📅 Sunday, 13 September 2026 IST | ஆவணி 28, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics September 13, 2026 05:35 PM

த.வெ.க., குதிரை பேரத்தால் இடைத்தேர்தல்: இபிஎஸ் குற்றச்சாட்டு

த.வெ.க., குதிரை பேரத்தால் இடைத்தேர்தல்: இபிஎஸ் குற்றச்சாட்டு

திருச்சி: 'த.வெ.க., குதிரை பேரத்தில் ஈடுபட்டதால் மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வந்திருக்கிறது; அ.தி.மு.க., அந்த 2 தொகுதிகளிலும் வெற்றி பெறும்' என அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி தெரிவித்தார்.

திருச்சியில் நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு, பழனிசாமி பேசியதாவது: மிட்டாய் கொடுத்து குழந்தைகளை தூக்கி செல்வது போல், அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்களை த.வெ.க., தூக்கி சென்று விட்டது. அக்கட்சி சொந்த காலில் நிற்கவில்லை.

த.வெ.க.,வின் 4 மாத ஆட்சியில், எந்த திட்டங்களும் நிறைவேறவில்லை. தமிழகத்தில் தற்போது மின்வெட்டு பிரச்னை அதிகரித்துள்ளது. விவசாயிகளின் தேவைகளை உடனுக்குடன் தீர்த்து வைக்கும் ஒரே கட்சி அதிமுக தான். நெல் கொள்முதல் செய்யாததால், விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

பின் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி: த.வெ.க., அரசை மோசமாக அரசாக பார்க்கிறோம். தொழில் முதலீடுகளை ஈர்க்கவா விஜய் லண்டன் சென்றிருக்கிறார். வேறு செய்திகள் தொடர்பான படங்கள் தான் வருகின்றன. முதலீட்டை ஈர்த்ததற்கான படங்கள் இதுவரை வரவில்லை. தமிழகம் கடனில் மூழ்கியுள்ள நிலையில், அவசர கதியில் புதிய தலைமை செயலகம் கட்ட அவசியம் இல்லை. தேர்வு செய்த இடமும் சரியில்லை.

தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. குறிப்பாக பெண்களுக்கு பாதுகாப்பில்லாத சூழல் நிலவுகிறது. திறனற்ற ஆட்சி நடப்பதால் தான் கொலை, கொள்ளை செய்திகள் தினமும் நாளிதழ்களில் வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.