📅 Tuesday, 14 July 2026 IST | ஆனி 30, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Religion July 14, 2026 10:34 AM

சேதமடைந்த கிராமப்புற ரோடுகளால் வாகன ஓட்டிகள் தினம் தினம் அவதி: ரோடுகளை புதுப்பிக்க அதிகாரிகள் தனிகவனம் செலுத்தணும்

சேதமடைந்த கிராமப்புற ரோடுகளால் வாகன ஓட்டிகள் தினம் தினம் அவதி: ரோடுகளை புதுப்பிக்க அதிகாரிகள் தனிகவனம் செலுத்தணும்

கொடைக்கானல்; மாவட்டத்தில் சேதமடைந்த கிராமப்புற ரோடுகளால் வாகன ஓட்டிகள் தினம் தினம் அவதிப்பட்டு வருகின்றனர். அதிகாரிகள் தனிகவனம் செலுத்தி ரோடுகளை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திண்டுக்கல் மாவட்டத்தில் 306 ஊராட்சிகள் உள்ளன. இங்கு விவசாயம் சார்ந்த விளைபொருட்கள் கொண்டு செல்ல கிராமப்புற ரோடுகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ரோடுகள் நபார்டு, முதலமைச்சர் சாலைகள் மேம்பாட்டு திட்டம், பாரதப் பிரதமரின் கிராமப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டம், கிராமப்புற சாலைகள் இணைப்பு திட்டம் ஆகிய திட்டங்களின் கீழ் அமைக்கப்பட்டு வருகின்றன.

கடந்த 10 ஆண்டுகளாகவே இந்த ரோடுகள் சீரமைப்பில் மெத்தனப் போக்கும், பணிகளில் தரமற்ற நிலையால் விரைவில் சேதமடைகிறது. இதனால் தொலைதூர கிராமப்பகுதிகளுக்கு செல்ல பஸ் வசதி இல்லாத சூழலில் போக்கு வாகனங்கள் மூலம் கிராமப் பகுதிகளை அடையும் நிலை உள்ளது.

மேலும் விவசாய விளை பொருட்கள், தளவாடப் பொருட்கள் கொண்டு செல்வதில் மிகுந்த சிரமம் அடைகின்றனர். இத்தகைய ரோடுகளை சீரமைக்க வலியுறுத்திய போதும் கடந்த ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் கண்டு கொள்ளவில்லை. கிராமப் பகுதிகளை இணைக்கும் இத்தகைய ரோடுகளின் அவலங்களால் நாள்தோறும் வாகனங்கள் பழுதாகின்றன.

உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் நிறைவுற்ற நிலையில் தனி அதிகாரிகள் மூலமே ஊராட்சிகள் வழி நடத்தப்படுகின்றன. அத்தியாவசிய தேவைகளில் முக்கியமாக கருதப்படும் இந்த ரோடுகளின் அவலத்தால் ஊராட்சிகளில் வசிக்கும் உள்ளூர் வாசிகள் மிகுந்த சிரமடைகின்றனர்.

குறிப்பாக கொடைக்கானல் மலைப்பகுதியில் 15 ஊராட்சிகளில் உள்ள ரோடுகள் மிக மோசமான நிலையில் குண்டும், குழியுமாக உள்ளது. மொத்தம் 145 கிராமங்கள் உள்ள சூழலில் இவற்றை சீரமைக்க பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

அரசு இவ்விஷயத்தில் தனிகவனம் செலுத்தி மாவட்டத்தில் உள்ள கிராமப்புற ரோடுகளை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தரமான ரோடு அமைப்பதில் கண்டிப்பு

திண்டுக்கல் ஆன்மிகம், சுற்றுலா, விவசாயம் சார்ந்த மாவட்டம். இங்குள்ள ஊராட்சி ரோடுகளின் நிலைமை படுமோசமாக உள்ளது. தனி அதிகாரிகள் மூலம் ஊராட்சிகள் செயல்படுத்தப்படும் நிலையில் சேதமடைந்த ரோடுகள் குறித்து ஆய்வு செய்துள்ளனர். அவற்றை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அமைக்கப்படும் புதிய ரோடுகள் தரமானதாகவும், பழைய ரோடுகள் தோண்டி எடுக்கப்பட்டு தரம் மிகுந்ததாக அமைக்க வேண்டும். ரோடு அமைக்கும் ஒப்பந்ததாரர் இந்த ரோட்டை முழுமையாக 5 ஆண்டு பராமரிக்கிறார்களா என்பதை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். தரமற்று ரோடு அமைக்கும் ஒப்பந்ததாரருக்கு அபராதம் விதிக்கும் பட்சத்தில் கிராமப்புற ரோடுகள் தரம் மிகுந்ததாக அமையும். இவ்விஷயத்தில் அதிகாரிகள் அர்ப்பணிப்போடு செயல்பட வேண்டும்.

- பாலசுப்ரமணி, இயற்கை ஆர்வலர், கொடைக்கானல்.