சென்னை தரவு மையம்: சிங்கப்பூர் துணைப் பிரதமர் தொடங்கி வைத்தார்
சென்னை: சிங்கப்பூரின் கேப்பிட்டாலேண்ட் நிறுவனம் சென்னையில் உருவாக்கி வரும் தரவு மையத் திட்டத்தை சிங்கப்பூர் துணைப் பிரதமர் கான் கிம் யோங்கும் தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யும் இணைந்து தொடங்கி வைத்தனர்.
அந்த நிகழ்ச்சி சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டையில் வியாழக்கிழமை (அக்டோபர் 15) காலை நடைபெற்றது.
கிட்டத்தட்ட 19.4 பில்லியன் ரூபாய் (US$203.2 மில்லியன்) முதலீட்டில் எழுப்பப்படும் அந்தத் தரவு மையம், இந்த ஆண்டின் இறுதிக்குள் முழுமையாகக் கட்டி முடிக்கப்படும்போது 53 மெகாவாட் வரையிலான தகவல் தொழில்நுட்ப மின்திறனைக் கொண்டிருக்கும். அதில் 34 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் 13 தரவு அரங்குகளுக்குப் பயன்படும்.
தரவு மையத் திட்டத்தின் தொடக்க விழா சிங்கப்பூர் மற்றும் தமிழ் மரபுகளை இணைத்து நடத்தப்பட்டது.
‘ஹுவாட்’ (வளம் மற்றும் செழிப்பு) எனும் சிங்கப்பூர்ப் பாரம்பரிய வழக்கப்படி துணைப் பிரதமர் கானும் முதல்வர் விஜய்யும் அன்னாசிப் பழங்களைத் தரையில் உருட்டிவிட்டு, திட்டத்தை அறிமுகப்படுத்தினர். அதன் பின்னணியில் பாரம்பரிய நாதசுவர இசை முழங்கியது.
அந்த விழாவைத் தொடர்ந்து, இரு தலைவர்களும் மரக்கன்று நடும் நிகழ்ச்சியிலும் பங்கேற்றனர்.
அந்த நிகழ்ச்சி சிங்கப்பூர் மற்றும் தமிழகத்திற்கு இடையேயான வளர்ந்து வரும் தொழில்நுட்ப, உள்கட்டமைப்பு ஒத்துழைப்பை எடுத்துக்காட்டுவதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அக்டோபர் 13 முதல் 15 வரை இந்தியாவுக்கு மூன்று நாள் அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டிருக்கும் திரு கானின் மூன்றாவது நாள் நிகழ்ச்சியாக இந்தத் தொடக்க விழா நடைபெற்றது.
இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்
இந்தப் பயணத்தின்போது, புதுடெல்லியில் நடைபெற்ற 8ஆவது புளூம்பெர்க் புதிய பொருளியல் கருத்து மன்றத்தில் பங்கேற்ற அவர், மூத்த மத்திய அரசு அதிகாரிகள் மற்றும் வணிகத் தலைவர்களைச் சந்தித்தார்.
தரவு மையம் குறித்து ‘கேபிட்டாலேண்ட் இந்தியா டிரஸ்ட்’ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கௌரி சங்கர் நாகபூஷணம் விளக்கினார்.
“திரவக் குளிரூட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் முதல் தரவு மையங்களில் ஒன்றாக இது திகழும் என்றும் வாடிக்கையாளர்கள் இங்கு அதிநவீன சில்லுத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவார்கள் என்றும் நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
“தமிழ்நாட்டுடனான எங்கள் உறவு இருபது ஆண்டுகளுக்கும் மேலானது. அந்தப் பயணத்தை தரமணியில் உள்ள ‘இண்டர்நேஷனல் டெக் பார்க்’ மூலம் தொடங்கினோம். அதைத் தொடர்ந்து சென்னையில் தொழில் பூங்காக்கள், வேர்ஹவுசிங் (கிடங்குகள்) மற்றும் ஹோட்டல்களைக் கட்டினோம்.
“நாங்கள் உருவாக்கிய முதல் மின்னிலக்க உள்கட்டமைப்புத் திட்டம் இதுவாகும். எங்களை நிலைநிறுத்திக்கொள்ளவும் இந்தத் திட்டத்தைத் தொடங்கவும் அளித்த அனைத்து ஆதரவிற்கும் தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கிறோம்,” என்றார் திரு கௌரி சங்கர்.
கேப்பிட்டாலேண்ட் குழுமம் தமிழகத்தில் 22 ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறது. செயல்பாட்டில் உள்ள தனது ஏழு சொத்துகள் வாயிலாக 60 பில்லியன் ரூபாய்க்கும் அதிகமான முதலீட்டை அது செய்துள்ளது.