Idhayam Murali Review: இதயம் முரளி விமர்சனம்.. அதர்வா கடைசி வரை காதலை சொன்னாரா இல்லையா?
சென்னை: ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்து இயக்கியுள்ள இதயம் முரளி படம் இன்று உலகம் முழுவதும் வெளியானது. படத்தின் டைட்டில் முதல் டிரைலர் வரை அனைத்துமே ஃபீல் குட்டாக இருந்த நிலையில், படமும் அந்தளவுக்கு குட்டாக இருக்கும் என எதிர்பார்த்த நிலையில், படம் எப்படி இருந்தது என்பது குறித்த விரிவான விமர்சனத்தை இங்கே பார்க்கலாம் வாங்க..
இந்த ஆண்டு பராசக்தி படத்தில் அதர்வா சிவகார்த்திகேயனுக்கு தம்பியாக போராளியாக நடித்து மாஸ் பண்ணியிருந்தார். ஆனால், அப்படியே முற்றிலும் அமைதியாக கண்ணிலேயே காதல் சொல்லும் அளவுக்கான ஒரு கதாபாத்திரத்தை ஏற்று இந்த படத்தில் நடித்துள்ளார்.
அப்பா முரளியின் இதயம் படத்தை போல இதயம் முரளி அவருக்கு அமைந்ததா? ப்ரீத்தி முகுந்தனின் ட்விஸ்ட், கயாடு லோஹர் காதல், மாளவிகா மோகனன் சர்ப்ரைஸ் என்ட்ரி, கதை கேட்ட ஃபகத் ஃபாசில் ஆவேஷமாக கடைசியில் என்ன பண்ணாருன்னு பார்ப்போம் வாங்க.
இதயம் முரளி கதை: மனசுக்குள்ளேயே காதலை பூட்டி வைத்துக் கொண்டு வெளியே சொல்ல முடியாமல் தவிக்கும் ஏகப்பட்ட ஒன் சைடு லவ்வர்களுக்கான படமாகவே இதயம் முரளி படத்தை ஆகாஷ் பாஸ்கரன் இயக்கியுள்ளார். அப்பா, அம்மா இல்லாத இதயாவை (அதர்வா முரளி) அவரது மாமா நட்டி நட்ராஜ் எடுத்து வளர்க்கிறார்.
முத்தம் கொடுத்தால் குழந்தை பிறந்து விடும் என பள்ளிப் பருவத்தில் மாணவர்கள் விளையாட்டாக சொல்ல டீச்சர் ஜோனிதா காந்தி இவருக்கு கிஸ் கொடுப்பதால் அவருக்கு குழந்தை பிறந்து விடும் என நினைக்கும் ஆரம்பக் காட்சியில் இருந்தே படம் 90ஸ் உருட்டுகளுடன் தொடங்குகிறது.
அதன் பின்னர் பள்ளியில் படிக்கும் மாணவராக இருக்கும் போது சாம் (ப்ரீத்தி முகுந்தன்) உடன் காதல் ஏற்படுகிறது. டியூஷன், டென்னீஸ் கோர்ட் என அவரை பார்க்க அலையோ அலை என அலைகிறார் நம்ம இதயா. காதலை சொல்லலாம் என சாமின் பிறந்தநாள் பார்ட்டிக்குச் செல்லும் போது அங்கே ஒரு எதிர்பாராத ட்விஸ்ட் காத்திருக்க காதலை சொல்லவில்லை.
அதன் பின்னர், கல்லூரி காலத்தில் அம்முவை (கயாடு லோஹர்) சந்திக்கிறார். அவருடனும் நெருங்கி பழகும் இதயா அந்த ரயில் செல்லும் இடைவேளை காட்சியில் காதலை சொன்னாரா? இல்லையா? அதன் பின்னர் அமெரிக்காவுக்கு ஏன் சென்றார்? மாளவிகா மோகனன் அங்கே இருந்து திடீரென வந்தார். ஃபகத் ஃபாசிலின் வேலை என்ன என்பது தான் இந்த படத்தின் கதை.
படம் எப்படி இருக்கு?: ஏகப்பட்ட செலவுகளை செய்து நல்ல ரிச் லுக்கில் படத்தைக் கொடுத்துள்ளார் ஆகாஷ் பாஸ்கரன். ஆரம்பத்தில் குழந்தைப் பருவ காட்சிகளின் கலர் டோன் எல்லாம் ஹாலிவுட் படம் பார்த்தது போல இருந்தது. அதர்வாவை தாண்டி ப்ரீத்தி முகுந்தன், கயாடு லோஹர், மாளவிகா மோகனன், ராம்கி, நிஹாரிகா, தமன், நட்டி நட்ராஜ், பகத் ஃபாசில், பரிதாபங்கள் சுதாகர், டிராவிட் செல்வம், ரக்ஷன் என நட்சத்திர பட்டாளமே படத்தில் நடித்துள்ளனர்.
பல்வேறு காலக்கட்ட வாழ்க்கையை படமாக்கிய விதம் அழகாக உள்ளது. ஆனால், எமோஷன் காட்சிகள் தான் படத்தில் பெரிதாக ஒர்க்கவுட் ஆகவில்லை. படம் இப்படித்தான் சென்று இப்படித்தான் முடியும் என்பதும் தெளிவாக தெரிகிறது. ஜீன்ஸ், இதயம், அலைபாயுதே என ஏகப்பட்ட படங்களின் பாதிப்பில் இயக்குநர் இந்த படத்தை எடுத்துள்ளார் என்பது காட்சிகளை பார்த்தாலே தெரிகிறது.
பிளஸ்: அதர்வா மற்றும் ப்ரீத்தி முகுந்தனின் நடிப்பு படத்துக்கு பெரிய பலமாக உள்ளது. மனோஜ் பரமஹம்சாவின் கேமரா ஒர்க் தான் படத்தை காஸ்ட்லியாக காட்டுகிறது. திருச்சி, மதுரை, சென்னை மற்றும் அமெரிக்கா, அங்கே நாசா, விண்வெளி என ஒவ்வொரு ஃப்ரேமும் அருமையாக உள்ளது. இதயா பாடல், இடைவேளையின் போது வரும் "பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா" பாடல் உள்ளிட்டவை படத்துக்கு பலமாக அமைந்துள்ளது. சுதாகரின் காமெடி காட்சிகள் சில இடங்களில் சிரிக்கவும் வைக்கின்றன.
மைனஸ்: தமன் இசை படத்துக்கு பலமாக இருந்தாலும், காதல் படங்கள் என்றாலே பாடல்கள் ரசிகர்களை கவர வேண்டும். பல பாடல்களில் அப்படியே தெலுங்கு வாடை அடிக்கிறது. மேலும், ஒரு காட்சி நல்லா இருக்குன்னு பார்த்தால், அடுத்த காட்சி டல்லான காட்சியையும் மேம்போக்காக காட்சியாகவும் வைத்து இயக்குநர் ஆகாஷ் பாஸ்கரன் பல இடங்களில் சோதித்து எடுக்கிறார். அதர்வாவுக்கு இந்த படத்தில் சண்டைக் காட்சிகளே தேவையில்லை. ஆனால், தேவையில்லாமல் 2 சண்டைக் காட்சிகளை திணித்தது போலவே உள்ளது. கயாடு லோஹருக்கு அவங்க அப்பா செல்போனில் கால் பண்றாருன்னு சொல்லும் அதர்வா ஏன் மீண்டும் அவருக்கு போன் கூட செய்து பேசவில்லை என ஏகப்பட்ட கேள்விகளும் எழத்தான் செய்கின்றன. அதர்வாவுக்கு சூப்பர் ஹிட் படமாக இந்த இதயம் முரளி அமைந்திருக்க வேண்டும். ஆனால், ஏதோ மிஸ் ஆகும் ஃபீலிங் கடைசி வரை இருப்பது மைனஸ் ஆக மாறியுள்ளது.