நீட் தேர்வை ரத்து செய்ய கோரி இந்திய மாணவர் சங்கம் உண்ணாவிரதம்
நீட் தேர்வை ரத்து செய்ய கோரி இந்திய மாணவர் சங்கம் உண்ணாவிரதம்
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் எனவும் இந்திய மாணவர் சங்கத்தின் மாநில செயலாளர் சம்சீர் அஹமது தெரிவித்தார்.
Published : July 11, 2026 at 3:35 PM IST
சென்னை: நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி சென்னையில் இந்திய மாணவர் சங்கம் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானம் அருகே, இந்திய மாணவர் சங்கம் (SFI) தமிழ்நாடு மாநிலக் குழு சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
மேலும், டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் கரப்பான் பூச்சி ஜனதா கட்சிக்கு ஆதரவாகவும் இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட்டதாக இந்திய மாணவர் சங்கத்தினர் தெரிவித்தனர்.
போராட்டத்திற்குப் பிறகு இந்திய மாணவர் சங்கத்தின் மாநில செயலாளர் சமீர் அஹமது செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், “நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதே எங்களின் முக்கிய கோரிக்கை. மேலும் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறோம். டெல்லியில் போராடி வரும் கரப்பான் பூச்சி ஜனதா கட்சிக்கு ஆதரவாகவும் இந்தப் போராட்டம் நடத்தப்படுகிறது.
சென்னை மட்டுமின்றி திருச்சி, திருப்பூர், மதுரை, கோவை ஆகிய தமிழ்நாட்டின் ஐந்து நகரங்களில் ஒரே நேரத்தில் இந்திய மாணவர் சங்கம் சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
2022, 2024 மற்றும் 2026 ஆகிய ஆண்டுகளில் தேசிய தேர்வு முகமை (NTA) நடத்திய நீட் தேர்வுகளில் வினாத்தாள் தொடர்பான முறைகேடுகள் நடைபெற்றது. நீட் தேர்வில் மட்டுமல்லாமல் யூஜிசி தொடர்பான தேர்வுகளிலும் முறைகேடுகள் நடந்துள்ளது.
எனவே, தேசிய தேர்வு முகமை (NTA) தேசிய அளவிலான தேர்வுகளை நடத்த தகுதியற்ற அமைப்பாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, மத்திய அரசு உடனடியாக நீட் தேர்வு முறையை மறுபரிசீலனை செய்து, தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு கடந்த மே 3 ஆம் நடைபெற்ற நிலையில், வினாத்தாள் கசிவு காரணமாக ரத்து செய்யப்பட்டது. தொடர்ந்து, நீட் தேர்வு மறுதேர்வு கடந்த ஜூன் 21ஆம் தேதி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.