சிங்கப்பூர் கலைத்துறை கொடையாளர்கள் & விருதுகள் 2026
சிங்கப்பூர்க் கலைத்துறையின் நீண்டகால வளர்ச்சியில் கொடையாளர்களின் ஆதரவு முக்கியப் பங்கு வகிக்கிறது. அந்தப் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் அண்மையில் நடைபெற்ற கலைப் புரவலர் விருதுகள் 2026 விழாவில், முன்னெப்போதையும்விட அதிகமாக, கொடையாளர்கள் 585 பேர் கௌரவிக்கப்பட்டனர்.
தனியார் துறையினரின் ஒட்டுமொத்தப் பங்களிப்பு, கடந்த பத்தாண்டுகளில் இல்லாத அளவாக 89.5 மில்லியன் வெள்ளியை எட்டியுள்ளது. அந்தப் பின்னணியில், உள்ளூர்க் கலைச் சூழலின் வளர்ச்சிக்குத் தங்கள் சொந்த வழியில் பங்களித்து வரும் புரவலர் இருவரின் பயணங்கள் குறிப்பிடத்தக்கவை.
கலை, தொழில்நுட்பத்தின் சங்கமம்
சிங்கப்பூர் தேசியக் கலைக்கூடத்திற்கு தனது தொடர்ச்சியான ஆதரவை வழங்கி வரும் கலைச் சேகரிப்பாளரும் தொழில்நுட்ப வல்லுநருமான விக்னேஷ் சுந்தரேசன், இவ்வாண்டு மதிப்புக்குரிய கலைப் புரவலர் (Distinguished Patron of the Arts) விருதைப் பெற்றுள்ளார்.
பிட்ஸ் துபாய் பல்கலைக்கழகத்தில் இயந்திரவியல் பொறியியல் பயின்ற இவர், பின்னர் கனடாவில் தொழில்நுட்ப மேலாண்மைத் துறையில் முதுநிலைப் பட்டம் பெற்றார். பெருநிறுவனத் தொழில்நுட்பத் துறையில் நீண்ட காலம் பணியாற்றியபோது ஏற்பட்ட தனிமை உணர்வு அவரைக் கலை உலகை நோக்கித் திருப்பியது.
தொழில்நுட்பப் பின்னணியை உடைய விக்னேஷ், தமது கலைத் தேடலுக்கு மின்னிலக்கக் கலையைத் தேர்ந்தெடுத்தார். 2018லிருந்து ‘என்எஃப்டி’ (NFT) போன்ற மின்னிலக்கக் கலைப்படைப்புகளைச் சேகரிக்கத் தொடங்கிய அவர், 2021 முதல் சமகால மின்னிலக்கக் கலைஞர்களுடன் அணுக்கமாகப் பணியாற்றி வருகிறார்.
குறிப்பாக, கணினி நிரல்களின் அடிப்படையில் உருவாக்கப்படும் கலைப்படைப்புகளில் அவருக்கு ஆர்வம் அதிகம். சிறிய அளவிலான குறியீடாகத் தொடங்கும் இத்தகைய படைப்புகள், மெய்நிகர் (VR), மிகைமெய் (AR) போன்ற தொழில்நுட்பங்கள் மூலம் பார்வையாளர்களுக்குப் புதிய காட்சி அனுபவத்தை வழங்குகின்றன.
இருப்பினும், மின்னிலக்கக் கலை கணினித் திரைக்குள் மட்டுமே முடங்கிவிடக் கூடாது என்பது அவரது எண்ணம். அதனால்தான் கடந்த ஆண்டு நவம்பரில் தஞ்சோங் பகார் டிஸ்ட்ரிபார்க் வளாகத்தில் ‘படிமை கலை, தொழில்நுட்ப ஸ்டுடியோ’ (Padimai Art and Tech Studio) என்ற இடத்தைத் தொடங்கினார். அங்குப் பொதுமக்கள் விஆர் தொழில்நுட்பம் வழியாக மின்னிலக்கக் கலை, செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட படைப்புகளை நேரடியாக அனுபவிக்க முடிகிறது.
தேசியக் கலைக்கூடத்தின் காப்பாளர்களுடனான நட்பு, விக்னேஷை அந்தக் கலை நிறுவனத்துடன் இணைத்தது. 2001ஆம் ஆண்டு நடைபெற்ற ‘சைபர் ஆர்ட்ஸ்’ கண்காட்சிக்காக உருவாக்கப்பட்ட சில கலைப்படைப்புகள், தொழில்நுட்ப மாற்றங்களால் காலப்போக்கில் செயல்பட முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தன. அவற்றின் பழைய குறியீடுகளை இன்றைய கணினிகளில் இயக்க முடியவில்லை.
இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்
அந்தப் படைப்புகளைப் பாதுகாக்கும் முயற்சியில் விக்னேஷ் களமிறங்கினார். பிரேசிலைச் சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர் ரோட்ரிகோவுடன் இணைந்து, பழைய குறியீடுகளைச் சீரமைத்து அந்தக் கலைப்படைப்புகளுக்குப் புத்துயிர் அளித்தார். இம்முயற்சிக்குத் தனது சொந்த நிதியையும் வழங்கினார்.
கலைப்படைப்புகளின் ஆவணக் காப்பகத்துக்கு பிளாக்செயின் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதும் அவரது எதிர்கால இலக்குகளில் ஒன்றாகும். அதேவேளை, மேற்கத்திய கலாசாரத் தரவுகளால் பெரிதும் வடிவமைக்கப்படும் செயற்கை நுண்ணறிவு மாதிரிகள், தமிழ், மலாய், சீனம் போன்ற ஆசிய மொழிகளையும் பண்பாடுகளையும் உள்வாங்க வேண்டும் என்றும் அவர் விரும்புகிறார்.
கலைக்கு ஆதரவு வழங்குவதைச் சமூகத்துக்கான பங்களிப்பாகக் கருதும் விக்னேஷ், “அறக்கட்டளைகளுக்கு நிதி வழங்குவது போன்றே கலைக்கும் ஆதரவு தேவை. கலைதான் ஒரு சமூகத்தின் அறிவைக் கடத்தும் ஊடகம்.
“பல தலைமுறைகளுக்கு முன்பு எழுதப்பட்ட திருக்குறள் இன்று அந்தக் காலச் சமூகத்தின் அறிவை நமக்கு உணர்த்துவதைப்போல, கலைப்படைப்புகளும் வருங்காலத் தலைமுறைக்கு நமது பண்பாட்டை எடுத்துச் செல்லும்,” என்றார்.
இந்த விருது தமக்குச் சிங்கப்பூருடனான பிணைப்பை மேலும் வலுப்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், எதிர்காலத்தில் கலைத் துறைக்குப் பொறுப்புடன் தொடர்ந்து பங்களிக்க வேண்டும் என்ற ஊக்கத்தையும் இது அளித்துள்ளதாகத் தெரிவித்தார்.
மேடை நாடகங்களுக்கு நிரந்தர இடம்
தமிழ் நாடகக் கலைஞர்களுக்கான நிரந்தர உள்கட்டமைப்பைச் சிங்கப்பூரில் உருவாக்க ஆதரவு வழங்கியுள்ளார் பூவராகன் திருமலை.
சிங்கப்பூரின் முதல் தற்சார்பு அரங்கான, கலைஞர்களால் வழிநடத்தப்படும் ‘பிளாக் பாக்ஸ் தியேட்டர்’ (Blackbox Theatre) அரங்கைக் கட்டுவதற்கு நிதியுதவி வழங்கிய அவர், இவ்வாண்டு ‘கலைகளின் தோழர்’ (Friend of the Arts) விருதைப் பெற்றுள்ளார்.
தொழிலதிபர், வளர்நல முதலீட்டாளர் (Angel investor), புதிய தொழில்முனைவோருக்கான வழிகாட்டி, மேடை நாடகக் கலைஞர் எனப் பல்வேறு துறைகளில் ஈடுபட்டாலும், நாடகமே அவருக்கு நீண்ட காலமாக நெருக்கமான கலை வடிவமாக இருந்து வருகிறது.
12 ஆண்டுகளுக்கும் மேலாக நாடகத் துறையில் ஈடுபட்டு வரும் பூவராகன், சென்னையைச் சேர்ந்த ‘டம்மீஸ் டிராமா’ (Dummies Drama) குழுவின் அறங்காவலராகவும் செயல்பட்டு வருகிறார். ஆண்டுக்கு 50க்கும் மேற்பட்ட நாடகங்களை அரங்கேற்றும் அந்தக் குழுவுக்கு, உலகத் தரத்திலான சொந்த நாடக அரங்கு ஒன்றை உருவாக்குவது நீண்டநாள் கனவாக இருந்தது.
வர்த்தகக் காரணங்களுக்காகச் சிங்கப்பூருக்கு வந்தபின், அவர் ‘அகம் தியேட்டர் லேப்’ (AGAM Theatre Lab) குழுவுடன் இணைந்தார். நாடகங்கள் எழுதுவது, இயக்குவது, தயாரிப்பது, நடிப்பது எனப் பல்வேறு பொறுப்புகளை ஏற்க அந்த அனுபவம் வாய்ப்பளித்தது. ‘அவாண்ட் தியேட்டர்’ (Avant Theatre) தயாரிப்புகளிலும் பங்கேற்றதன் மூலம், சிங்கப்பூர்த் தமிழ் நாடகங்களின் தயாரிப்புத் தரத்தையும் அவர் அறிந்துகொண்டார்.
சென்னையில் ஒரு நாடக அரங்கை உருவாக்க வேண்டும் என்ற கனவு இருந்த நிலையில், சிங்கப்பூரில் அகம் தியேட்டர் லேப் மூலம் அதற்கான வாய்ப்பு உருவானபோது அந்தத் திட்டத்துக்கு நிதியுதவி வழங்க அவர் தயங்கவில்லை.
தற்போது அகம் தியேட்டர் லேப் குழுவின் தலைமையகமாகத் திகழும் அந்த ‘பிளாக் பாக்ஸ்’ அரங்கு, நாடகங்களுக்குத் தேவையான தொழில்நுட்ப அம்சங்களைக் கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. விளக்குகள், பின்னணி மேடை, கலைஞர்கள் வந்துசெல்லும் வசதியான பாதைகள் என, ஒரு சிறிய அரங்கில் தரமான தயாரிப்பை மேற்கொள்ளத் தேவையான அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இந்தச் சொந்த உள்கட்டமைப்பு உருவானதால், சுயேச்சையான தமிழ் நாடகக் குழுக்களுக்கும் பயனுள்ள இடம் கிடைத்துள்ளது. அண்மையில் தொடங்கப்பட்ட ‘தெஸ்பியன் சபா’ (Thespian Sabha) என்ற புதிய கலைஞர் கூட்டமைப்பின் ‘டியூவோ பல்ஸ்’ (Duo Pulse), ‘ஸ்கிரிப்ட்ஸ் அன்பிளக்டு’ (Scripts Unplugged) ஆகிய திட்டங்களுக்காகவும் அகம் குழு இலவசமாக இடமளித்ததைப் பூவராகன் சுட்டிக்காட்டினார்.
புதிய சிந்தனைகளைச் சோதித்துப் பார்க்கவும், புதிய கலைஞர்களை அறிமுகப்படுத்தவும் பாதுகாப்பான இடம் அவசியம் என்று அவர் நம்புகிறார். கலைஞர்களுக்குச் சுதந்திரமான படைப்புச் சூழலை வழங்க வேண்டும் என்ற அகம் தியேட்டர் லேப்பின் நோக்கத்திற்கு இந்தப் புதிய அரங்கு ஒரு நடைமுறை அடித்தளமாக அமைந்துள்ளது.
தமிழ் நாடகம் போன்ற கலை வடிவங்கள், வெகுஜன வர்த்தக ஈர்ப்பைத் தாண்டி, குறிப்பிட்ட பார்வையாளர்களை அடையும் சூழலில் இயங்கி வருகின்றன. அத்தகைய மாற்றக் காலத்தில், நாடகக் கலை வளர்வதற்குப் புரவலர்களின் தொடர்ச்சியான ஆதரவு முக்கியம் என்று பூவராகன் கருதுகிறார்.
“கலைகளின் தோழனாக அங்கீகரிக்கப்பட்டதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். தமிழ் நாடகக் கலைச் சமூகத்தின் சார்பாக, இத்துறையைத் திறந்த மனத்துடன் ஆதரிக்குமாறு அனைவரையும் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்,” என்றார் பூவராகன்.