குதிரை பேரத்தால் தவெகவில் சேர்ந்தேனா?... எம்.ஆர்.விஜயபாஸ்கர் பரபரப்பு பேட்டி
குதிரை பேரத்தால் தவெகவில் சேர்ந்தேனா?... எம்.ஆர்.விஜயபாஸ்கர் பரபரப்பு பேட்டி
கரூர்: குதிரை பேரத்தால் தவெகவில் சேர்ந்தேனா என்று எம்.ஆர்.விஜயபாஸ்கர் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பொதுக்குழுவில் பேசும்போது, மதிமுக எம்எல்ஏக்கள் 2 பேரை ராஜினாமா செய்யச் சொல்லுங்க, அவங்களுக்காக இடைத்தேர்தலில் நானே பிரசாரம் செய்து வெற்றி பெறச் செய்கிறேன் என்று விஜய் என்னிடம் கூறினார் என்று தெரிவித்தார். அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்து தவெகவில் இணைந்து வருவது குதிரை பேரம் என்று குற்றம்சாட்டப்பட்ட நிலையில் வைகோ பேச்சு அதை உறுதி செய்ததாக எதிர்க்கட்சிகள் தெரிவித்தன.
இந்த நிலையில், அதிமுகவை சேர்ந்த எம்.ஆர்.விஜயபாஸ்கர் மாமல்லபுரத்தில் தவெகவில் இணையும்போது, அதிமுகவில் 39 ஆண்டுகளாக பயணம் செய்த என்னை தவெகவினர் கட்சியில் சேரும்படி அணுகினர், அது எனக்கு பிடித்திருந்ததால் இணைந்தேன் என்று கூறினார். விஜயபாஸ்கர் பேட்டி மூலம் மீண்டும் குதிரை பேரம் நிரூபிக்கப்பட்டதாக கூறி திமுக சார்பில் கவர்னரிடம் புகார் அளிக்கப்பட்டது. இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நேற்று அளித்த பேட்டி: கரூர் சட்டமன்ற உறுப்பினராக அதிமுக சார்பில் தேர்வு செய்யப்பட்டாலும் அதிமுக தலைமை மீது எனக்கும், எனது ஆதரவாளர்களுக்கும் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக அதிமுகவிலிருந்து வெளியேறி தவெகவில் இணைத்து கொண்டேன்.
தவெகவில் இணைந்தது முழுக்க முழுக்க என்னுடைய சுய முடிவாகும். அதிமுக தலைமை மீது ஏற்பட்ட அதிருப்தியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள் தவெகவில் இணைந்தனர். அதிமுகவில் இருந்து முன்னணி தலைவர்கள் கடம்பூர் ராஜூ, திருச்சி சிவபதி உள்ளிட்டவர்கள் தவெகவில் இணைந்தார்கள். அவர்களிடம் நான் பேசியதாக கூறப்படும் வீடியோவில், தவெகவில் இணைந்துள்ளது குறித்து பேசி உள்ளோம். எங்களது நிர்வாகிகளும் கருத்துக்களை அறிந்து தான் தவெகவில் இணைந்துள்ளோம். அவர்கள் கூறிய கருத்துக்களை தான் நான் பகிர்ந்து கொண்டேன்.
அதை பத்திரிகைகள், ஊடகங்கள் தவறாக புரிந்து கொண்டு செய்தி வெளியிட்டுள்ளது. தவெகவில் குதிரை பேரம் எதும் நடைபெறவில்லை. இவ்வாறு அவர் கூறினார். எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேச்சு குதிரை பேரத்தை உறுதிப்படுத்துவதாக எதிர்க்கட்சிகள் கூறியதையடுத்தே அவர் தற்போது பல்டி அடித்துள்ளார் என்று கூறப்படுகிறது.
\n ${e.display_status||e.scheduleTime}\n
\n ${e.display_status+", "+e.scheduleTime}\n