📅 Thursday, 01 October 2026 IST | புரட்டாசி 15, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Religion October 01, 2026 07:00 AM

இயல் விருது பெறும் தமிழ்ப் படைப்பாளிகள்!

இயல் விருது பெறும் தமிழ்ப் படைப்பாளிகள்!

இயல் விருது பெறும் தமிழ்ப் படைப்பாளிகள்!

2025-ம்ஆண்டுக்கான சிறந்த அல்-புனைவு (Non Fiction) நூலாக டாக்டர் சங்கர சரவணன் எழுதி, விகடன் பிரசுரம் வெளியிட்ட ‘வைகறை வாசகன் பதிவுகள்' நூல் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது.

ஓவியர் டிராட்ஸ்கி மருதுவுக்கு வாழ்நாள் சாதனையாளருக்கான ‘அ.முத்துலிங்கம் இயல் விருது’ வழங்கப்படுகிறது. கலை, இலக்கியப் பரப்பில் இடையறாது இயங்கிவரும் மருது, தமிழ் அடையாளங்களோடு ஆழமான பிணைப்பை ஏற்படுத்திக்கொண்டவர். ஒரு கோட்டின் சிறு வளைவில் அசாத்தியங்களை உருவாக்கக்கூடியவை டிராட்ஸ்கி மருதுவின் ஓவியங்கள். வீரம் செறிந்த தமிழ் மன்னர்களின் ஓவியங்களை ‘வாளோர் ஆடும் அமலை' என்ற தலைப்பில் புத்தகமாக்கினார். இந்த ஓவியங்கள் ஒவ்வொன்றிலும் தமிழ் வீரம் காலத்தைக் கடந்து உறைந்திருக்கிறது. அவரின் தொடர்ச்சியான ஓவியப் பணிகளைப் பாராட்டி இந்த விருது வழங்கப்படுகிறது.

சிறந்த புனைவுக்கான விருது, திருச்செந்தாழையின் `நெருப்பில் வளர்பவை' நூலுக்காக வழங்கப்பட்டிருக்கிறது. 12 சிறுகதைகள் கொண்ட தொகுப்பு இது. எளிய மனிதர்களின் வாழ்வியல் சிக்கல்கள், உணர்வுகள், யதார்த்த உண்மைகளைப் பேசும் சிறுகதைகள் இவை. திருச்செந்தாழை விருதுநகர் மாவட்டம், கள்ளிக்குடியில் பிறந்தவர். இவரது எழுத்துகளில் ‘ஸ்கெட்சஸ்’ என்ற சொற்சித்திரங்கள் தொகுப்பும், ‘விலாஸம்’, ‘நெருப்பில் வளர்பவை’ ஆகிய சிறுகதைத் தொகுப்புகளும் குறிப்பிடத்தக்க நூல்களாக வெளிவந்திருக்கின்றன. தற்போது மதுரையில் வசித்து வருகிறார்.

சிறந்த அல் - புனைவு நூலுக்கான ‘இயல்’ விருது. ‘தூக்கு' செல்வம் எழுதிய ‘ஒரு தூக்குக் கைதியின் வாக்குமூலம்' நூலுக்கு வழங்கப்படுகிறது. தூக்குத் தண்டனைக் கைதியாக இருந்து மரணத்தின் விளிம்புவரை சென்று மீண்டு, தற்சமயம் வாழ்நாள் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் செல்வம் தனது நீண்டகாலச் சிறை வாழ்வை ஒளிவு மறைவின்றி இந்த நூலில் பதிவுசெய்திருக்கிறார். தமிழகத்தின் நிழல் உலகத்தையும், சிறை உலகத்தையும் ஒளிவு மறைவின்றி அப்பட்டமாக ஆவணமாக்கிய வகையில் மிகச்சிறந்த இலக்கியமாக இது உருமாறியிருக்கிறது.

`காணாமலாக்கப்பட்டோருக்காக இரண்டு செயலிகள்' நூலுக்காக, கருணாகரன் சிவராசா சிறந்த கவிதை நூலுக்கான ‘இயல்’ விருது பெறுகிறார். கிளிநொச்சியில் பிறந்த கருணாகரன் 40 ஆண்டுகளுக்கும் மேலாக எழுதிவருபவர். போரின் அவலங்களையும், சமகால வாழ்வியல் அரசியலையும் ஆழமாகப் பதிவுசெய்பவை இவரது படைப்புகள். ‘ஒரு பொழுதுக்குக் காத்திருத்தல்’, ‘பலியாடு’, ‘கடவுள் என்பது துரோகியாயிருத்தல்’ உள்ளிட்ட கவிதைத் தொகுப்புகளும், ‘வேட்டைத்தோப்பு’ என்கிற சிறுகதைத் தொகுப்பும் இவருடைய பிற படைப்புகள்.

ஈழத்தின் முன்னணிக் கவிஞர்களில் ஒருவரான பா.அகிலன் எழுதிய `கொடியில் உலரும் புன்னகை’ என்ற கவிதை நூலை ‘A Smile Drying on a Vine’ என்ற பெயரில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த பேராசிரியர் கீதா சுகுமாரனுக்கு மொழிபெயர்ப்புக்கான ‘இயல்’ விருது வழங்கப்படுகிறது. யுத்தத்தின் போக்கு அன்றாட வாழ்வையும், மகிழ்ச்சியையும் எப்படி சிதைத்துப்போட்டது என்பதையும் போர் முடிந்த பின்னரும் தொடரும் அவதிகளையும், பதிவுசெய்யும் நூல் இது. மொழிபெயர்ப்பாளர் கீதா சுகுமாறன் கோவையில் பிறந்தவர். தற்போது டொராண்டோவின் யோர்க் பல்கலைக்கழகத்தில் மானுடப் பண்பியல்துறையில் மேற்படிப்பு படித்துவருகிறார். சில்வியா பிளாத் கவிதைகளைத் தமிழில் மொழிபெயர்த்திருப்பதும் இவரது குறிப்பிடத்தகுந்த பணி.