📅 Monday, 28 September 2026 IST | புரட்டாசி 12, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports September 28, 2026 12:03 PM

"எனக்கு வெளிநாட்டு பயிற்சியாளர் தேவையில்லை".. ஆசிய விளையாட்டு பதக்கம் வென்ற மீராபாய் சானு அதிரடி

"எனக்கு வெளிநாட்டு பயிற்சியாளர் தேவையில்லை".. ஆசிய விளையாட்டு பதக்கம் வென்ற மீராபாய் சானு அதிரடி

"எனக்கு வெளிநாட்டு பயிற்சியாளர் தேவையில்லை".. ஆசிய விளையாட்டு பதக்கம் வென்ற மீராபாய் சானு அதிரடி

நகோயா: 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று வரலாறு படைத்துள்ள இந்திய நட்சத்திர பளுதூக்கும் வீராங்கனை மீராபாய் சானு, இந்திய பயிற்சியாளர்கள் மீது தனக்குள்ள அசைக்க முடியாத நம்பிக்கை இருப்பதாகவும், வெளிநாட்டு பயிற்சியாளர்கள் இந்தியாவில் தேவை இல்லை என்றும் கூறி இருக்கிறார். "எனது இதயம் எப்போதும் இந்தியாவிற்கானது; வெளிநாட்டு தலைமை பயிற்சியாளர்களை விட நமது நாட்டு பயிற்சியாளர்களுக்கே அதிக திறமை உண்டு" என்று அவர் கூறி உள்ளார்.

2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற அதே ஜப்பான் மண், மீண்டும் தனக்கு கை கொடுத்துள்ளதாக மீராபாய் சானு மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். கடந்த 2018 ஜாகார்த்தா ஆசிய விளையாட்டுப் போட்டியில் முதுகுவலி காரணமாகவும், 2023 ஹாங்சோ போட்டியில் தொடை மற்றும் இடுப்புப் பகுதியில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாகவும் அவரால் பதக்கம் வெல்ல முடியாமல் போனது. பலத்த காயங்களை கடந்து, ஐச்சி-நகோயாவில் தனது முழு உடற்தகுதியுடன் களமிறங்கி ஆசிய விளையாட்டுப் போட்டி பதக்கக் கனவை நனவாக்கியுள்ளார்.

இந்திய விளையாட்டுகளில் வெளிநாட்டு பயிற்சியாளர்களை நியமிப்பது குறித்து எப்போதும் பெரிய விவாதம் நடப்பதுண்டு. இதுபற்றி பேசிய மீராபாய் சானு, "குத்துச்சண்டை, மல்யுத்தம் போன்ற பல விளையாட்டுகளில் வெளிநாட்டு பயிற்சியாளர்கள் நியமிக்கப்படுகிறார்கள். ஆனால் எனக்கு வெளிநாட்டு பயிற்சியாளர் தேவை என்ற எண்ணம் ஒருபோதும் வந்ததில்லை. கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் தேசிய பயிற்சியாளர் விஜய் சர்மாவின் வழிகாட்டுதலில் தான் எனது விளையாட்டு வாழ்க்கை சிறப்பாக முன்னேறியது. இக்கட்டான காலகட்டங்களில் துணை நிற்கும் பயிற்சியாளருடன் ஏற்படும் பிணைப்பு மிகவும் ஆழமானது. எனது பயிற்சியாளரின் கைகளில் நான் எப்போதுமே பாதுகாப்பாக உணர்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

புதிய 'கேலோ இந்தியா' திட்டத்தின் கீழ் தேசிய பயிற்சியாளர் அங்கீகார வாரியம் கொண்டு வரப்படுவதை அவர் வரவேற்றுள்ளார். "கிராம மற்றும் மாவட்ட அளவில் ஆரம்பக் கட்டத்திலேயே விளையாட்டு வீரர்களுக்கு முறையான பயிற்சி கிடைக்க வேண்டும். ஆரம்பக் கட்ட பயிற்சி என்பது பள்ளிக்கூடம் போன்றது. விளையாட்டை ரசித்து ஆடும் வகையில் கற்றுத்தர வேண்டும். ஆண் மற்றும் பெண் தடகள வீரர்களின் உடல் தேவைகள் முற்றிலும் மாறுபட்டவை. இதை சரியாக புரிந்து கொள்ள நமது உள்ளூர் பயிற்சியாளர்களாலேயே முடியும். அவர்களுக்கு உரிய அங்கீகாரமும் வாய்ப்பும் வழங்கப்பட வேண்டும்" என அவர் கூறி இருக்கிறார்.

ஒலிம்பிக் பதக்கத்திற்கு எந்த வெளிநாட்டு பயிற்சியாளரும் 100 சதவீதம் உத்தரவாதம் தர முடியாது என்று சுட்டிக்காட்டிய மீராபாய் சானு, காயத்தில் இருந்து மீண்டு வரத் தேவையான நிபுணர்கள் மற்றும் மருத்துவக் குழுவில் வெளிநாட்டு நிபுணர்களை பயன்படுத்தலாம் என்று யோசனை தெரிவித்துள்ளார்.

"டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு முன்பு எனது தோள்பட்டை மற்றும் முதுகு காயத்திற்கு சிகிச்சை அளித்த டாக்டர் ஆரோன் ஹார்ஷிக் மிகப்பெரிய உதவியாக இருந்தார். அவர் உடலியக்க சிகிச்சை நிபுணர் மட்டுமல்ல, முன்னாள் பளுதூக்கும் வீரரும் கூட. இதுபோன்ற வெளிநாட்டு மருத்துவ நிபுணர்களை நமது இந்திய தலைமை பயிற்சியாளர்களுடன் இணைத்து பணியாற்ற வைத்தால், இந்திய விளையாட்டுத் துறை இன்னும் பல மடங்கு வேகமாக முன்னேறும்" என்று மீராபாய் சானு கூறியுள்ளார்.