📅 Friday, 10 July 2026 IST | ஆனி 26, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu June 23, 2026 08:02 PM

குன்னூர் விநாயகர் கோயில் பார்க்கிங்கில் வரம்புமீறலா? முன்னாள் அமைச்சர் சேகர்பாபு விளக்கம்

குன்னூர் விநாயகர் கோயில் பார்க்கிங்கில் வரம்புமீறலா? முன்னாள் அமைச்சர் சேகர்பாபு விளக்கம்

குன்னூர் விநாயகர் கோயில் பார்க்கிங்கில் வரம்புமீறலா? முன்னாள் அமைச்சர் சேகர்பாபு விளக்கம்

பக்தர்களின் கோரிக்கைக்கு இணங்கவே குன்னூர் விநாயகர் கோயிலில் பார்க்கிங் கட்டப்பட்டதாக சேகர்பாபு தெரிவித்தார்.

Published : June 23, 2026 at 6:19 PM IST

சென்னை: குன்னூர் விநாயகர் கோயிலில் வரம்பு மீறி 'மல்டி லெவல் பார்க்கிங்' கட்டப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை முன்னாள் அமைச்சர் சேகர்பாபு விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் சேகர்பாபு இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், "குன்னூர் விநாயகர் கோயிலில் மல்டி லெவல் கார் பார்க்கிங் வரம்பு மீறி கட்டப்பட்டதாக இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர், சட்டமன்றத்தில் குற்றம்சாட்டினார்.

இதற்கு விளக்கம் அளிக்க சட்டப் பேரவையில் எனக்கு அனுமதி மறுக்கப்பட்டது. குன்னூரில் உள்ள விநாயகர் கோயிலுக்கு மல்டி லெவல் கார் பார்க்கிங் தேவை என்று பக்தர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். இதையடுத்து, பார்க்கிங்குக்கு தேவைப்படும் நிதியை, மருதமலை கோயிலில் இருந்து கடனாக பெறுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

மருதமலை கோயிலில் உள்ள அறங்காவலர்கள் சம்மதத்துடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மல்டி லெவல் கார் பார்க்கிங் கட்டப்பட்டது. இதில் என்ன தவறு நடந்துள்ளதாக அறநிலையைத்துறை அமைச்சர் சுட்டிக்காட்டுகிறார் என எனக்கு தெரியவில்லை.

குன்னூர் ஒரு சுற்றுலா தலம் என்பதால் தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கிறார்கள். அங்கே வாகனங்களை நிறுத்த முடியாத சூழல் இருப்பதால், பக்தர்கள் மட்டுமல்லாமல் சுற்றுலா பயணிகளும் பயன்படுத்தும் வகையில் மல்டி லெவல் கார் பார்க்கிங் கட்டிக் கொடுக்கப்பட்டது.

அதில் வரும் கட்டணத்தை வைத்து ஊட்டியில் இருக்கும் நலிவடைந்த திருக்கோயில்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்வதற்கான தொலைநோக்கு பார்வையாகவே பார்க்கிங்கை கட்டினோம்.

இதை முழுமையாக உணராமலும் புரியாமலும் ஒரு அமைச்சர் அவசரகதியில் பேசுகிறார். இனிமேலாவது அந்தத் திட்டம் ஏன் செயல்படுத்தப்பட்டது என்ற உண்மை நிலையை அமைச்சர் உணர வேண்டும்.

இதுவரை அத்திட்டத்திற்கு உண்டான அனுமதி ரத்து செய்யப்படவில்லை. பக்தர்கள் மட்டுமல்லாது, சுற்றுலா பயணிகளுக்கும் சேர்த்து தான் கார் பார்க்கிங் ஏற்படுத்தப்பட்டதே தவிர, வெறும் கோயில் பயன்பாட்டிற்காக மட்டும் மல்டி லெவல் கார் பார்க்கிங் கட்டப்படவில்லை.

அறிவார்ந்த அனைவரும் இதனை வரவேற்பார்கள். பேரவையில் அமைச்சர்கள் கூறிய கருத்திற்கு எதிர்கட்சியான திமுகவினர் சரியான வாதத்தை தெரிவிப்பார்கள் என்பதால், அதற்கான அனுமதியை எப்போதும் தர மாட்டார்கள்" என சேகர்பாபு தெரிவித்தார்.