24H பார்சிலோனா கார் பந்தயம்.. நடிகர் அஜித் குழு 2வது இடம் பிடித்து அசத்தல்
24H பார்சிலோனா கார் பந்தயம்.. நடிகர் அஜித் குழு 2வது இடம் பிடித்து அசத்தல்
பார்சிலோனா: 24H கிரெவென்டிக் தொடரின் ஒரு பகுதியான 24H பார்சிலோனா பந்தயத்தில், அஜித் ரெட்ஆண்ட் ரேசிங் குழு 2வது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது. பெல்ஜியத்தைச் சேர்ந்த ரெட்ஆண்ட் ரேசிங் மற்றும் அஜித் குமார் ரேசிங் ஆகியவற்றின் கூட்டணியில் இக்குழு உருவாக்கப்பட்டுள்ளது. சர்வதேச பந்தயங்களில் பங்கேற்பதற்காக அஜித்தின் பெயரிலான இந்த ரேசிங் குழு, ரெட்ஆண்ட் ரேசிங் உள்ளிட்ட பிற சர்வதேச குழுக்களுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.
24 மணி நேரம் நடைபெறும் இந்த பந்தயத்தில், அதிக தூரம் யார் காரை இயக்கினார்களோ, அவர்களே வெற்றியாளர்களாக அறிவிக்கப்படுவார். இந்த பந்தயத்தில் மொத்தம் 3 விதமான கார் பங்கேற்கும். இதில் அஜித்குமார் இயக்கிய GT3 Pro-am கார் பிரிவில் 2வது இடம் பிடித்து அசத்தியது. ஒட்டுமொத்தமாக இந்த பந்தயத்தில் 5வது இடத்தை பிடித்தது.
இந்த வெற்றியைக் கொண்டாடும் புகைப்படங்களை அஜித்தின் பிஆர்ஓ சுரேஷ் சந்திரா சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார். அதில் நடிகர் மற்றும் தொழில்முறை பந்தய வீரரான அஜித், தனது ரெட்ஆண்ட் ரேசிங் சக வீரர்களுடன் வெற்றியைத் தேசியக் கொடியுடன் கொண்டாடும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. அஜித்தின் அதிகாரப்பூர்வ சமூக ஊடகக் குழு, "தேசத்திற்கு பெருமை சேர்க்கும் தருணம்! உலக அரங்கில் இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார்!" என்று இதனைப் பாராட்டியுள்ளது.
கடந்த ஆண்டு அறிமுகமானதில் இருந்து, துபாய் ஆட்டோட்ரோம், இத்தாலியின் முஜெல்லோ சர்க்யூட், பெல்ஜியத்தின் சர்க்யூட் டி ஸ்பா-பிரான்கார்சாம்ப்ஸ் மற்றும் ஸ்பெயினின் சர்க்யூட் டி பார்சிலோனா-கேடலூனியா உள்ளிட்ட 24H கிரெவென்டிக் தொடர்களில் அஜித் குமார் ரேசிங் பலமுறை போடியம் பினிஷ் சாதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த வாரம் சில்வர்ஸ்டோனில் நடைபெற்ற கார் பந்தயத்தை முதலமைச்சர் விஜய் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். அந்த பந்தயத்தில் அஜித் 38வது இடத்தை பிடித்த நிலையில், அதனை பலரும் கேலி கிண்டல் செய்தனர். அதற்கு பதிலடி தரும் விதமாக தற்போது 2வது இடத்தை தங்களது பிரிவில் நிறைவு செய்துள்ளனர்.
தனது ரேசிங் ஆர்வத்தைத் தொடர்ந்து, அஜித் தனது அடுத்த திரைப்படமான டேர்டெவில் படப்பிடிப்பில் நவம்பர் மாதம் முதல் பங்கேற்க உள்ளார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு நவம்பர் 2, திங்கட்கிழமை அன்று தொடங்கும் என்று தயாரிப்பு தரப்பு அறிவித்துள்ளது. 'குட் பேட் அக்லி' படத்தைத் தொடர்ந்து, இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனுடன் அஜித் மீண்டும் இணையும் படமாக இது அமையவுள்ளது. அஜித்தின் மனைவி ஷாலினி, தனது பிரேவ்ஹார்ட்ஸ் புரொடக்ஷன் பேனரின் கீழ் தயாரிக்கும் முதல் படம் இதுவாகும்.