📅 Monday, 05 October 2026 IST | புரட்டாசி 19, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu October 05, 2026 04:02 AM

‘வெற்றிப் பயணம்’ திட்டத்துக்கு தடை கோரி வழக்கு: உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணை

‘வெற்றிப் பயணம்’ திட்டத்துக்கு தடை கோரி வழக்கு: உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணை

‘வெற்றிப் பயணம்’ திட்டத்தை தொடங்கி வைத்து மகளிருக்கு பேருந்து டிக்கெட் வழங்கிய முதல்வர் விஜய்.

சென்னை: அரசுப் பேருந்​துகளில் பெண்​கள் கட்​ட​ணமின்றி பயணம் செய்​யும் ‘வெற்​றிப் பயணம்’ திட்​டத்தை ரத்து செய்​யக் கோரி​யும், அதற்கு இடைக்​காலத் தடை விதிக்​கக் கோரி​யும் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடரப்​பட்​டுள்​ளது. இந்த மனு இன்று தலைமை நீதிபதி அமர்​வில் விசா​ரணைக்கு வரு​கிறது.

தமி​ழ​கத்​தில் தவெக அரசு அமைந்​ததைத் தொடர்ந்​து, முந்​தைய திமுக ஆட்​சி​யில் அறி​முகம் செய்​யப்​பட்ட ‘விடியல் பயணத் திட்​டம்’ விரி​வுபடுத்​தப்​பட்​டுள்​ளது. ‘வெற்​றிப் பயணம்’ என்ற பெயரிலான இத்​திட்​டத்தை முதல்​வர் விஜய் கடந்த அக்​டோபர் 2-ம் தேதி தொடங்கி வைத்​தார்.

மாநிலம் முழு​வதும் 12,600-க்​கும் மேற்​பட்ட அரசுப் பேருந்​துகளில் பெண்​கள் இலவச​மாக பயணிக்​கும் வகை​யில் இத்​திட்​டம் செயல்​படுத்​தப்​பட்டு வரு​கிறது. இந்​நிலை​யில், இத்​திட்​டத்தை எதிர்த்து ஈரோட்டை சேர்ந்த தனி​யார் பேருந்து உரிமை​யாளர் கலாமணி, சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் மனு தாக்​கல் செய்​துள்​ளார்.

அவர் தனது மனு​வில், “அரசுப் பேருந்​துகளில் பெண்​கள் கட்​ட​ணமின்றி பயணிக்க அனு​ம​திக்​கப்​படு​வ​தால் தனி​யார் பேருந்​துகளுக்கு கடுமை​யான நிதி இழப்பு ஏற்​படு​கிறது. இதனால் பேருந்து தொழிலையே கைவிட வேண்​டிய விளிம்பு நிலைக்கு தள்​ளப்​படு​கி​றோம். பெண் பயணி​களிடம் இருந்து மட்​டும் கட்​ட​ணம் வசூலிக்​காமல் இருப்​பது அரசி​யல் சாசனம் வழங்​கி​யுள்ள சம உரிமைக்கு எதி​ரானது.

சட்​டப்​பேர​வை​யில் முதல்​வர் அறி​வித்த அறி​விப்​பின் அடிப்​படை​யில் மட்​டுமே இத்​திட்​டம் நடை​முறைப்​படுத்​தப்​படு​கிறதே தவிர, இதற்கு முறை​யான அரசாணை எது​வும் இது​வரை பிறப்​பிக்​கப்​பட​வில்​லை. இதனால் இத்​திட்​டத்தை சட்​ட​விரோத​மானது என அறிவிக்க வேண்​டும். இந்த வழக்​கின் இறு​தித் தீர்ப்பு வரும் வரை திட்​டத்தை செயல்​படுத்த இடைக்​கால தடை விதிக்க வேண்​டும்” என்று கூறி​யுள்​ளார். இந்த மனு தலைமை நீதிபதி எஸ்​.ஏ.தர்​மா​தி​காரி, நீதிபதி ஜி.அருள்​முரு​கன் ஆகி​யோர் அடங்​கிய அமர்வு முன்பு இன்று விசா​ரணைக்கு பட்​டியலிடப்​பட்​டுள்​ளது.