📅 Saturday, 11 July 2026 IST | ஆனி 27, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu July 11, 2026 10:32 PM

பிரபல பின்னணி பாடகி ஜானகி காலமானார்

பிரபல பின்னணி பாடகி ஜானகி காலமானார்

பிரபல பின்னணி பாடகி ஜானகி காலமானார்

40,000-க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ள எஸ்.ஜானகி, 'தென்னிந்தியாவின் நைட்டிங்கேல்' என்று இசை ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுகிறார்.

Published : July 11, 2026 at 9:04 PM IST

Updated : July 11, 2026 at 9:43 PM IST

மைசூரு: பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி (வயது 88) மாரடைப்பால் மைசூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

யார் இந்த எஸ்.ஜானகி?

கடந்த 1938- ஆம் ஆண்டு ஆந்திரப் பிரதேச மாநிலம், குண்டூரில் பிறந்தவர் எஸ்.ஜானகி. தனது சிறு வயதிலேயே பாடத் தொடங்கிய எஸ்.ஜானகி, நாதசுர மேதை பைடிசாமி என்பவரிடம் முறையான இசைப் பயிற்சியை பெற்றார். பின்னர் சென்னைக்கு இடம்பெயர்ந்த அவர், திரைப்படத்துறையில் பணியாற்ற தொடங்கினார்.

கடந்த 1957- ஆம் ஆண்டு வெளியான 'விதியின் விளையாட்டு' என்ற திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த 'பெண் என் ஆசை பாழானது ஏனோ' என்ற பாடல் மூலம் தமிழ் திரையுலகில் பின்னணிப் பாடகியாக நுழைந்தார். அதனைத் தொடர்ந்து அவருக்கு தொடர்ந்து பல படங்களில் பாடும் வாய்ப்புக் கிட்டியது.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஆங்கிலம் உள்ளிட்ட 17 மொழிகளில் சுமார் 40,000-க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார். ஜப்பான், ஜெர்மன், பிரெஞ்சு உள்ளிட்ட மொழிகளிலும் பாடல்களைப் பாடியுள்ளார். தமிழ், தெலுங்கு மொழிகளில் பல பக்திப் பாடல்களைத் தாமே எழுதி இசையமைத்துப் பாடியுள்ளார். மேலும், 'தென்னிந்தியாவின் நைட்டிங்கேல்' என்று இசை ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்டு வந்தார்.

தேசிய விருதுகளை குவித்த ஜானகி

கடந்த 1976- ஆம் ஆண்டு தமிழில் வெளியான 'பதினாறு வயதினிலே' என்ற திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த 'செந்தூரப்பூவே செந்தூரப்பூவே' பாடலுக்காகவும், 1980- ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான 'ஒப்போல்' என்ற படத்தில் இடம்பெற்றிருந்த பாடலுக்காகவும், 1984- ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான 'சித்தாரா' என்ற படத்தில் இடம்பெற்றிருந்த பாடலுக்காகவும், 1992- ஆம் ஆண்டு தமிழில் வெளியான 'தேவர்மகன்' படத்தில் 'இஞ்சி இடுப்பழகி மஞ்ச சிவப்பழகி' என்ற பாடலுக்காகவும் நான்கு தேசிய விருதுகளை வாங்கியுள்ளார்.

தமிழ்நாடு, கேரளம், ஆந்திர மாநிலங்களின் அரசு விருதுகளை பெற்ற ஜானகி

பின்னணி பாடகி எஸ்.ஜானகி 30-க்கும் மேற்பட்ட மாநில அரசு விருதுகளைப் பெற்று அசத்தியுள்ளார். ஆந்திர அரசின் உயரிய விருதான நந்தி விருதை 10 முறையும், தமிழ்நாடு அரசின் சிறந்த பாடகிக்கான விருதை 7 முறையும், கேரள அரசின் சிறந்த பாடகிக்கான விருதை 14 முறையும், கேரளம் அரசின் மாநில சிறப்பு விருதையும், தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருதையும் வென்றுள்ளார்.

டி.கே.ராமமூர்த்தி முதல் ஸ்ரீகாந்த் தேவா வரை

பழம்பெரும் பின்னணி பாடகி இசையமைப்பாளர்கள் டி.கே.ராமமூர்த்தி, கே.வி.மகாதேவன், எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, கங்கை அமரன், வித்யாசாகர், ஏ.ஆர்.ரகுமான், அனிருத் ரவிச்சந்திரன், ஸ்ரீகாந்த் தேவா ஆகியோரது இசையிலும் பாடியுள்ளார்.

1960, 1970, 1980களில் முன்னணி பின்னணி பாடகர்களாக இருந்த பி.பி.ஸ்ரீனிவாஸ், எஸ்.பி.பாலசுப்பிரமணியம், யேசுதாஸ், டி.எம்.சௌந்தரராஜன், மலேசியா வாசுதேவன் ஆகியோருடன் அதிக எண்ணிக்கையில் திரைப்பாடல்கள் பாடினார்.

2014- ஆம் ஆண்டு நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான 'வேலையில்லா பட்டதாரி' திரைப்படத்தில் தனுஷுடன் இணைந்து எஸ்.ஜானகி, 'அம்மா அம்மா' என்ற பாடலைப் பாடியிருந்தார். தலைமுறைகளைக் கடந்தும் ரசிகர்கள் மனங்களில் நீங்கா இடம் பிடித்தவர்.

விருது வழங்கி கௌரவித்த இலங்கை அரசு

கடந்த 1992- ஆம் ஆண்டு இலங்கை சென்றிருந்த பின்னணி பாடகி எஸ்.ஜானகிக்கு அந்நாட்டு அரசு 'ஞான கான சரஸ்வதி பட்டம்' வழங்கி கௌரவித்திருந்தது.

பத்மபூஷண் விருதை மறுத்த ஜானகி

கடந்த 2013- ஆம் ஆண்டு தனக்கு அறிவிக்கப்பட்டிருந்த நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான 'பத்மபூஷண்' விருதை ஏற்க மறுத்த எஸ்.ஜானகி, தனது 55 ஆண்டுகால அனுபவத்திற்கு தாமதமாக விருது அறிவிக்கப்பட்டிருப்பதாக ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார்.

எஸ்.ஜானகியின் மறைவுக்கு திரையுலக பிரபலங்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள், மாநில முதலமைச்சர்கள், ஆளுநர்கள் உள்ளிட்டோர் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.