இபிஎஸ் விவசாய கிணற்றில் மின் வயர் திருட்டு; 4 பேர் கைது
இபிஎஸ் விவசாய கிணற்றில் மின் வயர் திருட்டு; 4 பேர் கைது
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளதற்கு மின் ஒயர் திருட்டே சிறந்த உதாரணம் என்று இபிஎஸ் சட்டப்பேரவையில் குறிப்பிட்டு இருந்தார்.
Published : September 6, 2026 at 5:08 PM IST
சேலம்: முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் விவசாய கிணற்றில் மின் ஒயர்கள் திருடப்பட்ட சம்பவத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமியின் பூர்வீக வீடு சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே சிலுவம்பாளையம் கிராமத்தில் உள்ளது. அங்கே அவருக்கு விவசாய தோட்டமும் உள்ளது. இந்த தோட்டத்தை எடப்பாடி பழனிசாமியின் மூத்த அண்ணன் கோவிந்தராஜூ பராமரித்து வருகிறார்.
கடந்த 2 ஆம் தேதி இரவு தோட்டத்துக்குள் புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்த மின் மோட்டார்களுக்கான ஒயர்களை திருடி சென்றுள்ளனர். மறுநாள் காலை தோட்டத்துக்கு சென்ற கோவிந்தராஜூ ஒயர்கள் காணாமல் போனது குறித்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் பூலாம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
மேலும், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வந்தனர். இதனிடையே நடைபெற்று வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் பேசிய எடப்பாடி பழனிசாமி, "தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளதற்கு எனது விவசாய தோட்டத்தில் உள்ள கிணற்றில் மின் ஒயர்களை மர்ம நபர்கள் திருடி சென்றதே உதாரணம்" என்று கூறி இருந்தார். அவரின் இந்த பேச்சு ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியது.
இதனிடையே திருட்டு புகார் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதைத்தொடர்ந்து திருட்டில் ஈடுபட்டதாக மேட்டூர் அருகே சோனா ரப்பட்டி கிராமத்தை சேர்ந்த குமார் (வயது 40), பட்டாசு என்கிற ரஞ்சித் (23), முருகேசன் மகன் வினைகுமார் (27) மற்றும் மாரிமுத்து என்பவரின் மகன் கண்ணன் (33) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மின் ஓயர் திருட்டு தொடர்பாக கைது செய்யப்பட்ட நபர்களிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழக சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் நாளை பட்ஜெட் மீதான பதிலுரை வழங்கவுள்ள நிலையில், எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் விதமாக இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது
இதனிடையே, முதலமைச்சர் நாளை பதிலுரை அளிக்கவுள்ள நிலையில், சட்டப்பேரவையில் வழக்கமாக நடைபெறும் கேள்வி நேரம் நாளைய தினம் மட்டும் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்வரின் பதிலுரை நீண்ட நேரம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்த அறிவிப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.