0.37 வினாடியில் தங்கத்தை தவறவிட்ட குல்வீர் சிங்.. ஆசிய விளையாட்டில் 2வது வெள்ளி வென்று அபாரம்
0.37 வினாடியில் தங்கத்தை தவறவிட்ட குல்வீர் சிங்.. ஆசிய விளையாட்டில் 2வது வெள்ளி வென்று அபாரம்
நகோயா: 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில் தடகள களத்தில் இந்திய வீரர் குல்வீர் சிங் மீண்டும் ஒரு வரலாற்று சாதனையை படைத்துள்ளார். ஆடவர் 1500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தனது தனிநபர் சிறந்த நேரத்தை பதிவு செய்த அவர், வெள்ளிப் பதக்கத்தை தட்டிச் சென்றார். இதன் மூலம் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில் அவர் தனது 2வது வெள்ளிப் பதக்கத்தை வென்று இருக்கிறார்.
ஆடவர் 1500 மீட்டர் இறுதிப் போட்டியில் தொடக்கத்திலிருந்தே முன்னிலை வீரர்களுக்கு கடும் சவால் அளித்த குல்வீர் சிங், கடைசி மீட்டர்களில் மின்னல் வேகத்தில் முன்னேறினார். போட்டி தூரத்தை 3:36.72 நிமிடங்களில் கடந்து தனது புதிய தனிநபர் சாதனையை அவர் படைத்தார். ஜப்பான் வீரர் கசுடோ இஜாவா 3:36.35 நிமிடங்களில் பந்தய தூரத்தை கடந்து புதிய ஆசிய விளையாட்டு சாதனையுடன் தங்கப் பதக்கத்தை வென்றார். வெறும் 0.37 வினாடிகள் வித்தியாசத்தில் குல்வீர் சிங் தங்கப் பதக்கத்தை நூலிழையில் தவறவிட்டு வெள்ளியை வென்றார். மற்றொரு ஜப்பான் வீரரான நகியா மோரி 3:37.92 நிமிடங்களில் வந்து வெண்கலப் பதக்கத்தை பெற்றார்.
முன்னதாக நடைபெற்ற 10,000 மீட்டர் ஓட்டப்பந்தயத்திலும் குல்வீர் சிங் அபாரமாக செயல்பட்டு இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கம் வென்று கொடுத்திருந்தார். தற்போது 1500 மீட்டர் பந்தயத்திலும் வெள்ளி வென்றதன் மூலம், ஒரே ஆசிய தொடரில் 2 வெள்ளிப் பதக்கங்களை குவித்து இந்திய தடகள வரலாற்றில் முத்திரை பதித்துள்ளார்.
ஏற்கனவே 2 வெள்ளிப் பதக்கங்களை வென்றுள்ள குல்வீர் சிங், செவ்வாய்க்கிழமை அன்று நடைபெற உள்ள ஆடவர் 5,000 மீட்டர் ஓட்டப்பந்தய இறுதிப்போட்டியிலும் களமிறங்க உள்ளார். அந்தப் போட்டியில் அவர் தங்கம் வெல்வார் என ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களும் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.