சூர்யகுமார் யாதவுக்கு மீண்டும் கேப்டன் பதவி ஆனால் ஒரு கண்டிஷன்.. பிசிசிஐ போட்ட ஒற்றை நிபந்தனை
சூர்யகுமார் யாதவுக்கு மீண்டும் கேப்டன் பதவி ஆனால் ஒரு கண்டிஷன்.. பிசிசிஐ போட்ட ஒற்றை நிபந்தனை
மும்பை: 2026 டி20 உலகக் கோப்பையை வென்று கொடுத்த டி20 அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் இந்திய அணியிலிருந்து நீக்கப்பட்டது பெரும் விவாதத்தை ஏற்படுத்திய நிலையில், அவர் மீண்டும் அணிக்குத் திரும்புவதற்கான கதவுகள் இன்னும் மூடப்படவில்லை என்று பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஆனால், அதற்கு அவர் ஒரு முக்கியமான நிபந்தனையை நிறைவேற்ற வேண்டும்.
கடந்த 2026 டி20 உலகக் கோப்பையை வென்ற கையோடு சூர்யகுமார் யாதவின் கேப்டன் பதவி பறிபோனது. மேலும், அணியில் இருந்தும் அவர் நீக்கப்பட்டார். அவருக்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர் டி20 அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டார். உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் டக்-அவுட் ஆன சூர்யகுமார், அந்தத் தொடரில் 8 போட்டிகளில் வெறும் 158 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். மேலும் 2026 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிய அவர், 13 இன்னிங்ஸ்களில் 270 ரன்கள் மட்டுமே எடுத்தார். மோசமான பேட்டிங் காரணமாக அவர் அணியிலிருந்து நீக்கப்பட்டார்.
தற்போது 35 வயதாகும் சூர்யகுமாருக்கு, 2028ஆம் ஆண்டு நடைபெற உள்ள டி20 உலகக்கோப்பை வரை வாய்ப்பு கிடைக்குமா? என்ற கேள்வி உள்ளது. அவரது டி20 எதிர்காலம் கேள்விக்குறியாகவே பார்க்கப்படுகிறது. எனினும், அவர் இல்லாத இந்திய டி20 அணி இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து தொடர்களில் விளையாடிய 7 போட்டிகளில் 6 தோல்விகளைச் சந்தித்து படுமோசமாகத் தடுமாறி வருகிறது. இதனால் சூர்யகுமார் யாதவ் மீண்டும் இந்திய அணிக்கு கேப்டனாக திரும்ப வேண்டும் என்ற பேச்சுக்கள் எழத் தொடங்கி உள்ளன.
இது குறித்து பிசிசிஐ தரப்பில் வெளியான தகவலின்படி, "சூர்யகுமார் யாதவுக்கான கதவுகள் இன்னும் திறந்தே இருக்கின்றன. தற்போதைய திட்டங்களில் அவர் இல்லை என்றாலும், உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் அவர் தொடர்ந்து ரன்களைக் குவித்தால், மீண்டும் இந்திய அணிக்குத் திரும்ப அவருக்கு முழுத் தகுதி உண்டு" என்று கூறப்பட்டுள்ளது. இதனால் சூர்யகுமார் மும்பை அணிக்காக உள்நாட்டுப் போட்டிகளில் விளையாட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அதில் ரன் குவித்தால் அவர் கேப்டனாகவே மீண்டும் அணிக்கு திரும்பக் கூடும்.