📅 Monday, 13 July 2026 IST | ஆனி 29, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema July 13, 2026 11:31 AM

தமிழ் சினிமா உலகின் ‘திரில்லர் தந்தை’ மிஷ்கின்

தமிழ் சினிமா உலகின் ‘திரில்லர் தந்தை’ மிஷ்கின்

தமிழ் சினிமா உலகின் ‘திரில்லர் தந்தை’ மிஷ்கின் - ‘ட்ரெயின்’ பட விழாவில் இயக்குநர் ராம் புகழாரம்

விஜய் போன்ற ஒரு மாஸ் ஹீரோ கதாநாயகனாக நடித்த மாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதி கவனம் பெறும் அளவிற்கு நடித்திருந்தார் என இயக்குநர் அமீர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

Published : July 13, 2026 at 10:35 AM IST

சென்னை: தமிழ் சினிமாவில் திரில்லர் உலகின் தந்தை என மிஷ்கினை கூறலாம் என இயக்குநர் ராம் புகழாரம் சூட்டியுள்ளார்.

கலைப்புலி தாணு தயாரிப்பில், மிஷ்கின் இயக்கத்தில், நடிகர்கள் விஜய் சேதுபதி, ஸ்ருதிஹாசன், நாசர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள ’ட்ரெயின்’ திரைப்படத்தின் இசை மற்றும் டீசர் வெளியீட்டு விழா, சென்னையில், தனியார் திரையரங்கில் நடைபெற்றது. இதில் படக்குழு மற்றும் திரைத்துறை சார்ந்த பல்வேறு முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் இயக்குநர் ராம் பேசுகையில், ”கடந்த ஆறு வருடங்களில் பல அவமானங்களையும், பழி சொற்களையும் தாங்கிக் கொண்டவர் இயக்குநர் மிஷ்கின் தான். தமிழ் சினிமாவில் திரில்லர் உலகின் தந்தை என மிஷ்கினை கூறலாம், ’நந்தலாலா’ திரைப்படத்தை தவிர அவர் இயக்கிய அனைத்து திரைப்படங்களும் திரில்லர் தான்” என்றார்.

நடிகர் விஜய் சேதுபதி பேசுகையில், ”படப்பிடிப்பு தளம் ஒரு திருமண நிகழ்வு போல கலகலவென்று இருக்கும் அதற்கு காரணம் இயக்குநர் மிஷ்கின் தான். தினமும் 2000 ரூபாய் செலவு செய்து, படப்பிடிப்பில் நன்றாக நடிக்கும் துணை நடிகருக்கு ஆயிரம் ரூபாயும், நல்ல தொழில்நுட்ப கலைஞருக்கு ஆயிரம் ரூபாயும், அவர் கொடுத்துள்ளார்” என தெரிவித்தார்.

இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் பேசுகையில், “மிஷ்கின் இயக்கத்தில் நடித்தது எனக்கு வித்தியாசமான அனுபவமாக இருந்தது. திரைப்பட இயக்கத்தில் இன்னும் இவ்வளவு விஷயங்கள் இருக்கிறது என்பது எனக்கு இந்த படத்தின் மூலமாக தெரிந்தது. சத்தமாக பேசினாலும், அவரை போன்று பாராட்டும் ஒருவர் யாரும் கிடையாது. ஆள் பார்ப்பதற்கு பெரிதாக இருந்தாலும், உள்ளத்தில் குழந்தை. நான் அவரிடம் நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டேன்” என்றார்.

நடிகரும் இயக்குநருமான சிங்கம் புலி பேசுகையில், ”கேமராவை படித்துவிட்டு தான் இயக்குநர் ஆனதாக மிஷ்கின் என்னிடம் கூறினார். கோயம்புத்தூரில் உள்ள அனைத்து வணிக வளாகங்களுக்கும் என்னை அழைத்துச் சென்று, மிஷ்கின் 4 லட்சத்திற்கு எனக்கு ஆடைகள் வாங்கி கொடுத்தார். அவரது கையில் நான் ஒரு கடிகாரம் வாங்க வேண்டும் என ஆசை” எனக் கூறினார்.

தொடர்ந்து நடிகர் யூகி சேது பேசுகையில், ”கமல்ஹாசன் படிப்படியாக முன்னேற்றினார், ரஜினி ஒரு படியிலேயே முன்னேறிவிட்டார். ரஜினிகாந்த் கண்டக்டர் ஆக இருந்த போது டபுள் விசில் கொடுத்தார். இன்று சிங்கிள் விசில் தமிழ்நாட்டை ஆண்டு கொண்டிருக்கிறது” என தெரிவித்தார்.

இயக்குநர் அமீர் பேசுகையில், “மிஷ்கின் தனக்கென ஒரு தனித்துவத்தை கொண்டுள்ளார். விஜய் போன்ற ஒரு மாஸ் ஹீரோ திரைப்படத்தில் விஜய் சேதுபதி கவனம் பெறும் அளவிற்கு ’மாஸ்டர்’ படத்தில் அவர் நடித்திருந்தார். அதே போல ’லியோ’ படத்தில் மிஷ்கினும் நடித்திருந்தார். தமிழ் சினிமாவில் டி ராஜேந்திரனுக்கு பிறகு அனைத்து துறைகளிலும் தடம் பதித்தவராக மிஷ்கின் உள்ளார். எவ்வளவு உயரத்துக்கு சென்றாலும், ஒரே மாதிரி பழகுவதற்கு விஜய் சேதுபதிக்கு நிகர் அவர் தான்” என கூறினார்.