📅 Friday, 10 July 2026 IST | ஆனி 26, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu June 20, 2026 06:47 PM

காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம்: மேகதாது அணை சர்ச்சை

காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம்: மேகதாது அணை சர்ச்சை

சென்னை: காவிரி மேலாண்மை ஆணையத்தின் 52வது கூட்டம் வருகிற 23ஆம்தேதி டெல்லியில் நடக்கிறது.

காவிரி நதி நீர்ப் பங்கீட்டில் கர்நாடகம், தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம் ஆகிய நான்கு மாநிலங்களுக்கு இடையே சுமுகத் தீர்வு காண்பதற்காக இந்திய உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்படி காவிரி மேலாண்மை ஆணையமும் காவிரி ஒழுங்காற்றுக்குழுவும் அமைக்கப்பட்டன.

இந்த இரண்டு அமைப்புகளும் மாதந்தோறும் கூடி நீர்ப் பங்கீட்டுப் பிரச்சினைகள் பற்றி ஆலோசிக்கின்றன.

அதன்படி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் சார்பில் இதுவரை 51 கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. 52வது கூட்டம் வருகிற செவ்வாய்க்கிழமை (ஜூன் 23) டெல்லியில் நடத்தப்படுகிறது.

ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தார் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்க நான்கு மாநிலங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

காவிரி நதி நீரைப் பொறுத்தவரை கர்நாடகம், தமிழகத்துக்கு உரிய பங்கை முறைப்படி வழங்குவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட ‘டிஎம்சி’ தண்ணீர் வழங்கப்பட வேண்டும் என அறிவுறுத்தல்கள் உள்ளன.

ஆனால் அதனைச் சரியாக வழங்காமல், மழைக்காலத்தில் உபரியாகத் திறக்கப்படும் நீரின் அளவை ஆண்டின் சராசரி தண்ணீரின் அளவோடு கர்நாடகம் கணக்கிடுவதாகத் தமிழ்நாடு அரசுத் தரப்பில் புகார் தெரிவிக்கப்படுகிறது.

ஆணையத்தின் ஒவ்வொரு கூட்டத்திலும் அதிகாரிகள் இதனைச் சொல்லி, மழைக்காலத் தண்ணீர்த் திறப்பைக் கணக்கில் சேர்க்கக்கூடாது என வலியுறுத்தி வருகிறார்கள்.

இந்நிலையில், காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட கர்நாடக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு எல்லாம் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருக்கிறது.

மத்திய நீர்வளத்துறை இதற்கு அனுமதி கொடுத்தால் அணை கட்டும் பணியைத் தொடங்கிவிடலாம் என கர்நாடகம் நினைக்கிறது.

இதற்குத் தமிழ்நாடு அரசுத் தரப்பில் கடுமையான எதிர்ப்புகள் முன்வைக்கப்பட்டு உள்ளன. அண்மையில் முதல்வர் விஜய் டெல்லி சென்றிருந்தபோது பிரதமர் நரேந்திர மோடியிடம் மேகதாது அணை தொடர்பாகப் பேசினார்.

அதன்பின்னர், தமிழகச் சட்டமன்றத்தில் மேகதாது அணை திட்டத்தை எதிர்த்து திரு விஜய் தனித்தீர்மானம் கொண்டு வந்தார். அது வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.