"அவர்கிட்ட பேசிட்டேன்.." விராட் கோலி எதிர்காலத்தை முடிவு செய்த சுப்மன் கில்.. என்ன சொன்னார்?
"அவர்கிட்ட பேசிட்டேன்.." விராட் கோலி எதிர்காலத்தை முடிவு செய்த சுப்மன் கில்.. என்ன சொன்னார்?
பர்மிங்காம்: இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டிக்கு முன்னதாகப் பேசிய இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில், விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவின் எதிர்காலம் குறித்த பல்வேறு ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அதிரடித் தகவலைப் பகிர்ந்துள்ளார்.
2027ஆம் ஆண்டு நடைபெற உள்ள ஒருநாள் போட்டி உலகக் கோப்பை தொடரில் விராட் கோலி விளையாடுவாரா என்ற கேள்விக்கு பதிலளித்த சுப்மன் கில், "நேற்று முன்தினம் தான் நான் விராட் கோலியுடன் 2027 உலகக் கோப்பைக்கான திட்டங்கள் குறித்து விரிவாக விவாதித்தேன். அணியின் சேர்க்கை, எந்தெந்த வீரர்கள் அணியில் இடம் பெற வேண்டும், தற்போது அணியில் இல்லாத சில முக்கிய வீரர்கள் எவ்வாறு நமக்கு உதவ முடியும் மற்றும் ஒவ்வொரு வீரரையும் எங்கு சரியாகப் பயன்படுத்தலாம் என்பது குறித்து நாங்கள் பேசினோம்" என்று உறுதிப்படுத்தியுள்ளார்.
கேப்டன் பதவியிலிருந்து விலகிய பிறகு அணியின் உத்திகளில் கோலி பெரிய அளவில் தலையிடாமல் இருந்த நிலையில், தற்போது கில்லின் தலைமையின் கீழ் அவர் மீண்டும் ஒரு ஆலோசகராகவும், வழிகாட்டியாகவும் செயல்படத் தொடங்கியுள்ளார். முன்னதாக இந்தியாவுக்கு 95 ஒருநாள் போட்டிகளில் தலைமை தாங்கியுள்ள கோலி, அதில் 65 போட்டிகளில் வெற்றியைத் தேடித்தந்துள்ளார். இவரது 68.42 சதவீத வெற்றி விகிதம் தான் இந்திய ஒருநாள் கேப்டன்களிலேயே மிக அதிகமாகும்.
ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலியின் அனுபவம் குறித்துப் பேசிய கில், "ரோஹித் சர்மாவும், விராட் கோலியும் கடந்த பத்து ஆண்டுகளாக இந்திய பேட்டிங் வரிசையின் முதுகெலும்பாக விளங்குகின்றனர். அவர்கள் இப்போதும் அணியின் மிக முக்கிய அங்கமாகவே உள்ளனர். பல்வேறு சவாலான சூழ்நிலைகளில் அவர்கள் பெற்றுள்ள அனுபவமும் திறமையும் இந்திய அணிக்கு மிகவும் உதவிகரமாக உள்ளது" என்று கூறினார்.
சுப்மன் கில் இவ்வாறு பேசியதை அடுத்து விராட் கோலி நிச்சயம் 2027 ஒருநாள் போட்டி உலகக்கோப்பை தொடரில் விளையாடுவார் என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் விவாதித்து வருகின்றனர். ஆனால், ரோஹித் சர்மா நிலை சற்று மோசமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. அவர் ஒவ்வொரு தொடரிலும் ரன் குவித்தால் மட்டுமே உலகக்கோப்பை தொடரில் பங்கேற்பார் என பிசிசிஐ வட்டாரத்தில் கூறப்படுகிறது.