ஆழம் பார்க்கவா... அடித்து ஆடவா? U
ஆழம் பார்க்கவா... அடித்து ஆடவா? U-Turn தமிழக அரசு!
பெங்களூருக்கு நேரில் சென்று கர்நாடகா முதல்வர் டி.கே.சிவக்குமாரைச் சந்தித்துப் பேசப்போகிறார் முதல்வர் விஜய். கையோடு காவிரிநீரைப் பெற்று வரப்போகிறார்” என்று சமூக வலைதளங்களில் செய்திகள் பரவின.
“ஒரு தடவை முடிவு பண்ணிட்டா, என் பேச்சை நானே கேட்க மாட்டேன்” என்று, ‘போக்கிரி’ படத்தில் பன்ச் டயலாக் பேசியிருப்பார் முதல்வர் விஜய். ‘இதெல்லாம் படத்தில்தான். நிஜத்தில் ஒன்றுமில்லை’ என்பதுபோல தொடர்கதையாகியிருக்கிறது அவரது ஆட்சியின் நிர்வாகக் கோளாறுகள். அரசுப் பொறுப்பில் ஜோதிடர் ரிக்கி ராதன் பண்டிட் நியமனம் தொடங்கி மேல்மா சிப்காட் நிலம் எடுப்பு உத்தரவு வரை பல உத்தரவுகளும் அரசாணைகளும் தொடர்ந்து வாபஸ் பெறப்பட்டு வருகின்றன. சமீபத்தில்கூட, சட்டம்-ஒழுங்கு தொடர்பான கேள்விகளுக்கு ஆர்.டி.ஐ-யில் பதிலளிப்பதற்குத் தடை விதித்த அரசாணை வாபஸ் பெறப்பட்டிருக்கிறது.
“உத்தரவுகளை முதலில் வெளியிட்டு ஆழம் பார்க்கிறார்கள். அதற்கு எதிர்ப்பு எழுந்தால், உடனே திரும்பப் பெற்றுக்கொள்கிறார்கள். மக்களுக்குப் பிடிக்காத எதையும் முதல்வர் வலிந்து திணிப்பதில்லை. ஆகச்சிறந்த ஜனநாயகவாதியாகச் செயல்படுகிறார் முதல்வர் விஜய். இதில் என்ன தவறு இருக்கிறது?” என்று அரசின் இந்த U-Turn கலாசாரத்துக்குப் புதுவித காரணம் சொல்கிறார்கள் த.வெ.க-வினர். “என்னதான் நடக்கிறது த.வெ.க அரசாங்கத்தில்... இந்த U-Turn அரசியலின் பின்புலம் என்ன?” என்று களமிறங்கி விசாரித்தோம்.
அந்தர்பல்டி அரசாங்கம்!
த.வெ.க அரசு அமைந்தவுடன், முதல்வரின் அரசியல் ஆலோசகர் களாக ஜோதிடர் ரிக்கி ராதன் பண்டிட்டும், வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமியும் நியமனம் செய்யப்பட்டனர். அதேபோல, முதல்வரின் பயணத் திட்டத்துக்கான ஆலோசகராகத் தொழிலதிபர் விஷ்ணு ரெட்டி நியமிக்கப்பட்டார். திடீரென, ராதன் பண்டிட்டின் நியமனம் தொடர்பான அரசாணை மட்டும் சமூக வலைதளங்களில் வெளியானது. “ஜோதிடருக்கு அரசுப் பதவியா?” என்று தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா, அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் என எதிர்க்கட்சியினர் பலரும் விமர்சனங்களை முன்வைக்கவே, பண்டிட்டின் நியமனம் தொடர்பான உத்தரவு வாபஸ் பெறப்பட்டது. த.வெ.க அரசு அடித்த முதல் அந்தர்பல்டி இதுதான்.
அடுத்ததாக, ஆவடி, திருச்சி, வேலூர், கோவை, தூத்துக்குடி உள்ளிட்ட 12 மாநகராட்சிகளில் தூய்மைப் பணியைத் தனியார் பங்களிப்புடன் மேற்கொள்வதற்கான சாத்தியக்கூறுகளை அறிய டெண்டர் கோரியது அரசாங்கம். “தூய்மைப் பணிகளை தனியார்மயமாக்கப்போகிறீர்களா?” என்று தோழமைக் கட்சிகளான வி.சி.க., கம்யூனிஸ்ட்டுகளே எதிர்ப்பைக் கிளப்பவும், அந்த டெண்டரையே கேன்சல் செய்தனர். அடுத்ததாக, கம்யூனிஸ்ட்டுகளை உஷ்ணப்படுத்திப் பார்ப்பது போலவே சில சுற்றறிக்கைகளும் அறிவிப்புகளும் தொடர்ச்சியாக வெளிவந்தன.
தலைமைச் செயலாளர் சாய்குமார் தலைமையில் நடந்த அரசுக் கூட்டத்தில், ‘காக்ரோச் ஜனதா பார்ட்டி, கம்யூனிஸ்ட் கட்சிகளின் போராட்டங்களில் மாணவர்கள் பங்கேற்பதைத் தடுக்க வேண்டும்’ என்று முடிவெடுக்கப்பட்டு, அதற்கான சுற்றறிக்கை கல்லூரி கல்வி இயக்ககம் வழியாகக் கல்லூரி நிர்வாகங்களுக்கு அனுப்பப்பட்டது. அதற்கு கம்யூனிஸ்ட் கட்சிகளிடமிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பவும், உடனே சுற்றறிக்கை வாபஸ் பெறப்பட்டது. அதேபோல, ‘கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களைக் கணக்கெடுங்கள்’ என குஜிலியம்பாறை தாசில்தார் அனுப்பிய சுற்றறிக்கையும், தோழர்களின் எதிர்ப்பால் உடனடியாக விலக்கிக்கொள்ளப்பட்டது.
சம்பந்தப்பட்ட தாசில்தார் பணியிட மாற்றம் செய்யப்பட்டாலும், “இந்தச் சுற்றறிக்கையை மேலதிகாரிகளின் ஒப்புதல் இல்லாமல் அனுப்ப முடியுமா... இதற்குப் பொறுப்பான தலைமைச் செயலாளர் சாய்குமாரை மாற்ற வேண்டும்” என்று போராட்டம் நடத்தியது சி.பி.எம் கட்சி. அதற்கு அரசிடமிருந்து பதிலே வரவில்லை.
“கைது செய்யலை... விசாரணை மட்டும்தான்!” - நீதிமன்றத்திலும் U-Turn
முழுமையான பயிர்க் கடன் தள்ளுபடி, மேகதாது அணை கட்டுவதற்கு எதிர்ப்பு, காவிரி நீர் பங்கீடு விவகாரம் உள்ளிட்டவற்றை முன்வைத்து, த.வெ.க அரசுக்கு எதிராக தஞ்சாவூரில் ஆர்ப்பாட்டம் நடத்தியது தி.மு.க. அந்தக் கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசிய சில விஷயங்கள் சர்ச்சையை உண்டாக்கவே, அவர்மீது வழக்கு பதியப்பட்டது. ஆகஸ்ட் 4-ம் தேதி அவரைக் கைதுசெய்து, விசாரணைக்காக தஞ்சாவூருக்கு அழைத்துச் சென்றது போலீஸ்.
தமிழகமெங்கும் தி.மு.க-வினர் போராட்டத்தில் குதிக்கவும், நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில், ‘நாங்கள் அவரைக் கைதுசெய்யலை. விசாரிக்கத்தான் அழைச்சுட்டுப்போறோம்’ என்று பல்டி அடித்தது அரசாங்கம். நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி, 90 நிமிடங்கள் விசாரணைக்குப் பின்னர் காவல் நிலைய ஜாமீனில் விடுவிக்கப்பட்டார் உதயநிதி.
தமிழகத்தில் கட்டுமானப் பொருள்களுக்கான தட்டுப்பாடு உயர்ந்த சமயத்தில், இங்கிருந்து அண்டை மாநிலங்களுக்கு ஜல்லி, எம்-சாண்ட் கொண்டு செல்ல மூன்று மாதங்களுக்குத் தடைவிதித்தது அரசு. கட்டுமானப் பொருள் உற்பத்தியாளர்கள் ஆட்சேபம் தெரிவிக்கவும், அந்தத் தடையில் தளர்வுகளைச் செய்து, உத்தரவையே நீர்த்துப்போகச் செய்துவிட்டனர்.
இந்தச் சர்ச்சைகளுக்கு இடையே, ‘என்ரிக்கா’ நிறுவனத்தின் 11 வகை மதுபானங்களுக்குத் தடைவிதிப்பதாக சுற்றறிக்கை அனுப்பியது டாஸ்மாக் நிறுவனம். அதற்கான சுற்றறிக்கையை டாஸ்மாக் மேலாண் இயக்குநர் நந்தகுமார் ஐ.ஏ.எஸ்., அனைத்து மண்டல மேலாளர்களுக்கும் அனுப்பியிருந்தார். ‘இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் நடத்திய ஆய்வில், ‘என்ரிக்கா’ நிறுவனத்தின் மதுபானங்களில் செயற்கைச் சுவையூட்டும் பொருள்களை அனுமதிக்கப்பட்ட அளவைவிடக் கூடுதலாகச் சேர்த்திருப்பதாகச் சொல்லியிருக் கிறார்கள். அவர்களின் அறிக்கையின்படி, அந்த நிறுவனத்தின் மதுபானங்களுக்குத் தடை விதிக்கிறோம்’ என்று விளக்கமளித்தது டாஸ்மாக் நிறுவனம். என்ன நடந்ததோ... 24 மணி நேரத்தில் அந்தச் சுற்றறிக்கையை வாபஸ் பெற்றுவிட்டது அரசாங்கம்.
பேச்சு ஒன்று... செயல் மற்றொன்று!
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறுக்கு அருகேயுள்ள ‘மேல்மா’ கிராமத்தில், சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பதற்காக விவசாய நிலங்களைக் கையகப்படுத்தும் பணிக்கு எதிராக விவசாயிகள் நீண்டகாலமாகப் போராடி வருகின்றனர். இது தொடர்பாக சட்டமன்றத்தில் விவாதம் எழுந்தபோது, “மேல்மா சிப்காட்டுக்கு விவசாய நிலங்களை அரசு வலுக்கட்டாயமாகக் கையகப்படுத்தாது” என்று உத்தரவாதம் கொடுத்தார் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா. ஆனால், மேல்மா கிராமத்தில் 54 ஏக்கரைக் கையகப்படுத்த திடீரென அரசாணை வெளியிட்டது அரசாங்கம். “சட்டமன்றத்தில் ஒன்று பேசுகிறீர்கள்... ஆனால், செய்வது வேறொன்றாக இருக்கிறதே...” என்று கடும் எதிர்ப்பு கிளம்பவும், அரசாணையை வாபஸ் பெற்றனர்.
அந்தர்பல்டிகள் இதோடு முடியவில்லை. சென்னை மாநகராட்சிப் பகுதிகளிலுள்ள சில மண்டலங்களில், சொத்து வரியை மூன்று மடங்கு உயர்த்தி பொதுமக்களுக்கு நோட்டீஸுகள் அனுப்பப்பட்டன. அதிர்ச்சியடைந்த சென்னை வாசிகள் கடும் எதிர்ப்பைத் தெரிவிக்கவும், சொத்து வரி உயர்வைத் திரும்பப் பெற்றுக்கொண்டது மாநகராட்சி நிர்வாகம். அதேபோல, ஆசிரியர்களிடமிருந்து எழுந்த எதிர்ப்பால், ‘காலை உணவுத் திட்ட விரிவாக்கத்துக்கான அடிப்படை வசதிகளைத் தலைமை ஆசிரியர்களே தங்கள் சொந்த நிதியிலிருந்து மேற்கொள்ள வேண்டும்’ என்ற சுற்றறிக்கையும் வாபஸ் பெறப்பட்டது.
எங்கும் அதிகாரிகள் ராஜ்ஜியம்!
அந்த வரிசையில்தான், சட்டம்-ஒழுங்கு தொடர்பான கேள்விகளுக்கு ஆர்.டி.ஐ-யில் பதிலளிப்பதற்குத் தடைவிதித்த அரசாணையை, கடும் எதிர்ப்பு காரணமாக, சமீபத்தில் திரும்பப் பெற்றிருக்கிறது த.வெ.க அரசு.
அ.தி.மு.க., தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் சிலர் நம்மிடம் பேசும்போது, “ஒரு உத்தரவை வெளியிடுவதற்கு முன்பாக அரசு பல கட்டங்களில் ஆலோசிக்க வேண்டும். அதிகாரிகள் சொல்வதை அப்படியே ஏற்றுக்கொள்ளக் கூடாது. ஆனால், த.வெ.க ஆட்சியில் அதிகாரிகளின் முடிவுகளே முன்னிலைப்படுத்தப்படுகின்றன. சட்டம்- ஒழுங்கு தொடர்பாக ஆர்.டி.ஐ மூலம் கிடைத்த தரவுகளை வைத்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சட்டமன்றத்தில் பேசியது தெரிய வந்த பிறகே, சட்டம்- ஒழுங்கு தொடர்பான தகவல்களை ஆர்.டி.ஐ-யில் வழங்கக் கூடாது என்ற அரசாணை வெளியானது. இது போன்ற முக்கியமான முடிவுகள் முதல்வர் மற்றும் மூத்த அதிகாரிகளின் ஆலோசனைக்குப் பிறகே வெளியாக வேண்டும். அதிகாரிகளின் ராஜ்ஜியத்துக்கு முதல்வர் முற்றுப்புள்ளி வைக்கவில்லையென்றால், இந்த அரசாங்கம் முட்டுச்சந்துக்குள்தான் முட்டிக்கொண்டு நிற்கும்” என்றனர்.
சி.பி.எம் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கூறுகையில், “அனைத்துத் தரப்பினரும் கண்டித்ததால் இந்த அரசாணையை ரத்து செய்துள்ளனர். இது போன்ற முடிவுகள் முதல்வருக்குத் தெரிந்து நடக்கிறதா என்பது தெரியவில்லை. ஏற்கெனவே இடதுசாரி அமைப்புகளைக் கண்காணிக்கவும், மாணவர் போராட்டங்களை ஒடுக்கவும் உயரதிகாரிகள் உத்தரவிட்டார்கள். தன்னிச்சையான முடிவுகளுக்குக் காரணமான அதிகாரிகள் மீது விசாரணை நடத்த வேண்டும்” என்றார்.
மனித உரிமைச் செயற்பாட்டாளர் ஹென்றி திபேன் கூறும்போது, “அரசாணையைத் திரும்பப் பெற்றாலும், இது போன்ற உத்தரவு வெளியானதே நல்லாட்சிக்கான அடையாளம் அல்ல. முதல்வரும், சட்டத்துறை அமைச்சரும் தங்கள் துறையின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதால்தான், ஐ.பி.எஸ் - ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் கூட்டுச் சேர்ந்து மக்களுக்கு வழங்கக்கூடிய தகவல்களைத் தடுக்கத் திட்டமிட்டு இது போன்ற செயல்களைச் செய்கிறார்கள். `வெளிப்படையான ஆட்சி நடத்துவோம்’ என்று சொல்லி ஆட்சிக்கு வந்தவர்களின் ஆட்சியில், எல்லாமே மறைக்கப்படுவது ஏன்... உண்மையிலேயே முதல்வருக்குத் தமிழக மக்கள்மீது அக்கறை இருந்தால், இந்த அரசாணையைக் கொண்டுவர காரணமான அதிகாரிகள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
இந்த விமர்சனங்களுக்குப் புதுவிதக் காரணங்களைச் சொல்கிறார்கள் த.வெ.க-வினர். “அரசாணையோ, உத்தரவுகளோ... அதற்கு மக்களிடம் எதிர்ப்பு எழுந்தால் உடனே சரிசெய்துகொள்வதில் தவறில்லையே... முந்தைய ஆட்சியாளர்கள்தான் ஈகோ பார்த்துக்கொண்டு, அரசு உத்தரவுகளை வீம்புக்கு அமல்படுத்திவந்தார்கள். ஆனால், ஒரு விஷயத்தை முழுவதுமாகச் செய்வதற்கு முன்பாக ஆழம் பார்க்கிறார் முதல்வர் விஜய். அதற்கு எதிர்ப்பு எழுந்தால், மக்களுக்கு எதிரான விஷயத்தைச் செய்ய வேண்டாம் எனப் பின்வாங்குகிறார். மக்கள் ஆதரவு கிடைத்தால், அடித்து ஆடுகிறார். சமீபத்தில்கூட, புதிய தலைமைச் செயலகக் கட்டுமானத் திட்டத்துக்குக்கூட, பட்டினப்பாக்கம் மீனவ கிராமங்கள் எதிர்ப்பு தெரிவித்ததும், திட்டத்தை வேறொரு இடத்துக்கு மாற்ற ஆலோசித்திருக்கிறார் முதல்வர். ஒரு விஷயத்துக்கு எதிர்ப்பு எழுந்தால், அதைத் திருத்திக்கொண்டு புதிய பாதை தேடுவதில் தவறில்லைதானே... மக்களும் இதைத்தானே விரும்புகிறார்கள்?” என்கிறார்கள் த.வெ.க அமைச்சர்கள்.
அரசாங்கம் போடும் U-Turn-களுக்கு, “எதிர்ப்பு எழுந்தால் திருத்திக்கொள்வதில் தவறில்லை” என்கிறது த.வெ.க வட்டாரம். “எதிர்ப்பு எழும் அளவுக்கு ஏன் செயல்படுகிறீர்கள்... இதுதான் நிர்வாக லட்சணமா?” என்று கேள்வி எழுப்புகின்றன எதிர்க்கட்சிகள். பொதுமக்களிடம் தனக்கிருக்கும் செல்வாக்கால், எத்தனை U-Turn வேண்டுமானாலும் போட்டுக்கொள்ளலாம் என்று முடிவெடுத்துவிட்டார் முதல்வர் விஜய். U-Turn மட்டுமே போட்டுக்கொண்டிருந்தால், வண்டி எந்தப் பக்கமும் செல்லாமல் ஒரே இடத்திலேயே சுற்றிக்கொண்டிருக்கும் என்பதை ஆட்சியாளர்கள் எப்போதுதான் புரிந்துகொள்வார்கள்?