிமையையும், லுாப் சாலையில் நடக்கும் மீன் விற்பனை தொழிலையும் பாதுகாக்க, இக்கடற்கரையை, 'மீன்பிடி தொழில் பாதுகாப்பு மண்டலம்' என, அறிவிக்க வேண்டும்
* இந்த கோரிக்கைகளை அரசு ஏற்காவிட்டால், அனைத்து மீனவ கிராம மக்களையும் ஒன்று திரட்டி, பூர்வீக நில உரிமையை பாதுகாக்கும் வகையில், மிகப்பெரிய அளவில் போராட்டம் நடைபெறும். இவ்வாறு, கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முன்னதாக, பட்டினப்பாக்கத்தில் புதிதாக தலைமை செயலகம் அமைக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நேற்று, மீனவர்கள் தங்கள் படகுகளிலும், வீடுகளிலும் கருப்பு கொடி ஏற்றியிருந்தனர்.