📅 Thursday, 01 October 2026 IST | புரட்டாசி 15, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu October 01, 2026 12:04 PM

கடைகளில் நாளை யுபிஐ பரிவர்த்தனை நிறுத்தம்: வணிகர் சங்கங்களின் பேரவை அறிவிப்பு

கடைகளில் நாளை யுபிஐ பரிவர்த்தனை நிறுத்தம்: வணிகர் சங்கங்களின் பேரவை அறிவிப்பு

சென்னை: காந்தி ஜெயந்தி தினமான நாளை கடைகளில் யுபிஐ பரிவர்த்தனை நிறுத்தப்படும்’ என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் எஸ்.சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:வணிகர்களின் வாழ்வாதாரத்தை நசுக்கும் வகையில் ரூ.2 ஆயிரத்துக்கு மேற்பட்ட யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் விதிக்கும் மத்திய அரசின் வணிகர் விரோதப் போக்கை கண்டித்து, அக்.7-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என இப்பேரவை அறிவித்துள்ளது.

அகில இந்திய வியாபாரிகள் சங்க கோரிக்கையைத் தொடர்ந்து, அந்த போராட்டத்துக்கு முன்னோட்டமாகவும், வணிகர்களின் ஒன்றுபட்ட எதிர்ப்பை மத்திய அரசுக்கு அறவழியில் உணர்த்தும் வகையிலும் இப்பேரவை முக்கிய முடிவை எடுத்துள்ளது.

அந்நியப் பொருட்களையும், அநீதியான வரிகளையும் எதிர்த்து அறவழியில் போராடிய தேசப்பிதா மகாத்மா காந்தியின் பிறந்தநாளான அக்.2-ம் தேதி தமிழகம் முழுவதும் உள்ள வணிகர்கள் அனைவரும், தங்கள் கடைகளில் உள்ள அனைத்து வகையான யுபிஐ, கியூஆர் கோடு பணப் பரிவர்த்தனைகளையும் ஒருநாள் முழுவதும் நிறுத்தி, ரொக்கப் பண பரிவர்த்தனை மட்டுமே மேற்கொள்ளவேண்டும்.

இதுதொடர்பாக மக்களுக்கு தெரிவிக்கும் வகையில் அறிவிப்பு பலகை வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.