📅 Friday, 10 July 2026 IST | ஆனி 26, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu July 10, 2026 11:33 AM

தமிழக அமைச்சர் மரிய‌ வில்சன் மீதான வழக்கு ஆகஸ்ட் 18

தமிழக அமைச்சர் மரிய‌ வில்சன் மீதான வழக்கு ஆகஸ்ட் 18

மரிய‌ வில்சன்

தனது சகோதரரை தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கு தொடர்பாக புதுச்சேரி நீதிமன்றத்தில், தமிழக அமைச்சர் மரிய வில்சன் இன்று ஆஜராகவில்லை.

புதுச்சேரி ஜே.எம்.1 கோர்ட்டில் இன்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மரிய வில்சன் தரப்பு உயர் நீதிமன்றம் வழக்கறிஞர் அஜித்குமார் ஆஜராகி சென்னை உயர் நீதிமன்றம் இந்த வழக்கில் மரிய வில்சன் ஆஜராக வேண்டாம் என்று விலக்கு அளித்த உத்தரவு நகலை சமர்ப்பித்தார்.

இதையடுத்து இந்த வழக்கை ஆகஸ்ட் 18-ம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.

தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன், கடந்த 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8 ஆம் தேதி புதுச்சேரி, எழில் நகரில் வசித்து வரும் அவரது சகோதரர் மரிய குலோத் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று மரிய குலோத், அவரது மனைவி கெரோலின் ஆகியோரை தாக்கியதாக லாஸ்பேட்டை போலீஸார் வழக்கு பதிவு செய்திருந்தனர்‌.

புதுச்சேரி முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள இந்த வழக்கில், குற்றப்பத்திரிகை நகலைப் பெற நேரில் ஆஜராக உத்தரவிட்ட போதும், மரிய வில்சன் தொடர்ந்து ஆஜராகாமல் இருந்து வந்தார்.

இதனால் ஜூலை 10-ம் தேதி கட்டாயமாக ஆஜராக வேண்டும் என மரிய வில்சனுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கை ரத்து செய்யக் கோரியும், நாளை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்களிக்கக் கோரியும் மரியவில்சன் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த மனு, நீதிபதி இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்த போது, குடும்பப் பிரச்சினை தொடர்பாக சமரசம் செய்ய தயாராக இருப்பதாக நிதியமைச்சர் மரிய வில்சன் சார்பாக மூத்த வழக்கறிஞர் எஸ். ஹாஜா மொய்தீன் கிஸ்தி ஆஜராகி வாதாடினார்.

இதை ஏற்று, உயர் நீதிமன்ற சமரசத் தீர்வு மையத்துக்கு வழக்கை அனுப்பி வைத்த நீதிபதி, ஜூலை 13-ம் தேதி அமைச்சர் மரிய வில்சன், அவரது தந்தை மற்றும் சகோதரர், சகோதரரின் மனைவி ஆகியோரை சமரச தீர்வு மையத்தில் ஆஜராக உத்தரவிட்டார்.

மரிய வில்சனுக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக்கூடாது என பாண்டிச்சேரி அரசு வழக்கறிஞர் ஜி ஜெயராணி ஆஜராகி கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, புதுச்சேரி நீதிமன்றத்தில் ஜூலை 10 நேரில் ஆஜராவதில் இருந்து அமைச்சருக்கு விலக்களித்து உத்தரவிட்டார்.