தமிழ் இலக்கியத்தின் கரிசல் குரல் மௌனம்... பூமணி மறைவுக்கு அரசு மரியாதை
தமிழ் இலக்கியத்தின் கரிசல் குரல் மௌனம்... பூமணி மறைவுக்கு அரசு மரியாதை
சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளரும், தமிழ் இலக்கிய உலகின் குறிப்பிடத்தக்க படைப்பாளருமாக பூலித்துரை மாணிக்கவாசகம் எனும் பூமணி இறப்புக்கு தமிழகத்தின் முதலமைச்சர் ஜோசப் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.
தமிழ் இலக்கிய உலகின் முன்னணி எழுத்தாளரும் சாகித்ய அகாடமி விருது பெற்றவருமான பூமணி (79) உடல்நலக்குறைவு காரணமாக நேற்று (12.07.2026) இரவு 11 மணி அளவில் சென்னையில் காலமானார்.
இவர் இன்றைய தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகருக்கு மேற்கே உள்ள ஆண்டிபட்டி எனும் ஊரில் பிறந்தவர் பூமணி. சிறுவயதிலிருந்து தமிழ் இலக்கிய உலகில் பல்வேறு படைப்புகளை கொடுத்தவர். 1971ல் பூமணியின் முதல் சிறுகதை தொகுப்பு “அறுப்பு” என்னும் சிறுகதை தாமரை இதழில் வெளிவந்தது. அதனைத் தொடர்ந்து நொறுங்கல்கள், நல்லநாள், இலக்கியச் சிந்தனை பரிசு, போன்ற சிறுகதைகள் தொகுப்புகளை படைத்துள்ளார்.
மேலும் அவர் படைத்த இலக்கியங்களுக்காக பல விருதுகளை பெற்றுள்ளார். அப்படி அக்னி விருது, திருவனந்தபுரம் தமிழ்ச் சங்க விருது, இலக்கிய பங்களிப்புக்கான 2011 ஆம் ஆண்டு விஷ்ணுபுரம் விருது, (அஞ்ஞாடி) என்னும் சிறப்பான புதினத்திற்கான 2014 இல் சாகித்திய அகாதமி விருது பெற்றவர்.
இவர் எழுதிய (வெக்கை நாவலை) அடிப்படையாக வெளிவந்த திரைப்படம் தான் அசுரன். கருவேலம்பூக்கள் ஆகியவை திரைப்படங்களாக வெளிவந்துள்ளது.இந்நிலையில் இவரின் மறைவுக்கு எழுத்தாளர்கள் வாசகர்கள் மற்றும் திரையுலகினர் தங்களின் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், பூமணி மறைவுக்கு முதலமைச்சர் விஜய் இரங்கல் தெரிவித்து வெளியிட்டுள்ள பதிவில், சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளரும், தமிழ் இலக்கிய உலகின் குறிப்பிடத்தக்க படைப்பாளருமான பூலித்துரை மாணிக்கவாசகம் எனும் பூமணி அவர்கள் காலமானார் என்ற செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது.
பூமணி அவர்கள் கரிசல் நிலத்தின் மண் வாசனையும், அடித்தட்டு மக்களின் வாழ்வின் நுட்பமான யதார்த்தங்களும், வரலாற்றின் ஆழமான சாட்சியங்களும் நிரம்பிய படைப்புகளின் மூலம் தமிழ் இலக்கியத்தை செழுமைப்படுத்திய முக்கியமான படைப்பாளி ஆவார்.
அவரது 'அஞ்ஞாடி' நாவலுக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றது, அவரது இலக்கிய ஆளுமைக்கு கிடைத்த உயரிய அங்கீகாரமாகும். மேலும், அவரது 'வெக்கை' நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவான 'அசுரன்' திரைப்படம், அவரது எழுத்தின் வீச்சை உலகறியச் செய்தது.
பூமணி அவர்களின் மறைவு தமிழ் இலக்கிய உலகத்திற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அவரது மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், தமிழ் இலக்கிய உலகத்தைச் சேர்ந்த அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.இலக்கியத் துறையில் பூமணி அவர்களின் பங்களிப்பைப் போற்றி அஞ்சலி செலுத்தும் வகையில், அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
அவரது உடல் சென்னையில் இருந்து கோவில்பட்டிக்கு கொண்டு செல்லப்பட்டு பூமணியின் இறுதிச்சடங்குகள் நாளை செவ்வாய்க்கிழமை நடைபெறும் என்று அவரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்