சென்னையில் நள்ளிரவில் பைக்ரேஸ் ரோமியோக்கள் அட்டூழியம்!
சென்னை: சென்னையில், கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், கோட்டூர்புரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், நேற்று முன்தினம் நள்ளிரவில், 100க்கும் மேற்பட்ட, 'பைக்ரேஸ் ரோமியோக்கள்' அட்டூழியம் செய்தனர். கோட்டூர்புரத்தில் மின்னல் வேகத்தில் சென்ற இரு சக்கர வாகனம், மேம்பால தடுப்பு மீது மோதியதில், 21 வயது மெக்கானிக் துாக்கி வீசப்பட்டு பலியானார்.
சென்னையில், நேற்று முன்தினம் நள்ளிரவில், கோட்டூர்புரம், நுங்கம்பாக்கம் மற்றும் அண்ணா சாலையில் உள்ள அண்ணாதுரை மேம்பாலம், கோடம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில், 100க்கும் மேற்பட்ட பைக்ரேஸ் ரோமியோக்கள், பலத்த சத்தத்துடன் மின்னல் வேகத்தில் சென்று, அப்பகுதி மக்களின் துாக்கத்தை பறித்தனர்.
ஒரே நேரத்தில், நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் சிக்னல் அருகே, 50க்கும் மேற்பட்ட பைக்ரேஸ் ரோமியோக்கள் திரண்டதால், அந்த இடத்தில் பூகம்பமே ஏற்பட்டது போல, இருசக்கர வாகனங்களின் சத்தம் கேட்டுள்ளது.
வள்ளுவர் கோட்டத்தில் இருந்து கோடம்பாக்கம் பிரதான சாலைகளில் பைக்ரேஸில் ஈடுபட்ட வாலிபர்களை, அப்பகுதி மக்கள் ஒன்று திரண்டு தடுக்க முயன்றனர். பொதுமக்கள் ஒன்று கூடியதால், பைக்ரேஸ் ரோமியோக்கள் நாலாபுறமும் சிதறினர்.
எனினும், பொதுமக்கள் அவர்களை போலீசாரிடம் பிடித்துக் கொடுக்க, சாலைகளில் தடுப்புகளை வைத்து தடுக்க முயன்றனர். ஆனாலும், அவர்கள் மின்னல் வேகத்தில் தப்பிச் சென்று விட்டனர்.
இதுகுறித்து, கோடம்பாக்கம் பகுதி மக்கள் கூறியதாவது: வார இறுதி நாட்களில், பைக்ரேஸ் வாலிபர்களின் அட்டூழியம் தாங்க முடியவில்லை. குழந்தைகள், இதய நோய் உள்ளவர்கள், முதியவர்கள் உயிர் பயத்தில் அலறுகின்றனர். எல்லை பிரச்னை காரணமாக, நுங்கம்பாக்கம் மற்றும் தி.நகர் போலீசார் கண்டு கொள்வதில்லை. இதனால் தான், நாங்களே சாலைகளில் இறங்கி பைக்ரேஸ் வாலிபர்களை பிடிக்க முயன்றோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
ஆர்.ஏ.புரம் பசுமை வழிச்சாலையை சேர்ந்தவர் குகன், 21; இருசக்கர வாகன மெக்கானிக். இவர், நேற்று அதிகாலை 2:15 மணியளவில், நண்பரின் இருசக்கர வாகனத்தில், கோட்டூர்புரம் சர்தார் படேல் சாலையில் சென்றுள்ளார். சென்னை ஐ.ஐ.டி., அருகே, கோட்டூர்புரம் மேம்பாலத்தில் கிழக்கு பக்கமாக மின்னல் வேகத்தில் சென்ற போது, இரும்பு தடுப்பு கம்பியில் மோதி, பாலத்தில் இருந்து துாக்கி வீசப்பட்டு, வலது கால் முறிவு மற்றும் நெஞ்சில் காயம் ஏற்பட்டு பலியானார்.
தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று குகன் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். விபத்து நடந்த இடத்தில், 'சி.சி.டி.வி' கேமரா இல்லை. விபத்து குறித்து, கோட்டூர்புரம் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் வினோத் குமார் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
சென்னை ராயப்பேட்டை பகுதியில், பைக்ரேஸில் ஈடுபட்ட வாலிபர்கள் மூன்று பேரை பிடித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர். அவர்களிடம் கஞ்சா பொட்டலம் கைப்பற்றப்பட்டு உள்ளது. போலீசாரிடம் அவர்கள், 'எங்கள் வாழ்க்கை போய் விடும்; மன்னித்து விட்டு விடுங்கள்' என, சாலையில் படுத்து உருண்டு நாடகமாடி உள்ளனர்.