விஜய்
லண்டன்: பிரிட்டனில் நடைபெற்ற புகழ்பெற்ற ‘லீ மேன்ஸ் கப்’ கார் பந்தயத்தில் பங்கேற்ற தமிழ்த் திரையுலகின் பிரபல நடிகரும் கார் பந்தய வீரருமான அஜித் குமாரை, தமிழக முதல்வர் விஜய் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். பின்னர் பந்தயத்தையும் அவர் முறைப்படி தொடங்கி வைத்தார்.
தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காகப் பிரிட்டனுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள முதல்வர் விஜய், அஜித் குமாரின் சிறப்பு அழைப்பின் பேரில் சில்வர்ஸ்டோன் மோட்டார் ரேசிங் களத்துக்கு வருகை தந்தார்.
களத்திற்கு வந்த முதல்வரை, நடிகர் அஜித் உற்சாகத்துடன் வரவேற்றார். இருவரும் கட்டியணைத்துத் தங்களது நட்பைப் பகிர்ந்துகொண்ட புகைப்படங்களும் காணொளிகளும் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.
பந்தயம் தொடங்குவதற்கு முன், அஜித் குமாரின் அதிநவீன பந்தய காரில் அமர்ந்து முதல்வர் விஜய் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டார்.
அண்மையில், தமிழக சட்டமன்றத்தில் விதி 110ன் கீழ் உரையாற்றிய முதல்வர் விஜய், தமிழ்நாட்டில் உலகத்தரம் வாய்ந்த ‘மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம்’ உருவாக்கப்படும் என அறிவித்திருந்தார்.
இந்தத் திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்துவதற்காக, உலகின் முன்னணி மோட்டார் விளையாட்டு உள்கட்டமைப்பு வசதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யவும் இந்த வாய்ப்பை அவர் பயன்படுத்திக் கொண்டார்.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அஜித்குமார், “நாங்கள் இருவரும் ஒரே திரையுலகில் 34 ஆண்டுகளாக ஒன்றாகப் பயணித்துள்ளோம். தனது பணிச்சுமைக்கு மத்தியிலும் எனது அழைப்பை ஏற்று முதல்வர் இங்கு வந்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது,” என்றார்.