தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு... வானிலை ஆய்வு மையம் தகவல்...
தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு... வானிலை ஆய்வு மையம் தகவல்...
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றும் நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று முதல் 15 ஆம் தேதி வரையும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக் கூடும். மேலும் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
16,17, 18,19 ஆகிய நான்கு நாட்களுக்கு மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.அதனைத் தொடர்ந்து தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில் வெப்பநிலை பொறுத்த வரையில் இன்று முதல் 16 ஆம் தேதி வரை தமிழகம் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகப்பட்ச வெப்பநிலை 2-4° செல்சியஸ் வரை உயரக்கூடும். சென்னை பொறுத்த வரையிலும் இன்று மற்றும் நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 38-39° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
இன்று தென்மேற்கு வங்கக்கடல், தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் மத்தியகிழக்கு வங்கக்கடலின் சில பகுதிகளில் மணிக்கு 45–55 கி.மீ. வேகத்தில், இடையிடையே 65 கி.மீ. வேகத்தில் சூறாவளிக்காற்று வீசக்கூடும். வடக்கு ஆந்திர கடலோரத்தை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளிலும் மணிக்கு 40–50 கி.மீ. வேகத்தில், இடையிடையே 60 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் இந்த கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.