📅 Sunday, 20 September 2026 IST | புரட்டாசி 4, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema September 20, 2026 05:03 PM

முதல்வர் விஜய் உலகப் பொருளியல் மன்றத்தில் பங்கேற்பு

முதல்வர் விஜய் உலகப் பொருளியல் மன்றத்தில் பங்கேற்பு

சென்னை: சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உலக பொருளியல் கருத்தரங்கு கூட்டத்தில் தமிழக முதல்வர் விஜய் பங்கேற்கவுள்ளதாக அதிகாரபூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தமிழகத்தை 2036ஆம் ஆண்டுக்குள் 1.5 டிரில்லியன் டாலர் பொருளியலாக மாற்றுவதை இலக்காகக் கொண்டு தமிழக அரசு தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது.

உலகளாவிய முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில், தவெக ஆட்சிப் பொறுப்பேற்ற முதல் 100 நாட்களில் 104 நிறுவனங்களுடன் ரூ.1,02,514 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதன் தொடர்ச்சியாக, செப்டம்பர் 10 முதல் 17ஆம் தேதி வரை லண்டன் பயணம் மேற்கொண்ட முதல்வர் விஜய், அங்கு முன்னணி தொழில் நிறுவனங்களுடன் ரூ.15,300 கோடி முதலீடுகளுக்கான ஒப்பந்தங்களை மேற்கொண்டார்.

இந்நிலையில், சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் ஜனவரி 18 முதல் 22ஆம் தேதி வரை நடைபெறவுள்ள உலகப் பொருளியல் கருத்தரங்கு ஆண்டுக் கூட்டத்தில் பங்கேற்க முதல்வர் திட்டமிட்டுள்ளார்.

நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளின் அரசு பிரதிநிதிகளும், 1,000க்கும் மேற்பட்ட அனைத்துலக முன்னணி நிறுவனங்களின் தலைவர்களும் பங்கேற்கும் இந்த மாநாட்டில், தமிழகத்திற்கு மேலும் பெருமளவிலான வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் முதல்வர் விஜய் கலந்துகொள்ளவிருப்பதாகத் தலைமைச் செயலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.