இணையத்தை ஆளும் ‘80s ரெட்ரோ’ மேஜிக்
முதல்வர் விஜய் மற்றும் அமைச்சர்கள் ‘வின்டேஜ்’ உடையில் இருப்பதுபோல வலைதளங்களில் வைரலாகி வரும் ஏஐ புகைப்படம்.
சென்னை: செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சி, அன்றாட வாழ்க்கையின் தகவல் தேவைகளை தாண்டி மனிதர்களின் கற்பனைத் திறனுக்கு தற்போது புதிய சிறகுகளைக் கொடுத்துள்ளது. எதிர்காலத்தில் நாம் எப்படி இருப்போம், அனிமேஷன் பாணியில் நம் முகம் எப்படி இருக்கும் என வியக்க வைத்த ஏஐ செயலிகள், தற்போது இணையவாசிகளை அப்படியே நான்கு தசாப்தங்கள் பின்னோக்கி இழுத்துச் சென்று 1980-களின் ‘வின்டேஜ்’ உலகுக்குள் உலவ விட்டிருக்கின்றன.
‘Back to the 80s’ என்ற தலைப்பில் சமூக வலைதளங்களில் புயலைக் கிளப்பி வரும் இந்த ரெட்ரோ புகைப்படங்கள், இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் ஒருங்கே கட்டிப்போட்டுள்ளன.
சாட்-ஜிபிடி, ஜெமினி போன்ற ஏஐ தொழில்நுட்பங்களின் துணை கொண்டு உருவாக்கப்படும் இந்த புகைப்படங்கள், 80-களின் பொற்கால நினைவுகளை கண்முன்னே அச்சு அசலாக நிறுத்துகின்றன.
அக்காலத்தில் பெரும் அலையை ஏற்படுத்திய அகலமான காலர் வைத்த வண்ணமயமான சட்டைகள், பூட்கட் மற்றும் பெல்பாட்டம் பேன்ட்கள், தலை நிறைய சுருள் முடி அலங்காரம், பெரிய ஃப்ரேம் போட்ட கண்ணாடிகள் என அத்தனை அம்சங்களும் தத்ரூபமாக மறுஉருவாக்கம் செய்யப்படுகின்றன.
பின்னணியில் கம்பீரமாக நிற்கும் அம்பாசிடர் கார்கள், பழைய தெருக்கள், வின்டேஜ் ஸ்டுடியோ விளக்குகள் என ஒவ்வொன்றும் ரெட்ரோ அழகியலை தூக்கிப் பிடிக்கின்றன. இதற்கு தகுந்தாற்போல இளையராஜா, ரஜினி, கமல், சுஹாசினி, ராதிகா ஆகியோரின் கிளாசிக் பாடல்களை பின்னணியாக இணைத்து இன்ஸ்டாகிராம், முகநூலில் நெட்டிசன்கள் வெளியிடும் பதிவுகள் சமூக வலைதளங்களை வண்ணமயமாக்கி வருகின்றன.
சாதாரண மக்கள் மட்டுமல்லாமல், திரையுலகினர், அரசியல் பிரமுகர்களின் வின்டேஜ் புகைப்படங்களும் வலைதளங்களில் பரவலாக வலம் வருகின்றன.
அந்த வகையில், சமீபத்தில் முதல்வர் விஜய்யுடன், அமைச்சர்கள் என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, நிர்மல்குமார், செங்கோட்டையன், அருண்ராஜ் ஆகியோர் 80-களின் வின்டேஜ் உடைகளில், கிளாசிக் மெர்சிடிஸ்-பென்ஸ் வின்டேஜ் ரக காரில் சாய்ந்தபடி கம்பீரமாக நிற்கும் ஏஐ புகைப்படங்கள் தற்போது தவெக தொண்டர்கள், இணையவாசிகள் மத்தியில் வைரலாகி வருகின்றன. இதேபோல திரையுலகினர் பலரும் தங்களது ரெட்ரோ தோற்றங்களை உற்சாகமாக பகிர்ந்து வருகின்றனர்.