📅 Wednesday, 15 July 2026 IST | ஆனி 31, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu July 14, 2026 11:34 PM

2 குழந்தைகளை தூக்கில் தொங்கவிட்டு கொன்று தந்தை தற்கொலை: சேலத்தில் பயங்கரம்

2 குழந்தைகளை தூக்கில் தொங்கவிட்டு கொன்று தந்தை தற்கொலை: சேலத்தில் பயங்கரம்

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள ஆண்டிக்கரையைச் சேர்ந்தவர் வல்லரசு (26) கட்டிடத் தொழிலாளி. இவரது மனைவி ஸ்ரீபிரியா (22). இவர்களுக்கு மைவிழி (4) தர்ஷன் (2) என்ற குழந்தைகள் இருந்தனர். இந்த நிலையில், நேற்று முன்தினம் ஸ்ரீபிரியாவுக்கும் அவரது மாமியாருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்தாக கூறப்படுகிறது. இதனால் ஸ்ரீபிரியா கணவருக்கு நடந்த சம்பவத்தை தெரிவித்துவிட்டு மேட்டூர் ராஜகணபதி நகரில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார்.

இதனையடுத்து வேலை முடிந்து வீட்டிற்கு வந்த வல்லரசு மனைவியை சமாதானம் செய்து அழைத்து வர தனது மாமியார் வீட்டிற்கு நேற்று சென்றார். அங்கு ஸ்ரீபிரியாவிடம் வல்லரசு சமாதானம் பேசியுள்ளார். இருப்பினும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் வல்லரசு தனது இரு குழந்தைகளுடன் தனி அறையில் தூங்க சென்றார்.

இன்று காலை நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படாததால் மனைவி ஸ்ரீபிரியா மற்றும் அவரின் தாயார் வெண்ணிலா ஆகியோர் கதவை பலமாக தட்டிப் பார்த்தனர். அப்போதும் கதவு திறக்காததால் அக்கம் பக்கத்தினர் உதவியோடு கதவை உடைத்துப் பார்த்தனர். அப்போது இரண்டு குழந்தைகளும் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்தனர்.

வல்லரசு தனது மனைவியின் சேலையில் தூக்கிட்ட நிலையில் இறந்து கிடந்தார். 3 பேரின் சடலங்களை பார்த்து ஸ்ரீபிரியா கதறி துடித்தார். இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மேட்டூர் காவல் துணை கண்காணிப்பாளர் சண்முகசுந்தரம் தலைமையிலான போலீசார் மூன்று சடலங்களையும் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்ப தகராறில் 2 குழந்தைகளை தூக்கில் தொங்கவிட்டு கொன்று தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சேலத்தில் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.