நேபாளத்தில் 10 நாட்களுக்குப் பின்னர் மேலும் 2 பேர் உயிருடன் மீட்பு
காத்மாண்டு: நேபாளத்தில் பெருவெள்ளம் ஏற்பட்டு பெரும் பாதிப்பை ஏற்படுத்திய நிலையில் 10 நாட்களுக்குப் பின்னர் 2 பேர் நேற்று உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
நேபாளத்தில் கடந்த ஆகஸ்ட் 26-ம் தேதி ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் பேரிடர் மீட்புப் படையினரும், ராணுவத்தினரும் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பெருவெள்ளம் ஏற்பட்டு 9 நாட்களுக்குப் பின்னர் நேற்று முன்தினம் 2 தொழிலாளர்கள் உயிருடன் மீட்கப்பட்டனர். இந்நிலையில் மேலும் 2 பேரை நேற்று நேபாள ராணுவத்தினர் உயிருடன் மீட்டனர்.
இதுகுறித்து நேபாள ராணுவ அதிகாரி ஒருவர் கூறும்போது, “நேபாள ராணுவத்தினரும், தென் கொரியாவிலிருந்து வந்துள்ள பேரிடர் சிறப்பு மீட்புப் படையைச் சேர்ந்தவர்களும் தொடர்ந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு 2 பேரை உயிருடன் மீட்டுள்ளனர். 225 மீட்டர் நீளமுள்ள சுரங்கத்தில் சிக்கியிருந்த சீனாவைச் சேர்ந்த ஒரு தொழிலாளர் மீட்கப்பட்டார்.
அதேபோல் நுவாகோட் நகரில் இடிந்து விழுந்த வீட்டிலிருந்த 64 வயதான பெண் மீட்கப்பட்டுள்ளார். அவரது பெயர் சந்திகா ஸ்ரேஸ்தா என்று தெரியவந்துள்ளது. மீட்கப்பட்ட இருவரும் ஹெலிகாப்டர் மூலம் காத்மாண்டுக்கு உயர் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” என்றார்.
இதுவரை 13,000 பேர் மீட்பு: 1,344 பேர் உயிரிழப்பு
நேபாள பெருவெள்ளத்தில் இருந்து இதுவரை 13,000 பேர் மீட்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,344 ஆக உயர்ந்தது.
திபெத்-நேபாள எல்லையில் கடந்த மாதம் 26-ம் தேதி பனிப்பாறை உடைந்ததன் விளைவாக நேபாளத்தின் போடே கோசி, திரிசூலி ஆகிய ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது. வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர்.
இந்நிலையில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் நேற்று 11-வது நாளாக மீட்பு பணிகள் தொடர்ந்தன. இதில் மேலும் பல உடல்கள் மீட்கப்பட்டன. இதன் மூலம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,344 ஆக உயர்ந்தது. காணாமல்போன 4,898 பேரை தேடும் பணியில் மீட்பு குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்து இதுவரை 13,000 பேர் மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் தேசிய பேரிடர் அபாயக் குறைப்பு மற்றும் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.