தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டு தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்
தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டு தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்
பணி மூப்பு அடிப்படையில் நிரந்தரமாக பணி நியமனம் செய்வது, பதவி உயர்வு உள்ளிட்ட எந்தவித செயல்பாடுகளும் முறையாக நடைபெறவில்லை என தூய்மைப் பணியாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
Published : September 28, 2026 at 5:37 PM IST
சென்னை: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பள்ளியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தலைமைச் செயலகத்தை முற்றுகையிட முயன்ற நிலையில், போலீசார் அவர்களை கைது செய்தனர்.
தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை பள்ளி மற்றும் விடுதி தூய்மை பணியாளர்கள் மாநில ஒருங்கிணைப்பு குழு சார்பில் 100 மேற்பட்ட பணியாளர்கள் தமிழ்நாடு முழுவதும் இருந்து சென்னை தலைமைச் செயலகம் முன்பு தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்த முற்பட்டனர்.
அவர்களை போராட்டம் நடந்த அனுமதிக்காமல் காவல்துறையினர் எதிரே உள்ள பூங்காவில் காத்திருக்க வைத்தனர். அங்கு அரசுக்கு எதிராகவும், தங்கள் கோரிக்கைகளை முன்வைத்தும் பதாகைகளை ஏந்தி போராட முற்பட்ட நிலையில் காவல்துறையினர் அவர்களை கைது செய்து அழைத்து சென்றனர்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தூய்மை பணியாளரான சாந்தி, "சமூக நீதி விடுதிகளில் 2012-ஆம் ஆண்டு பணி நியமனம் செய்யப்பட்ட பணியாளர்கள், தற்பொழுது வரை மிகவும் குறைவான ஊதியம் பெற்று வருகிறார்கள். அவர்களுக்கு எந்த சலுகைகளும், ஊதிய உயர்வும் வழங்கப்படுவது இல்லை. பணி மூப்பு அடிப்படையில் நிரந்தரமாக பணி நியமனம் செய்வது, பதவி உயர்வு உள்ளிட்ட எந்தவித செயல்பாடுகளும் முறையாக நடைபெறவில்லை. இத்தனை ஆண்டுகளாக அவர்களின் உழைப்பு மட்டுமே சுரண்டப்பட்டு வருகிறது.
மேலும் ஆசிரியர் சங்கங்களை சேர்ந்தவர்கள் தங்களுக்கு வேண்டிய பணியாளர்களை சமையலர் பணி, காவலாளி பணிகளுக்கு பணி நியமனம் செய்து கொள்கிறார்கள். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி பல ஆண்டுகளாக கேள்வி எழுப்பிய பொழுதும், தற்போது நிதி இல்லை எனக் கூறி அரசு சார்பில் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.தங்களுக்கு நியாயமான ஊதியம் வழங்க வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். பதவி உயர்வு வழங்க உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்" என கோரிக்கை விடுத்தார்.