📅 Sunday, 06 September 2026 IST | ஆவணி 21, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Singapore Tamil September 06, 2026 03:04 AM

நேப்பாள பேரழிவு: மனிதநேயமும் சிங்கப்பூரர்களின் நிலை

நேப்பாள பேரழிவு: மனிதநேயமும் சிங்கப்பூரர்களின் நிலை

நேப்பாள-திபெத் எல்லைப் பகுதியில் ஆகஸ்ட் 26ஆம் தேதி ஏற்பட்ட பனிப்பாறைச் சரிவும் திடீர் வெள்ளப் பெருக்கும் ஈடுசெய்ய முடியாத பேரழிவை ஏற்படுத்தியுள்ளன.

உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,300ஐத் தாண்டியுள்ள நிலையில், 5,000க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை.

காணாமற்போன ஒன்பது சிங்கப்பூரர்கள் ரெங்கராஜன் பிரபு, ஷாலினி தேவி எலன் சோசன், சுப்பிரமணியம் திரவியம், ராஜேஸ்வரன் அய்யாவு, எஸ்டி லோ, கோஷ் அதிதி, எங் கிட் குயென், சுபாக்‌ஷி ராவ்லா, சுமித் ராவ்லா என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அவர்களின் குடும்பங்கள் தகவல் அறியாது தவிக்கும் இக்கட்டான சூழலில், நமது முதன்மைப் பொறுப்பு, அனுதாபமும் உறுதியான ஆதரவும் அளிப்பதே ஆகும்.

ஆனால், இணையத்தில் பரவும் நச்சுத்தன்மை மிகுந்த கவலையளிக்கிறது. காணாமற்போன சிங்கப்பூரர்களின் போலி செயற்கை நுண்ணறிவுப் புகைப்படங்கள் டிக் டாக் போன்ற தளங்களில் பரப்பப்பட்டு, பின்னர் நீக்கப்பட்டன.

நவீன தொழில்நுட்பத்தின்மூலம் உருவாக்கப்படும் போலிப் படங்கள் மீட்புப் பணிகளைத் திசைதிருப்புவதோடு குடும்பத்தினருக்கு மேலும் மன உளைச்சலையே தருகின்றன.

இதுபோன்ற போலித் தகவல்களை அடையாளம் காண மக்கள் கூடுதல் விழிப்புணர்வோடு செயல்பட வேண்டியது அவசியம்.

பாதிக்கப்பட்டவர்களின் பெயர்களையும் பின்னணியையும் வைத்து இணையத்தில் இனவெறி கருத்துகளைப் பதிவிடும் போக்கு மிகத் தவறானது.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

“இவர்கள் உண்மையிலேயே சிங்கப்பூரர்களா?” என வினா எழுப்புவது இரக்கமற்ற செயலாகும். மூன்றாம் தலைமுறைச் சிங்கப்பூரரான, காணாமற்போன ஷாலினியின் கணவர் செல்வகணேஷ் போன்ற உறவினர்களுக்கு இது ஆறாத் துயரத்தை அளித்துள்ளது.

இத்தகைய இனவெறிக் கருத்துகளைக் கலாசார, சமூக, இளையர்துறைத் துணையமைச்சர் தினேஷ் வாசு தாஸ், நாடாளுமன்ற உறுப்பினர் அலெக்ஸ் யாம் ஆகியோர் கடுமையாகக் கண்டித்துள்ளனர்.

“இத்தகைய தருணத்தில் நமது மனிதநேயம்தான் முன்னிலை வகிக்கவேண்டும். காணாமற்போன ஒவ்வொருவரும் யாரோ ஒருவரின் பெற்றோர், வாழ்க்கைத்துணை, பிள்ளை, உடன்பிறந்தவர் அல்லது நண்பர்,” என்று திரு தினேஷ் சுட்டிக்காட்டினார்.

மேலும், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் - ஏர் இந்தியா விவகாரம் மற்றும் நேப்பாள வெள்ளம் தொடர்பாக இணையத்தில் எழுந்த வெறுப்புப் பேச்சுகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்று எச்சரித்த மூத்த அமைச்சர் கா. சண்முகம், குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்கும் என்று உறுதியளித்தார்.

இனவெறிப் பேச்சு சமூகத்தில் இயல்பான ஒன்றாக அமைவதைத் தடுக்க நாம் அனைவரும் ஒன்றுபட்டு அதனை எதிர்கொள்ள வேண்டும்.

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் - ஏர் இந்தியா முதலீடு குறித்துப் பேசிய அமைச்சர் சண்முகம், வணிக நிறுவனங்களை அரசாங்கம் இயக்க முடியாது என்றும் தெமாசெக் நிறுவனம் தனது ஒட்டுமொத்த நீண்டகாலச் செயல்திறனுக்கே பொறுப்பேற்குமே தவிர தனிப்பட்ட முதலீடுகளுக்கு அல்ல என்றும் தெளிவுபடுத்தினார்.

இந்தியா உள்ளிட்ட உலகளாவிய சந்தைகளில் சிங்கப்பூர் செய்யும் முதலீடுகள் நமது தேசியக் கையிருப்பை உயர்த்தியுள்ளன என்பதை நாம் மறக்கக்கூடாது.

அரசியல், வணிக எல்லைகளைத் தாண்டி, இதுபோன்ற பேரிடர்க் காலங்களில் இனம், மொழி, பின்னணி என அனைத்து வேறுபாடுகளையும் கடந்து நாம் மனிதர்களை மனிதர்களாகப் பார்க்க வேண்டும்.

தவறான வதந்திகளைப் பரப்பாமல் சிங்கப்பூர்ச் செஞ்சிலுவைச் சங்கம் போன்ற அங்கீகரிக்கப்பட்ட துயர்துடைப்பு அமைப்புகளுக்கு நிதி உதவி அளித்து, துயரத்தில் இருக்கும் குடும்பங்களுக்குத் தோள்கொடுப்போம். மனிதநேயமும் ஒற்றுமையுமே நமது வலிமை.