WTC புள்ளிப்பட்டியலில் இந்தியாவுக்கு அடிச்ச லக்! வெஸ்ட் இண்டீஸ் வரலாற்று வெற்றி! சரிந்த இலங்கை
WTC புள்ளிப்பட்டியலில் இந்தியாவுக்கு அடிச்ச லக்! வெஸ்ட் இண்டீஸ் வரலாற்று வெற்றி! சரிந்த இலங்கை
ஆன்டிகுவா: இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், வெஸ்ட் இண்டீஸ் அணி இன்னிங்ஸ் மற்றும் 217 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஆன்டிகுவாவில் உள்ள நார்த் சவுண்டில் இருக்கும் சர் விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில், முதல் இன்னிங்ஸில் 318 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்த இலங்கை அணி, வெறும் 101 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து சுருண்டது.
வெஸ்ட் இண்டீஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் கெமர் ரோச் 11 ஓவர்களில் 51 ரன்கள் வழங்கி 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். மற்றொரு வேகப்பந்து வீச்சாளரான ஜெய்டன் சீல்ஸ் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அணியின் வெற்றியை உறுதி செய்தார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் மாற்றம்
இலங்கை அணிக்கு எதிரான இந்த வெற்றி, 2025-27 ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) சைக்கிளில் வெஸ்ட் இண்டீஸ் அணி பெறும் முதல் வெற்றியாகும். இந்த சைக்கிளில் இதுவரை 9 போட்டிகளில் விளையாடியுள்ள கரீபியன் அணி, 1 வெற்றி, 1 டிரா மற்றும் 7 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் எட்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
மறுபுறம், இலங்கை அணிக்கு நடப்பு 2025-27 WTC சுழற்சியில் இதுவே முதல் தோல்வியாகும். இதுவரை 3 போட்டிகளில் விளையாடி 1 வெற்றி, 1 டிரா மற்றும் 1 தோல்வியைப் பெற்றுள்ள இலங்கை அணி, 44.44 சதவீத புள்ளிகளுடன் (PCT) புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தில் இருந்து 6வது இடத்திற்குச் சரிந்துள்ளது.இலங்கை அணியின் இந்த சரிவு, இந்திய அணி 48.15 சதவீத புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் ஒரு இடம் முன்னேறி ஐந்தாவது இடத்தை அடைவதற்கு வழிவகுத்துள்ளது.
புதிய WTC 2025-27 புள்ளிப்பட்டியல்:
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலின்படி, ஆஸ்திரேலிய அணி 87.50 சதவீத புள்ளிகளுடன் (PCT) முதலிடத்திலும், தென்னாப்பிரிக்கா 75.00 சதவீத புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளன. நியூசிலாந்து அணி 66.67 சதவீத புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும், வங்கதேசம் 58.33 சதவீத புள்ளிகளுடன் நான்காவது இடத்திலும் நீடிக்கின்றன.
இலங்கை வீழ்ச்சியடைந்ததைத் தொடர்ந்து, இந்திய அணி 48.15 சதவீத புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது. இலங்கை 44.44 சதவீத புள்ளிகளுடன் ஆறாவது இடத்திற்கும், இங்கிலாந்து அணி 26.39 சதவீத புள்ளிகளுடன் ஏழாவது இடத்திற்கும் சரிந்துள்ளன. இந்த போட்டியில் அபார வெற்றி பெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணி 14.81 சதவீத புள்ளிகளுடன் எட்டாவது இடத்தில் இருக்க, பாகிஸ்தான் அணி வெறும் 8.33 சதவீத புள்ளிகளுடன் பட்டியலின் கடைசி இடமான ஒன்பதாவது இடத்தில் உள்ளது.
2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வெற்றியாளரான ஆஸ்திரேலிய அணி, 8 போட்டிகளில் 7 வெற்றிகளுடன் 87.50 சதவீத புள்ளிகளைப் பெற்று புள்ளிப்பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது. நடப்பு சாம்பியனான தென்னாப்பிரிக்க அணி 4 போட்டிகளில் 3 வெற்றிகளுடன் 75.00 சதவீத புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது.
அதே நேரத்தில், ஷான் மசூத் தலைமையிலான பாகிஸ்தான் அணி விளையாடிய 4 போட்டிகளில் 3 தோல்விகளைத் தழுவியதுடன், Slow over-rate காரணமாக 8 புள்ளிகள் அபராதமாக விதிக்கப்பட்டதால், புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்திற்கு (9வது இடம்) தள்ளப்பட்டுள்ளது.