Immortal Day 2 Box Office
சென்னை: மாரியப்பன் சின்னா இயக்கத்தில் ஜிவி பிரகாஷ், கயாடு லோஹர் உள்ளிட்டோர் நடித்திருக்கும் இம்மார்ட்டல் திரைப்படம் சில நாட்களுக்கு முன்பு திரையரங்குகளில் வெளியானது. வாம்ப்பயர் ஜானரில் உருவாகியிருக்கும் இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்நிலையில் அதன் பாக்ஸ் ஆஃபிஸ் விவரங்கள் வெளியாகியிருக்கின்றன.
கோலிவுட்டில் இசையமைப்பாளர்களும் ஹீரோக்களாக மாறும் நடைமுறை அதிகமாகியிருக்கிறது. அந்தவகையில் ஜிவி பிரகாஷும் கடந்த காலங்களில் ஹீரோவாக அறிமுகமானார். தொடர்ச்சியாக படங்களில் அவர் நடித்தாலும்; எதிர்பார்த்த வெற்றி எதுவும் கிடைக்கவில்லை. இடை இடையே சில படங்கள் அவருக்கு சுமார் ஹிட் என்ற ரிசல்ட்டை மட்டும் கொடுத்தன. எனவே எப்படியாவது அனைவரும் திரும்பி பார்க்கும் வகையில் மெகா வெற்றியை கொடுக்க வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறார்.
இம்மார்ட்டல் ஜிவி பிரகாஷ்: அந்தவகையில் புது புது இயக்குநர்களுடன் பணியாற்றும் அவர்; இப்போது மாரியப்பன் சின்னா என்பவரது இயக்கத்தில் இம்மார்ட்டல் படத்தில் நடித்திருக்கிறார். இதில் அவருக்கு ஜோடியாக கயாடு லோஹர் நடித்திருக்கிறார். சாம் சி.எஸ் இசையமைத்திருக்கிறார். இது அவருக்கு 100வது படம் என்று கூறப்படுகிறது. இந்தியாவில் அரிதான வாம்ப்பயர் ஜானரில்தான் இப்படம் உருவாகியிருக்கிறது. ஸ்பெஷல் திரையிடலில் பெற்ற பாசிட்டிவ் ரெஸ்பான்ஸோடு நேற்று முன்தினம் தியேட்டர்களில் ரிலீஸானது படம்.
எப்படி இருந்தது படம்?: படத்தின் ட்ரெய்லரில் கயாடுவின் கவர்ச்சியைத்தான் ஹைலைட் செய்திருந்தார்கள். எனவே படம் முழுக்க அந்த டோனில் இருக்கும் என்று எதிர்பார்த்தவர்களுக்கு; செம சர்ப்ரைஸ் கொடுத்திருக்கிறார் இயக்குநர். வெறும் ரொமான்ஸ் படமாக மட்டும் இல்லாமல் சர்வைவல், த்ரில்லர், ஃபேண்டஸி என கலந்துகட்டி கொடுத்திருக்கிறார். அது ரசிகர்களிடம் பயங்கரமாகவே கனெகட் ஆகிவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். அதன் காரணமாக படத்துக்கு பாசிட்டிவ் ரெஸ்பான்ஸ் கொடுத்தார்கள்.
சிஜி பணிகள் சூப்பர்: படத்தின் திரைக்கதை, மேக்கிங், ஜிவி, கயாடு நடிப்பு என அத்தனை ஏரியாக்களும் நன்றாக ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது. அதிலும் கிராஃபிக்ஸ் பணிகள் உண்மையிலேயே மிரட்டிவிட்டன. இரண்டரை வருடங்களுக்கும் மேலாக இந்தப் படத்தின் சிஜி வேலைகள் நடந்தனவாம். அந்தப் பணிகளால் ஈர்க்கப்பட்ட ரசிகர்கள், அனைத்தும் ஹாலிவுட் தரத்தில் இருப்பதாக புகழ்ந்தார்கள். ஆகமொத்தம் ஜிவிக்கு இந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட் என்ற ரிசல்ட்டை கொடுத்துவிட்டது. இதனால் அவர் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் இருப்பார்.
வசூல் நிலவரம்: விமர்சன ரீதியாக மட்டுமின்றி வசூல் ரீதியாகவும் படம் சூப்பர் ஹிட்டடித்திருக்கிறது. Sacnilk இணையதளம் வெளியிட்டிருக்கும் தரவுகள்படி, முதல் நாளில் அந்தப் படம் ஒரு கோடியே 25 லட்சம் ரூபாயை வசூலித்தது. முதல் நாளிலிருந்தே படத்துக்கு பாசிட்டிவ் ரெஸ்பான்ஸ் வந்ததால் நேற்றைய தினம் தியேட்டர்களில் கூட்டம் அலைமோதியது. அதன் பலனாக இரண்டாவது நாளில் ஒரு கோடியே 72 லட்சம் ரூபாயை வசூலித்திருக்கிறதாம். மொத்தம் அந்தப் படம் இரு நாட்களில் இரண்டு கோடியே 97 லட்சம் ரூபாயை கலெக்ட் செய்திருப்பதாக அந்த இணையதளம் கூறியிருக்கிறது.
படத்துக்கு தொடர்ந்து நல்ல விமர்சனங்கள் வந்திருப்பதாலும் இன்று விடுமுறை நாள் என்பதாலும் கண்டிப்பாக வசூல் மேற்கொண்டு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றியை நோக்கி படம் சென்றுகொண்டிருப்பதால் படக்குழுவினர் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.