“குழந்தைகளுக்கு மிட்டாய் கொடுத்து அள்ளிச் செல்வது போல...”
திருச்சி: “தெருவில் விளையாடிக் கொண்டிருக்கின்ற குழந்தைகளுக்கு மிட்டாய் கொடுத்து அள்ளிச் செல்வது போல அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை தவெக இழுத்துக் கொண்டதால் தான் இரண்டு தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வந்துள்ளது.” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
திருச்சி அதிமுக நிர்வாகி இல்லத் திருமண விழாவில் அக்கட்சி பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று கலந்துகொண்டார்.
விழாவில் பேசிய எடப்பாடி பழனிசாமி, ”புதிதாக ஆட்சிக்கு வந்த தவெக, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை, தெருவில் விளையாடிக் கொண்டிருக்கின்ற குழந்தைகளுக்கு மிட்டாய் கொடுத்து அள்ளிச் செல்வது போல, இழுத்துக் கொண்டார்கள். அதனால் இரண்டு தொகுதிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களும் அத் தொகுதி அதிமுக தொண்டர்களின் உழைப்பால் அவர்கள் வெற்றி பெற்றார்கள். நம்முடைய கூட்டணிக் கட்சித் தலைவர்கள் உழைப்பால் வெற்றி பெற்றார்கள்.
எந்தக் காரணமும் இன்றி சுயலத்துக்காக, குதிரை பேரத்துக்கு விலைபோய் ஆட்சியைத் தக்கவைக்க வேண்டும் என்ற அடிப்படையில், அதிமுகவின் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களையும் ராஜினாமா செய்ய வைத்து ஆட்சியைத் தக்க வைத்திருக்கிறார்கள். அவர்கள் சொந்தக் காலில் நிற்கவில்லை, இரவல் காலில் நின்று கொண்டிருக்கிறார்கள். கூட்டணிக் கட்சியில் இருப்பவர்கள் விலகிக் கொண்டால் அவர்களுடைய ஆட்சி கவிழ்ந்துவிடும்.
ஆட்சிப் பொறுப்பேற்று சில மாதங்கள் கடந்துவிட்ட நிலையில் மக்களுக்காக என்ன திட்டங்களை கொடுத்திருக்கிறார்கள்? தேர்தல் நேரத்தில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளும் பெரும்பாலும் நிறைவேற்றப்பட இல்லை. ரீல்ஸ் விட்டே காலத்தைக் கழிக்கிறார்கள். மக்களுக்கு எதுவுமே செய்யாமல் உழைப்பும் இல்லாமல் ஆட்சிக்கு வந்த அரசாங்கம் தான் இது.
அதிமுக 30 ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழகத்தை ஆண்ட கட்சி, பொன்விழா கண்ட கட்சி, நாட்டு மக்களுக்கு எண்ணற்ற திட்டங்களை வழங்கிய கட்சி. இந்த டெல்டா மாவட்டம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தை சட்டபூர்வமாக பெற்றுத்தந்தது அதிமுக தான்.
மத்திய அரசோடும் கர்நாடக அரசோடும் போராடி காவிரியில் நமக்குக் கிடைக்க வேண்டிய பங்கு நீரினை முழுமையாகப் பெற்றுத் தந்தது அதிமுக அரசுதான்.
விவசாயிகளுக்கு எப்பொழுது பிரச்சினை ஏற்பட்டாலும் உடனுக்குடன் வந்து தீர்த்து வைத்ததும் அதிமுகவே. கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்தது, விவசாயிகள் உற்பத்தி செய்த நெல்லை உடனுக்குடன் அரசு நேரடி கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்தது, விவசாயிகள் எவ்விதப் பிரச்சினையும் இல்லாமல் அவர்களின் வங்கி கணக்கிலேயே பணத்தை ஒதுக்கித் தந்தது என ஏராளம் இருக்கிறது.
அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்ந்துவிட்டது. முதல்வர் முதலீடுகளை ஈர்க்க வெளிநாடு சென்று முதலீடுகளை ஈர்த்து புதிய தொழில்களைத் தொடங்கி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று பார்த்தால், பத்திரிகைகளில் புகைப்படங்கள் தான் வருகின்றன.
தமிழகமெங்கும் மின்தடை அடிக்கடி ஏற்படுகிறது, மின்கட்டண உயர்வு. 2011-ல் அதிமுக ஆட்சிக்கு வந்தபோது கடுமையான மின்வெட்டு இருந்தது. பொறுப்பேற்ற மூன்றே ஆண்டுகளில் தமிழகத்தை மின் மிகை மாநிலமாக அதிமுக மாற்றிக் காட்டியது. மின்சாரம் இல்லாமல் வாழ முடியாது.
அதிமுக ஆட்சியில் விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் இலவச மின்சாரம் வழங்கப்பட்டது. இன்றைக்கு எங்கு பார்த்தாலும் மக்கள் போராட்டம், விவசாயிகள் போராட்டம். தேர்தல் நேரத்தில் குறு, சிறு விவசாயிகளுக்குக் கடன் தள்ளுபடி என்று சொன்னார்கள். ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகு அவர்கள் கொடுத்த வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றவில்லை. இதனால் தமிழகம் முழுவதும் விவசாயிகள் கொந்தளித்து ஆங்காங்கே போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாத அரசாங்கம் இது.
டெல்டா மாவட்டங்களில் நெல்லை திறந்தவெளியில் கொட்டி வைத்திருப்பதால் மழையில் நனைந்து முளைத்து வீணாகிறது. விவசாயிகளைப் பற்றிப் பேசுகின்ற ஒரே கட்சி அதிமுக மட்டும்தான். விவசாயிகளின் சாபத்தைத் தேடிக் கொண்டால் நிச்சயமாக வரும் தேர்தலில் அது எதிரொலிக்கும்” என்று கூறினார்.