📅 Tuesday, 14 July 2026 IST | ஆனி 30, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu July 14, 2026 06:31 PM

மேட்டூர் காவிரி கரையில் 3600 ஆண்டுகளுக்கு முந்தைய எலும்புக் கூடுகள், எக்கு வாள் கண்டுபிடிப்பு

மேட்டூர் காவிரி கரையில் 3600 ஆண்டுகளுக்கு முந்தைய எலும்புக் கூடுகள், எக்கு வாள் கண்டுபிடிப்பு

மேட்டூர் காவிரி கரையில் 3600 ஆண்டுகளுக்கு முந்தைய எலும்புக் கூடுகள், எக்கு வாள் கண்டுபிடிப்பு

மேட்டூர் அருகே உள்ள தெலுங்குனூரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள எஃகு வாளின் வயது 3600 ஆண்டுகள் முதல் 5000 ஆண்டுகள் வரை இருக்கலாம் என கூறப்படுகிறது.

Published : July 14, 2026 at 6:01 PM IST

சேலம்: மேட்டூர் காவிரி கரையில் 3600 ஆண்டுகளுக்கு முந்தைய மனிதர்களின் எலும்புக்கூடுகள், இரும்பு கத்தி உள்ளிட்டவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தமிழக தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள காவிரி கரையில் தமிழக தொல்லியல் துறை இயக்குநர் பரந்தாமன் தலைமையில் கடந்த மூன்று மாதங்களாக தெலுங்கனூர் மற்றும் மாங்காடு பகுதிகளில் அகழாய்வு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

அதற்காக அந்த பகுதிகளில் தோண்டப்பட்ட 25-க்கும் மேற்பட்ட குழிகளில் இருந்து சுமார் 3600 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த மனிதர்களின் எலும்புக்கூடுகள், அவர்கள் பயன்படுத்திய பெரிய அளவிலான முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

மேலும் இரும்பினால் ஆன கத்திகள், ஈட்டிகள், பானை, கல்மணிகள், கோடரிகள் உள்ளிட்ட ஏராளமான பொருட்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக இரும்பினாலான எஃகு வாள், இதுவரை இந்தியாவில் கிடைத்துள்ள எக்கு வாள்களுக்கு கூறப்பட்ட காலத்திற்கு முற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இங்கு சுமார் 60 ஏக்கர் பரப்பளவில் இடுகாடு மட்டுமே காணப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் இன்னும் மனிதர்கள் வாழ்ந்த வாழ்விடங்கள் கண்டுபிடிக்கப்படவில்லை. அதற்கான ஆய்வு பணிகளும் விரைவில் மேற்கொள்ளப்பட உள்ளன.

ஏற்கெனவே ஐரோப்பாவை சேர்ந்த ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகம் கண்டுபிடித்த அல்ட்ரா ஹைட்ரோ கார்பன் தொழில்நுட்பத்தை தமிழர்கள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பின்பற்றியதற்கு சான்றாக, தெலுங்கனூரில் கண்டுபிடிக்கப்பட்ட எஃகு வாள் உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

துருக்கியில் உள்ள டிடிபி என்ற இடத்தில் கண்டெடுக்கப்பட்ட வாளின் வயது 2500 ஆண்டுகள் என்று கூறப்படும் நிலையில், தெலுங்குனூரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள எஃகு வாளின் வயது 3600 ஆண்டுகள் முதல் 5000 ஆண்டுகள் வரை இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

மேலும் தெலுங்கனூர் மற்றும் மாங்காடு பகுதிகளில் தொடர்ந்து அகழாய்வு பணிகளை மேற்கொண்டால் தமிழர்களின் மிகப் பழமையான நாகரீகம் உலக வெளிச்சத்திற்கு தெரியவரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே, தென்காசி மாவட்டம் கரிவலம்வந்தநல்லூர் அருகே உள்ள மலையடிப்பட்டியில் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில், அந்த பகுதியில் சங்ககாலத்தை சேர்ந்ததாக கருதப்படும் சதுர வடிவ படிக்கிணறு வடிவிலான பெரிய செங்கல் கட்டமைப்பை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். 4 மீட்டர் நீளம், 4 மீட்டர் அகலம் கொண்டதாக இந்த கிணறு உள்ளது. இதில் இறங்குவதற்கு செங்கற்களால் ஆன படிகள் உள்ளன.

தமிழ்நாட்டில் கண்டெடுக்கப்பட்ட, முற்கால வரலாற்றுக் காலத்தை சேர்ந்த முதல் செங்கல் படிக்கிணறு இதுவே ஆகும். இது தமிழின் தொன்மைக்கும், தமிழர்களின் பழங்கால நாகரீகத்துக்கும் கூடுதல் சான்றாக கருதப்படுகிறது.