யாரையும் சார்ந்தது இல்லை.. சர்ச்சை பேச்சுக்கு முற்றுப்புள்ளி.. விஜய்சேதுபதி கொடுத்த விளக்கம்
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசனில் நடிகர் விஜய் சேதுபதி பேசிய கருத்துகள், சமூக வலைதளங்களிலும் கோலிவுட் வட்டாரத்திலும் கடந்த சில நாட்களாக மிகப்பெரிய புயலைக் கிளப்பியிருந்த நிலையில், அதற்கு தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியிலேயே நேரடியாக விஜய் சேதுபதி விளக்கம் அளித்துள்ளார்.
விஜய் சேதுபதி: கடந்த வாரம் ஒளிபரப்பான பிக் பாஸ் எபிசோடில், தலைவர் மற்றும் தலைமை பண்பு குறித்து விஜய் சேதுபதி பேசினார். அதில், லீடர் என்றால் என்ன தெரியுமா? லீடர்ஷிப்னா என்னன்னு புரியாமல், தலைமை பொறுப்பு குறித்து அவர் பேசிய கருத்துகள், தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்யை மறைமுகமாக விமர்சிப்பது போல இருப்பதாக நெட்டிசன்கள் கடுமையாக சாடினர்.
அட்லீ தாக்கு: இதனை தொடர்ந்து நடைபெற்ற 'பத்தா' திரைப்பட இசை வெளியீட்டு விழாவில், இதுபற்றி பேசுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், விஜய் சேதுபதி தளபதி விஜய்யுடனான தனது நட்பை பற்றி மட்டுமே பேசியிருந்தார். ஆனால், படத்தின் தயாரிப்பாளரும் இயக்குநருமான அட்லீ, விஜய் அண்ணா அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறார். சோசியல் மீடியால் அவரு அவர சொல்றாரு, இவரு இவர சொல்றாருனு பல விஷயத்தை சொல்லுவாங்க எதுவாக இருந்தாலும் நேரடியாக சொல்லுங்க என விஜய்சேதுபதிக்கு மறைமுகமாக பதிலடி கொடுத்து இருந்தார்.
விளக்கம்: இந்நிலையில், இந்த விவாதம் மேலும் பெரு வெடிப்பாக மாறுவதை தவிர்க்கும் பொருட்டு, வெள்ளிக்கிழமை நடைபெற்ற பிக் பாஸ் படப்பிடிப்பிலேயே விஜய் சேதுபதி இதை பற்றி திட்டவட்டமாகப பேசியுள்ளார். தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் அவர் கூறியதாவது, இந்த வீட்டில் நாங்கள் பேசுகின்ற கருத்துகள் அனைத்தும் இந்த வீட்டில் இருக்கும் போட்டியாளர்களுக்கும் எங்களுக்குமானது மட்டுமே. இதை வெளியே இருக்கும் யாரையும், எந்த அமைப்பையும் சார்ந்து கொடுக்கவில்லை என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவித்துக் கொள்கிறோம். இதை நான் சொல்லாமலேயே உங்களுக்கெல்லாம் புரியும் என்று நினைத்தேன். இதை கடந்த வாரமே சொல்லியிருக்க வேண்டும்... ஆனால், சொல்ல வேண்டிய தேவை இப்போது ஏற்பட்டுவிட்டது. அதனால்தான் சொல்கிறோம் என விஜய் சேதுபதி பெரும் சர்ச்சைக்க முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.