📅 Friday, 10 July 2026 IST | ஆனி 26, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Videos news July 10, 2026 12:34 PM

ரெயிலின் முதல் வகுப்பில் முதலிரவு அலங்காரம்: டிக்கெட் பரிசோதகர் பணியிடை நீக்கம்

ரெயிலின் முதல் வகுப்பில் முதலிரவு அலங்காரம்: டிக்கெட் பரிசோதகர் பணியிடை நீக்கம்

ரெயில் பெட்டியில் முதலிரவு அலங்காரம் அமைக்கப்பட்ட விவகாரத்தில், டிக்கெட் பரிசோதகர் (TTE) ஒருவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தென் மத்திய ரெயில்வே தெரிவித்துள்ளது.

மராட்டிய மாநிலம் ஜால்னா ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட எக்ஸ்பிரஸ் ரெயில் ஒன்றின் முதல் வகுப்பு ஏ.சி. தனியறை பெட்டி சொகுசு ஓட்டலின் 'ஹனிமூன் சூட்' போல அலங்கரிக்கப்பட்டு இருந்தது சமூகவலைதள வீடியோவில் வைரலாகி வருகிறது. அந்த 'கூபே' அறையின் கூரையில் சிவப்பு மற்றும் வெள்ளை நிற பலூன்களாலும், இருக்கைகளில் இதயம் போன்று ரோஜா இதழ்களாலும், அறையின் பிற பகுதிகள் மலர் மாலைகள் மற்றும் மலர்களாலும், ஏறும் படிக்கட்டுகளில் செயற்கை விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தன.

புதுமண தம்பதி

ஆனால் அதில் பயணித்தவர்கள் யார்? என்ற விவரங்கள் தெரியவில்லை. இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து, ஓடும் ரெயிலில் இப்படி அலங்காரம் செய்ய அனுமதி உண்டா? என்ற விவாதம் சமூக வலைத்தளங்களில் எழுந்தது. மேலும் சிலர் கடுமையாக விமர்சித்தும் கருத்துகளை பதி விட்டு இருந்தனர். இதற்கு ரெயில்வே அதிகாரிகளும் விளக்கம் அளித்திருப்பதாக சமூக வலைதளங்களில் செய்திகள் உலா வருகின்றன.

டிக்கெட் பரிசோதகர் சஸ்பெண்ட்

இந்த நிலையில், நந்திகிராம் எக்ஸ்பிரஸ் ரெயிலின் முதல் வகுப்பு பெட்டியில் முதலிரவு அலங்காரம் அமைக்கப்பட்ட விவகாரத்தில், டிக்கெட் பரிசோதகர் (TTE) ஒருவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தென் மத்திய ரெயில்வே தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக தென் மத்திய ரெயில்வே நிர்வாகம் மேலும் தெரிவித்து இருப்பதாவது;

நந்திகிராம் எக்ஸ்பிரஸ் ரெயிலில் கடந்த 6-ந்தேதி பயணம் செய்த ஒரு தம்பதியினர், தாங்கள் பயணித்த பெட்டியை அலங்கரிப்பாளர் ஒருவரை கொண்டு முதலிரவு அலங்காரம் செய்திருக்கின்றனர். ரெயில் பெட்டிக்குள் அலங்கரிப்பாளர் நுழைந்தது அனுமதியற்ற செயல். இது ஒரு தீவிரமான விதிமீறல். இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட டிக்கெட் பரிசோதகர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும், இது குறித்து துறைரீதியான விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. விசாரணையின் அடிப்படையில் பொறுப்பானவர்கள் மீது தகுந்த ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது