சிங்கப்பூர் சிறு வணிகங்களுக்கு பிஸ்எஸ்ஜி இணையவாசல்
தங்கள் தொழிலை வெளிநாடுகளுக்கு விரிவுபடுத்த விரும்பும் லிட்டில் இந்தியா வட்டார பூ, காய்கனி, இறைச்சிக் கடைகளின் உரிமையாளர்களின் மனத்தில் பல கேள்விகள் எழக்கூடும்.
குறிப்பாக, தொழில் தொடங்க கிடைக்கும் நிதியுதவிகள் என்ன? மானியங்கள் என்ன? வெளிநாடுகளில் அதற்கான வணிக வரி என்ன? என்பது உள்ளிட்ட பல கேள்விகள் அந்தச் சிறிய, நடுத்தர வணிகர்களிடம் இருக்கக்கூடும்.
இத்தனைக் கேள்விகளுக்கும் பதில்தேட இனி அவர்கள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டாம். அதற்கெனத் தனித்துவமாகத் தொடங்கப்படவுள்ள புதிய இணையவாசல்வழி அவர்களுக்குக் கைகொடுக்கும்.
அரசாங்க உதவிகளையும் சேவைகளையும் சிங்கப்பூர் வணிகங்கள் எளிதாக பெற்றுக்கொள்ள உதவும் வகையில், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்துடன் கூடிய ‘பிஸ்எஸ்ஜி’ (BizSG) என்னும் புதிய இணையவாசல் செப்டம்பர் 30ஆம் தேதி முதல் செயல்பாட்டுக்கு வரும் என்று அண்மையில் அறிவிப்பு வெளியானது.
அந்த இணையவாசலின் அறிமுகம் வணிகங்களுக்கு எப்படி உறுதுணையாக இருக்கும் என்பது குறித்து துறைசார்ந்தவர்கள் கருத்துரைத்தனர்.
தந்த்ரா நிறுவனக் குழுமங்களின் தலைவரும் நிறுவனருமான திரு ஜேகே சரவணா, அந்த இணையவாசல் தொழில்துறையில் உள்ளவர்களுக்கு பெரிதும் துணைபுரியும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
“நாங்கள் இந்தியா, துபாய், மலேசியா போன்ற பல நாடுகளுக்குத் தொழிலை விரிவுபடுத்தும்போது, அங்குள்ள உள்ளூர் மானியங்கள், வரி விதிப்புகள் தொழில் தொடங்கத் தேவையான வழிமுறைகளைப் புரிந்துகொள்வது மிகுந்த சவாலாக இருக்கும்.
‘’குறிப்பாக, சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்கு ஒவ்வொரு துறைக்கும் தனித்தனியாக ஆலோசகர்களை நியமிக்கும் அளவுக்கு நிதிவளம் இருக்காது.
இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்
‘‘ஆனால், இந்த ‘பிஸ்எஸ்ஜி’ தளத்தில் இடம்பெற்றுள்ள செயற்கை நுண்ணறிவு அம்சங்கள் வழியாக, தொழில்துறையில் உள்ளோர் தங்களின் விவரங்களை அளித்தால் போதும். அவர்களுக்கு எந்தெந்த மானியங்கள் கைகொடுக்கும் என்பதை அந்தத் தளம் கூறிவிடும்,’’ என்று விவரித்தார் திரு சரவணா.
‘பிஸ்எஸ்ஜி’ இணையவாசலில் ஒருங்கிணைந்த மானியங்கள் குறித்த விவரங்களையும் தொழிலுக்கு உதவக்கூடிய இதர மானியங்கள், நிதியுதவி பற்றிய விவரங்களையும் நிறுவனங்கள் எளிதாகப் பெற முடியும் என்பதால், நிச்சயமாகவே இது பயன்மிக்கது என்றும் அவர் கூறினார்.
புதிய ‘பிஸ்எஸ்ஜி’ இணையவாசல் உருவாக்கத்தின்போது நடைபெற்ற பயனாளர் சோதனையில் பங்கேற்றிருந்தார் கேட்டரிங் சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் எஸ். மகேந்திரன்.
உற்பத்தித் துறை, உணவுத் துறை என பல்வேறு பிரிவுகள் சார்ந்த தொழில்களில் இருக்கும் தம்மைப் போன்றோர்க்குப் பல நேரத்தில், பலகட்ட ஆலோசனைகள் உதவிகள் தேவைப்படும் என்று விளக்கிய அவர், ஏஐ தொழில்நுட்பம் தவிர்க்க முடியாததாக மாறியுள்ள தற்போதைய காலகட்டத்தில் ‘பிஸ்எஸ்ஜி’ இணையவாசல் அறிமுகம் மிகவும் பொருத்தமானது என்றும் சொன்னார்.
“சிறிய, நடுத்தர நிறுவனங்கள் மின்னிலக்கத் தொழில்நுட்பத்திற்கு மாறிவரும் இந்தச் சூழலில், இத்தகைய இணையத்தளங்கள் வணிகங்களின் நேரத்தையும் காலவிரயங்களையும் பெரிதும் குறைக்கும். ஒரு பயனாளராக அதனைச் சோதித்துப் பார்த்து, கருத்துகளைப் பகிர்ந்ததில் மகிழ்ச்சி,” எனத் தெரிவித்தார்.
பிற நாடுகளில் தொழில் தொடங்க விரும்புவோர் அதுசார்ந்த கட்டணங்கள் குறித்து அறிய விரும்பினால் அவ்விவரங்களையும் இந்த இணையவாசல் அளிக்கும்.
மேலும், அனைத்துலக அளவில் ஏற்றுமதி, இறக்குமதி செய்யும் நிறுவனங்கள் வெவ்வேறு நாடுகளுக்கான வரிகள், தடையில்லா வணிக ஒப்பந்தங்களை நொடியில் அறிந்துகொள்ள இது உதவுகிறது என்பதால் அந்த அம்சம் தம்மை மிகவும் கவர்ந்துள்ளதாகத் திரு மகேந்திரன் குறிப்பிட்டார்.
‘‘அனைத்துலக அளவில் தொழில் செய்யும் நிறுவனங்கள் வெவ்வேறு நாடுகளில் உள்ள கட்டண விகிதங்களை அறிந்துவைத்திருப்பது மிகவும் முக்கியம்.
‘‘ஏனெனில், கட்டண முறைகள் விரைவாக மாறக்கூடியவை. எனவே, தொழில்துறைகள் சந்தையில் போட்டித்தன்மையுடன் திகழவும் சீராகச் செயல்படவும் தொழில்சார்ந்த முடிவுகளை உடனுக்குடன் எடுக்க வேண்டும். அவ்வகையில், இந்த அம்சம் சிங்கப்பூர் வணிகர்களுக்கும் ஒட்டுமொத்தத் துறைக்கும் பெருந்துணையாக அமையும், ’’ என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.