📅 Tuesday, 14 July 2026 IST | ஆனி 30, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu July 14, 2026 08:34 PM

வியட்நாம் படகு விபத்து: உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் சென்னைக்கு வந்தன

வியட்நாம் படகு விபத்து: உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் சென்னைக்கு வந்தன

சென்னை: வியட்னாமின் பூகுவோக் தீவு அருகே ஜூலை 11ஆம் தேதி, படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10 தமிழர்கள் உட்பட 15 இந்தியச் சுற்றுப்பயணிகள் உயிரிழந்தனர்.

அவர்களின் உடல்கள் ஜூலை 13ஆம் தேதி இரவு மும்பை விமான நிலையத்துக்குக் கொண்டுவரப்பட்டன. அங்குச் சட்டபூர்வ நடைமுறைகள் நிறைவு செய்யப்பட்ட பின்னர், அந்தந்த மாநிலப் பிரதிநிதிகளிடம் மாண்டோரின் உடல்கள் ஒப்படைக்கப்பட்டன.

அவர்களில் 10 பேர் தமிழகத்தையும், மூவர் ஆந்திராவையும், இருவர் கேரளாவையும் சேர்ந்தவர்கள்.

தமிழகத்தைச் சேர்ந்தோரின் உடல்கள் சென்னை, கோயம்புத்தூர் அனைத்துலக விமான நிலையத்துக்குச் செவ்வாய்க்கிழமை (ஜூலை 14) கொண்டுவரப்பட்டு, அஞ்சலிக்குப் பின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டன.

லாவா கைப்பேசி நிறுவனம் தமது விநியோகிப்பாளர்களைச் சிறப்புச் சுற்றுலா அழைத்துச் சென்றபோது அந்தக் கோர விபத்து நடந்தது.

“ஒரு தீவிலிருந்து மற்றொரு தீவுக்குச் சென்றபோது படகு கவிழ்ந்தது. படகு மூடிய அமைப்பில் இருந்ததால் உள்ளே சிக்கிக்கொண்ட 15 பேரால் உடனடியாக வெளியேற முடியவில்லை.

“ஓரத்தில் அமர்ந்திருந்த 20 பேர் மட்டும் கடலில் குதித்து உயிர்தப்பினர்,” எனப் படகு விபத்தில் உயிர் பிழைத்த பழநியைச் சேர்ந்த நிர்மல் குமார் கூறினார்.

மேலும், “உயிரிழந்தோரின் உடல்களை மீட்டுக்கொண்டு வருவதில் இந்திய, வியட்னாமிய அரசுகள் பெரிதும் உதவின.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

தேவையான மருத்துவ உதவிகள் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளையும் துரிதமாக மேற்கொள்ளப்பட்டன,” என்றும் அவர் தெரிவித்தார்.

லாவா நிறுவனம் நிதியுதவி

இந்நிலையில், படகு விபத்தில் மாண்டோரின் குடும்பங்களுக்குத் தலா ரூ.25 லட்சம் கருணைத் தொகையை வழங்குவதாக லாவா கைப்பேசி நிறுவனம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், “பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் இந்த நிதியுதவி நேரடியாக வழங்கப்படும்.

“எங்கள் லாவா குடும்பத்தின் மதிப்புமிக்க உறுப்பினர்களான அவர்களின் குடும்பத்தினருக்கு இந்தச் சிரமமான காலகட்டத்தில் உறுதுணையாக நிற்போம்,” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.