10 மணி நேர இசைத் தொடரோட்டம்: சிங்கப்பூர் சாதனை
சிங்கப்பூரில் 200க்கும் மேற்பட்ட உள்ளூர்ப் பாடகர்கள் ஒன்றிணைந்து, 10 மணி நேரத்திற்கும் மேலாக இடைவிடாது பாடி, சிங்கப்பூர்ச் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்ற புதிய சாதனையைப் படைத்துள்ளனர்.
நாமத்வார் சிங்கப்பூர் அமைப்பால் ஆண்டுதோறும் நடத்தப்படும் மதுரகீதம் இசைப் போட்டியின் பத்தாவது ஆண்டை முன்னிட்டு, இந்த மாபெரும் இசைத் தொடரோட்ட நிகழ்ச்சி சனிக்கிழமை (ஆகஸ்ட் 8) நடைபெற்றது.
கர்நாடக இசை பயிலும் மாணவர்க்கும் வளர்ந்து வரும் இளம் இசைக்கலைஞர்களுக்கும் தங்களது இசைப்பயணத்தை உற்சாகப்படுத்தும் வகையில் இந்நிகழ்ச்சி அமைந்திருந்தது.
ரேஸ் கோர்ஸ் லேனில் அமைந்துள்ள சிங்கப்பூர் இந்திய நுண்கலைக் கழகத்தின் மகாத்மா காந்தி நினைவு மண்டபத்தில் ‘சத ராக ரத்ன மாலிகா’ (நூறு ராகங்களால் ஆன மாலை) என்ற பெயரில் இந்த இசைத் தொடரோட்ட நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு ‘தனிநபர் ஒருவர் இசையமைத்த படைப்புகளைக் கொண்டு மிக நீண்ட நேரம் நடத்தப்பட்ட இசை நிகழ்ச்சி’ (Longest Performance of Musical Works from a Single Composer) என்ற அங்கீகாரம் சிங்கப்பூர்ச் சாதனைப் புத்தகத்தில் வழங்கப்பட்டது. மஹாரண்யம் ஸ்ரீஸ்ரீமுரளீதர ஸ்வாமிகளின் இசைப் படைப்புகளைத் தேர்ந்தெடுத்துப் பாடி, அந்த மைல்கல்லை வெற்றிகரமாக எட்டியுள்ளனர் பாடகர்கள்.
இந்நிகழ்ச்சியின் முக்கிய அம்சங்களில் ஒன்று, பாடல்கள் எவ்விதத் தடையுமின்றித் தொடர்ந்து பாடப்பட்ட விதமாகும். ஒரு பாடல் முடிந்து அடுத்த பாடல் தொடங்குவதற்கும் ஒரு குழு மேடையிலிருந்து இறங்கி அடுத்த குழு மேடையேறுவதற்கும் இடையில் ஒரு நிமிடத்திற்கும் குறைவான இடைவெளி இருக்குமாறு நிகழ்ச்சி துல்லியமாகத் திட்டமிடப்பட்டது.
இதனால், ஒரு ராகத்தில் தொடங்கிய பாடல் நிறைவடைந்தவுடன் அடுத்த ராகத்திற்கான பாடல் தொடர்ந்து ஒலித்தது. சுருட்டி ராகத்தில் அமைந்த ‘பெருமிதமடைந்தேன் வேங்கடவா’ என்ற பாடலுடன் தொடங்கிய இந்த இசைத் தொடரோட்டம், தொடர்ந்து 10 மணி நேரம் ஒரு நிமிடம் வரை நீடித்தது.
ஓடிக்கொண்டிருக்கும் மணித்துளிகளைக் கணக்கிட நிறுத்தக் கடிகாரம் (stopwatch) ஒன்று திரையில் மின்னிக் கொண்டிருந்தது.
இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்
இந்த நிகழ்ச்சியில் 16 குழுக்களைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் இடம்பெற்றனர். சிறார், இளையர், பெரியவர்கள், முதியோர் எனப் பல்வேறு வயதினரும் இதில் கலந்துகொண்டனர். தீவின் பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு வரும் இசைப் பள்ளிகளும் இந்நிகழ்ச்சிக்கு ஆதரவளித்துப் பங்கேற்றன.
மற்றொரு சிறப்பம்சமாக, இசை ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களுடன் மேடையில் இணைந்து பாடினர். மாணவர்கள் மட்டும் பாடும் நிகழ்ச்சியாக இல்லாமல், ஆசிரியர்களும் அவர்களுடன் இணைந்து பாடியது, வெவ்வேறு தலைமுறையினரை ஒரே மேடையில் ஒன்றிணைத்தது.
சிங்கப்பூர்ச் சாதனைப் புத்தக அதிகாரிகள் இந்த நிகழ்ச்சிக்கு நேரில் வந்து பார்வையிட்டு, தங்களின் முழு ஊக்கத்தை வழங்கியதாக ஏற்பாட்டாளர்கள் கூறினர். பாடல்களின் பொருளை ஏற்பாட்டாளர்களிடம் கேட்டறிந்த அவர்கள், மொழி எல்லைகளைக் கடந்து இசையை ரசித்துப் பாராட்டியதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆசிரியர்கள், மாணவர்கள், பாடகர்கள் என அனைவருக்கும் பாராட்டுச் சான்றிதழ்களும் நினைவு பரிசுகளும் வழங்கப்பட்டன.
உலகெங்கும் உள்ள இசை ஆர்வலர்களும் நிகழ்ச்சியைக் கண்டு, கேட்டு ரசிக்கும் வகையில், அது யூடியூப் இணையப்பக்கம் வழியாக நேரலையாக ஒளிபரப்பப்பட்டது.