📅 Tuesday, 22 September 2026 IST | புரட்டாசி 6, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics September 22, 2026 01:03 AM

தவெகவுக்கு எதிராக கொதித்தெழுந்த ஸ்டாலின்

தவெகவுக்கு எதிராக கொதித்தெழுந்த ஸ்டாலின்

தவெகவுக்கு எதிராக கொதித்தெழுந்த ஸ்டாலின் - இடைத்தேர்தலில் எதிரொலிக்குமா?

"திமுக தந்தது ரியல் ஆட்சி! இவர்கள் நடத்துவது ரீல்ஸ் ஆட்சி. ஒருமுறை மக்கள் ஏமாந்திருக்கலாம். தொடர்ந்து ஏமாறுவார்கள் என்று நினைத்தால், ஏமாறப்போவது இப்போதைய முதலமைச்சர் தான்" என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

Published : September 20, 2026 at 7:01 PM IST

சென்னை: தமிழகம், இதுவரை கண்டிராத ஒரு இடைத்தேர்தலை சந்திக்கிறது. தேர்தலில் வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள், உடனே பதவியை ராஜிநாமா செய்துவிட்டு, மீண்டும் அதே தொகுதியில் வேட்பாளராக களமிறங்கும் வினோத சம்பவம் அரங்கேறி உள்ளது.

கடந்த ஏப்ரலில் நடந்த சட்டமன்ற பொதுத் தேர்தலில் ஆட்சியமைக்க தேவையான பெரும்பான்மை இடங்களை பெறாத தவெக, திமுக கூட்டணியில் அங்கம் வகித்து தேர்தலை சந்தித்த காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவை பெற்று ஆட்சி நடத்தி வருகிறது. தவெக கூட்டணி அரசுக்கு இடதுசாரிகள் ஆதரவு அளித்தாலும், அரசின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். குறிப்பாக, மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில், தவெகவுக்கு எதிராக திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சியைத் தொடர்ந்து இடதுசாரிகளும் களமிறங்கியுள்ளனர்.

எனவே, கூட்டணி கட்சிகளின் விமர்சனங்களுக்கு பதிலடியாகவும், தவெக அரசின் 100 நாள் ஆட்சியின் செயல்பாடுகளுக்கு அளிக்கும் மதிப்பீடாகவும் இந்த தேர்தலில் தவெக வெற்றி பெற்றாக வேண்டிய நிலையில் உள்ளது.

இதற்காக, மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் பிரச்சாரம் செய்வதற்கு தவெகவின் மூத்த அமைச்சர்கள், காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விசிக தலைவர் திருமாவளவன் என 40 பேர் கொண்ட நட்சத்திர பேச்சாளர் பட்டியலை தவெக வெளியிட்டுள்ளது. அதிமுகவும் இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்காக, நட்சத்திர பேச்சாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. ஆனால், திமுக இன்னும் நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலை வெளியிடவில்லை. இருப்பினும், திமுக முப்பெரும் விழாவில் தவெகவை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார்.

நடந்து முடிந்த தேர்தலில் இருபெரும் திராவிட கட்சிகளான அதிமுகவும், திமுகவும் தோல்வியை சந்தித்தாலும், கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தோல்வி அடைந்தது, கட்சியினருக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அதைத் தொடர்ந்து சட்டமன்றத்தில் தவெக அமைச்சர்கள் பேசும்போது, முந்தைய திமுக அரசின் செயல்பாடுகளை விமர்சித்துப் பேசினர். குறிப்பாக, அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் பெயரை குறிப்பிட்டு கடுமையாக விமர்சித்துப் பேசினார்.

தவெக அமைச்சர்களின் பேச்சுக்கு திமுக தரப்பில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் திமுக மூத்த தலைவர்கள் பதில் அளித்தாலும், அவை பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்ற கருத்து பொதுவாக நிலவுகிறது.

முதலமைச்சர் விஜய், தனது மேஜையில் முந்தைய திமுக அரசு தொடர்பாக மூன்று முக்கிய கோப்புகள் இருப்பதாக கூறியிருந்தார். அதைத் தொடர்ந்து, சட்டமன்றத்தில் காவல் துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பதிலுரை வழங்கி பேசிய முதலமைச்சர் விஜய், 1970-களில் அப்போதைய திமுக ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்ட வீராணம் கூட்டுக் குடிநீர் திட்டம் குறித்தும், அதில் ஊழல் நடைபெற்றதாக சர்க்காரியா கமிஷன் அறிக்கை அளித்தது குறித்தும் பேசினார். இதனால் அவையில் இருந்த திமுக உறுப்பினர்கள் கடுங்கோபம் அடைந்தனர்.

அதைத் தொடர்ந்து, 'எமர்ஜென்சி காலத்தில் திமுகவினர் 'மிசா' சட்டத்தை எதிர்கொண்டதாகக் கூறிக்கொள்ளும் கதைகளின் பின்னணி என்ன என்பது மக்களுக்கு நன்றாகவே தெரியும்' என்றும் முதலமைச்சர் விஜய் பேசினார்.

மிசா கைதை குறிப்பிட்டுப் பேசும்போது, தாடையைக் காண்பித்து முதலமைச்சர் விஜய் செய்த ஒரு சைகை, அவையில் பெரும் புயலைக் கிளப்பியது. சிறையில் மு.க.ஸ்டாலினின் தாடை எலும்பு உடைக்கப்பட்டதை கேலி செய்யும் விதமாகவே முதலமைச்சர் விஜய் சைகை செய்தார் என திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் கண்டனம் தெரிவித்தன.

மறுநாள், "எனது உடல்மொழி உள்நோக்கம் கொண்டதல்ல. யாருடைய தனிப்பட்ட உணர்வுகளையும் அல்லது வரலாற்றுத் தியாகங்களையும் காயப்படுத்தும் நோக்கம் எனக்கு இல்லை" என்று முதல்வர் விஜய் விளக்கம் அளித்திருந்தார்.

இருப்பினும், தவெக அரசுக்கு ஆதரவு தரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகிய கட்சிகளின் தலைவர்களும் முதலமைச்சரின் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

முதலமைச்சரின் பேச்சுக்கு பதில் அளித்து வீடியோ வெளியிட்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், "நீங்கள் சொல்வது சரிதான், அவசரநிலை காலத்தில் சிறையில் நடத்தப்பட்ட கடுமையான தாக்குதல்களால் என் தாடை எலும்பு உடைந்தது உண்மைதான்; அது வரலாற்றுத் தழும்பு" என்று அமைதியாக பதிலடி கொடுத்தார்.

சட்டமன்றத்தில் திமுகவையும், அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலினையும் தவெக அமைச்சர்களும் முதலமைச்சர் விஜய்யும் கடுமையாக விமர்சித்துப் பேசும் வேளையில், திமுக மூத்த தலைவர்களான எ.வ.வேலு, கே.என்.நேரு, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பதில் அளித்தார்கள்.

முதல்வரின் பேச்சுக்கு எதிராக திமுகவினர் ஆர்ப்பாட்டங்கள் நடத்தியபோதும், அவை வெகுஜனங்களின் மத்தியில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியதாக தெரியவில்லை. மேலும் உதயநிதி ஸ்டாலின், சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவராக சிறப்பாக செயல்பாட்டாலும், முதலமைச்சர் விஜய்யின் பேச்சை ஒப்பிடும்போது, உதயநிதி ஸ்டாலினின் செயல்பாடுகள் வெகுஜன மக்கள் மத்தியில் சென்றடைகிறதா என்ற கேள்வி பரவலாக உள்ளது.

இந்த சூழ்நிலையில்தான், சனிக்கிழமை நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவில், தவெகவுக்கு எதிராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கொதித்தெழுந்தார். "என் மிசா கைதை உங்கள் எவனுக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. என்னுடைய தியாகத்திற்கு மதிப்பெண் போட உங்கள் எவனுக்கும் தகுதி கிடையாது. என் மிசா வரலாற்றை, அண்ணன் சிட்டிபாபு தனது சிறை டைரியில் பதிவு செய்திருக்கிறார். அதுதான் காலத்தால் அழிக்க முடியாத கல்வெட்டு. அதுமட்டுமல்ல, சிறைச்சாலைச் சித்திரவதைகளைப் பற்றி விசாரிக்க, எம்.ஜி.ஆர் அமைத்த இஸ்மாயில் கமிஷனின் அறிக்கை இருக்கிறது.

சாட்சி எல்லாம் சொல்லி இருக்கிறேன். அனைவரும் வந்து சொன்னார்கள். படிக்கத் தெரிந்தவன் அதையெல்லாம் எடுத்துப் படிக்கட்டும். வாக்களித்த மக்கள் வாக்குறுதிகளைப் பற்றி கேட்டால், அவதூறு பரப்பி ரீல்ஸ் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இவர்கள் கட்சிக்கு நியாயமாக 'தமிழக வெற்றிக் கழகம்' என்று இல்லாமல், 'தமிழக ரீல்ஸ் கழகம்' என்றுதான் பெயர் வைத்திருக்க வேண்டும். தி.மு.க. தந்தது ரியல் ஆட்சி! இவர்கள் நடத்துவது ரீல்ஸ் ஆட்சி. ஒருமுறை மக்கள் ஏமாந்திருக்கலாம். தொடர்ந்து ஏமாறுவார்கள் என்று நினைத்தால், ஏமாறப்போவது முதலமைச்சர்தான்.

அவதூறுகளைப் பரப்பி, கொச்சையாகப் பேசி, திமுகவை அவமானப்படுத்தலாம், பலவீனப்படுத்தலாம் என்று நினைத்துப் பலர் செயல்படுகிறார்கள். இதையெல்லாம் 78 வருடங்களாக நாங்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்" என்று பேசினார்.

மேலும், "இன்றைக்கு தவெக ஆட்சியில் இரண்டே இரண்டுக்கு நடுவில்தான் போட்டியே... ஒன்று மின்வெட்டு! இன்னொன்று அரிவாள் வெட்டு. பட்டப்பகலில் கொலைகள், துப்பாக்கிச் சூடுகள், ஆளுங்கட்சியினரே போதைப்பொருட்களை விற்பனை செய்வது, பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடுவது என குற்றவாளிகளின் வேட்டைக்காடாக தமிழ்நாடு மாறியிருக்கிறது" என்று அவர் பேசினார்.

இதையும் படிங்க: ‘மிசா கைதை எவனுக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை; வட்டியோடு திருப்பித் தருவோம்’ - மு.க. ஸ்டாலின் அதிரடி

தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு தவெகவை பெரிய அளவில் விமர்சிக்காத மு.க.ஸ்டாலினின் நேற்றைய பேச்சு, திமுகவினருக்கே வியப்பை ஏற்படுத்தி உள்ளது மட்டுமின்றி. வெகுஜென மக்கள் மத்தியிலும் தாக்கத்தை ஏற்படுத்தியதாகவே தெரிகிறது. தவெகவுக்கு எதிராக, திமுக தலைவர் ஸ்டாலின் பொங்கி எழுந்து பேசியுள்ளது மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் எதிரொலிக்குமா என்ற கேள்வி அரசியல் அரங்கில் எழுந்துள்ளது.

அமைச்சர் பதிலடி

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் இந்த பேச்சு குறித்து அமைச்சர் ராஜ்மோகனிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, "பட்டிமன்ற பேச்சாளரான நான், சட்டமன்றத்தில் பேச ஆரம்பித்துவிட்டேன். ஆனால், முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின், பட்டிமன்ற பேச்சாளராக மாறிவிட்டார். ரைமிங்காக, எதுகை மோனையுடன் பேசிக் கொண்டிருக்கிறார். மக்களுக்கு யார் நல்லது செய்கிறார்கள் என்பதில்தான் போட்டி இருக்க வேண்டும். மூத்த அரசியல் தலைவரான அவர், அரசியல் லாபத்திற்காக அவ்வாறு பேசுகிறார்" என்று பதிலடி கொடுத்துள்ளார்.