விஜய் Vs எடப்பாடி Vs ஸ்டாலின்: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் மாற்றப்போகும் அரசியல் கணக்குகள்!
விஜய் Vs எடப்பாடி Vs ஸ்டாலின்: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் மாற்றப்போகும் அரசியல் கணக்குகள்!
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்கள் வெறும் இரண்டு தொகுதிகளுக்கான போட்டியாக மட்டும் முடிந்துவிடாமல், தமிழ்நாட்டில் அடுத்தடுத்த நிகழப்போகும் அரசியல் நகர்வுகளுக்குத் தொடக்கப்புள்ளியாக அமையப்போகின்றன.
ஆளும் த.வெ.க சார்பில் போட்டியிடும் இரண்டு வேட்பாளர்களும், கடந்த சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க வேட்பாளர்களாகப் போட்டியிட்டு வெற்றிபெற்று, த.வெ.க அரசுக்கு நம்பிக்கை வாக்கு அளித்துவிட்டு முதல் சட்டமன்றக் கூட்டத்தொடரைக்கூட சந்திக்காமல் பதவி விலகியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
‘மெஜாரிட்டி கொடுங்கள்’ என்ற விஜய்யின் கணக்கு!
அ.தி.மு.க-வைச் சேர்ந்த ஆறு எம்.எல்.ஏ-க்கள் பதவி விலகியதால், அந்தக் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையும் குறைந்திருக்கிறது. அந்த ஆறு தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில், தேர்தல் வழக்குகள் நிலுவையில் இருந்ததால், நான்கு தொகுதிகளில் உடனடியாக தேர்தல் நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது. வழக்குகள் இல்லாத மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் மட்டும் தேர்தல் நடைபெறுகிறது.
முதல்வர் விஜய் ராஜினாமா செய்த திருச்சி கிழக்கு தொகுதிக்கும் இடைத்தேர்தல் வர வேண்டியிருக்கிறது. இந்தத் தொகுதிகளுடன் சேர்த்து அடுத்தடுத்த காலகட்டங்களில் மேலும் சில தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்கள் நடைபெறும் சூழல் உருவாக வாய்ப்பு இருக்கிறது. எனவே, இந்த இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெறுவது த.வெ.க-வுக்கு சட்டமன்ற எண்ணிக்கையை உயர்த்துவதோடு, ‘மக்கள் எங்களுடைய ஆட்சியை ஏற்றுக்கொள்கிறார்கள்’ என்ற அரசியல் செய்தியை முன்வைக்கும் வாய்ப்பையும் தரும்.
கடந்த பொதுத்தேர்தலில் அளித்த வாக்குறுதிகள், ஆட்சிக்கு வந்த பிறகு மேற்கொண்ட நடவடிக்கைகள், பெண்களுக்கான திட்டங்கள், இலவசப் பேருந்து பயணம் உள்ளிட்ட அரசின் திட்டங்களை த.வெ.க முன்னிறுத்தும். ‘கஜானா காலியாக இருந்த நிலையில்தான் ஆட்சியை ஏற்றுக்கொண்டோம்; வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்றுகிறோம்’ என்று த.வெ.க பிரசாரம் செய்யும்.
கடந்த பொதுத்தேர்தலில் த.வெ.க-வுக்கு வாக்களித்த எல்லோருமே அதன் தீவிர ஆதரவாளர்கள் என்று சொல்ல முடியாது. விஜய்யின் ரசிகர்கள், உறுதியான ஆதரவாளர்களைத் தவிர, ‘மாற்றம் வேண்டும்’ என்ற மனநிலையில் வாக்களித்த ஒரு பகுதியினரும் அதில் இருந்தனர். அந்த வாக்காளர்களின் தற்போதைய மனநிலை என்ன என்பது இந்த இடைத்தேர்தலின் முக்கியமான அம்சங்களில் ஒன்று.
நான்கு மாதங்களிலேயே ஓர் ஆட்சியை மதிப்பிடுவது சரியல்ல; இன்னும் கால அவகாசம் தேவை என்று அந்த வாக்காளர்கள் கருதினால் த.வெ.க-வுக்கு அது சாதகமாக இருக்கும். மாறாக, எதிர்பார்த்த மாற்றம் ஏற்படவில்லை என்ற எண்ணம் உருவாகியிருந்தால், அந்த வாக்குகள் வேறு திசைக்குச் சென்றுவிட வாய்ப்பு இருக்கிறது.
அ.தி.மு.க-வுக்கு இது வெறும் இடைத்தேர்தல் அல்ல!
இதை ‘குதிரை பேரம்’ என்றும், கட்சியைப் பிளவுபடுத்தும் முயற்சி என்றும் அ.தி.மு.க-வும் இடதுசாரி கட்சிகளும் இப்போதே விமர்சித்து வருகின்றன. ‘மக்கள் இரட்டை இலைக்கு வாக்களித்தார்கள்; ஆனால் அந்த வாக்குகளைப் பெற்றவர்கள் கட்சி மாறிவிட்டார்கள். இது வாக்காளர்களுக்கான அவமதிப்பு’ என்ற குற்றச்சாட்டை அ.தி.மு.க முன்வைக்கும்.
அதே நேரம், ‘அ.தி.மு.க-வின் அரசியல் முடிவுகளுக்கு எதிராகவே நாங்கள் விலகினோம்’ என்ற விளக்கம் இன்றைய த.வெ.க வேட்பாளர்கள் தரப்பில் முன்வைக்கப்படுகிறது. சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு, தி.மு.க ஆதரவுடன் அ.தி.மு.க ஆட்சி அமைக்க முயன்றதாகச் சொல்லப்பட்ட அரசியல் சூழலே தங்களுடைய முடிவுக்குக் காரணம் என்பது அவர்களின் வாதம்.
ஆனால், அ.தி.மு.க-வின் கட்டுப்பாட்டை மீறி விஜய்க்கு நம்பிக்கை வாக்கு அளித்தது ஏன் என்ற கேள்வி அவர்கள் முன் இருக்கிறது. மேலும், தாங்கள் வெற்றி பெற்ற தேர்தலிலேயே சில மாதங்களில் பதவி விலகியதற்கான காரணத்தை வாக்காளர்களிடம் எப்படி விளக்கப் போகிறார்கள் என்ற சிக்கலும் அவர்களுக்கு இருக்கிறது.
எடப்பாடி பழனிசாமியின் கவலை!
இந்த இரண்டு தொகுதிகளிலும் அ.தி.மு.க தோல்வியடைந்தால், அதன் தாக்கம் தேர்தல் முடிவைத் தாண்டிச் செல்லும். ஏற்கெனவே கட்சிக்குள் அதிருப்தி நிலவி வருவதாகக் கூறப்படும் நிலையில், மேலும் சில எம்.எல்.ஏ-க்கள் த.வெ.க-வை நோக்கிச் செல்லக்கூடிய சூழ்நிலை உருவானால், அது அ.தி.மு.க-வின் உள்கட்சி சமநிலையைப் பாதிக்கும்.
இதனால், எடப்பாடி பழனிசாமியின் தலைமை, கட்சியின் ஒற்றுமை ஆகியவை பற்றிய கேள்விகள் எழும். அடுத்தடுத்து பல தொகுதிகளில் அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் பதவி விலகினால், இடைத்தேர்தல்கள் தொடர்ச்சியாக நடைபெறும் நிலையும் உருவாகும். அப்படி நடந்தால், ஒரு கட்டத்தில் அது ஒரு மினி பொதுத்தேர்தல் போன்ற அரசியல் சூழலை உருவாக்கும். அதனால்தான் இந்த இரண்டு தொகுதிகளிலும் எப்படியாவது வெற்றி பெறுவது என்பது அ.தி.மு.க-வுக்கு முக்கியமானதாக இருக்கிறது.
த.வெ.க-வின் ‘டார்கெட்’ அ.தி.மு.க அல்ல!
‘குதிரை பேரம்’ என்ற குற்றச்சாட்டை அ.தி.மு.க தொடர்ந்து முன்வைத்த போதிலும், அதை த.வெ.க கண்டுகொள்ளவே இல்லை. அதைப்போல, தேர்தல் களத்திலும் அ.தி.மு.க-வுக்கு எதிரான பிரசாரத்தை த.வெ.க மேற்கொள்ளப்போவதில்லை. அதற்குக் காரணம், விஜய்யின் அரசியல் எதிரி என்ற இடத்தில் தி.மு.க-வையே த.வெ.க முன்னிறுத்தி வருவதுதான்.
‘தி.மு.க ஊழல்’, ‘தி.மு.க-வின் ஆட்சி’, ‘தீயசக்தி தி.மு.க’ என தி.மு.க-வை மையப்படுத்திய விமர்சனங்கள்தான் த.வெ.க-வின் பிரசாரத்தில் முக்கிய இடம்பெறுகின்றன. அரசின் இலவசத் திட்டங்கள், பெண்களுக்கான நலத்திட்டங்கள், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவது போன்ற அம்சங்களும் அதனுடன் இணைக்கப்படலாம். இதனால், களத்தில் அ.தி.மு.க–தி.மு.க ஆகிய இரு எதிர்க்கட்சிகளையும் ஒரே நேரத்தில் எதிர்கொள்வதைவிட, தி.மு.க-வுடனான நேரடி அரசியல் மோதலையே த.வெ.க தீவிரப்படுத்தும்.
ஆட்சிக்கு வரும் முன்பு த.வெ.க முன்வைத்த வாக்குறுதிகளுக்கும், தற்போது ஆட்சியின் செயல்பாடுகளுக்கும் இடையேயான வேறுபாடுகளை தி.மு.க தீவிரமாக பிரசாரம் செய்யும். சட்டம்–ஒழுங்கு, பெண்கள் பாதுகாப்பு, போதைப்பொருள் பிரச்னை, காவல் மரணங்கள், ஆணவக் கொலைகள், வேலைவாய்ப்பு, விலைவாசி உயர்வு, மின்கட்டணம் உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து த.வெ.க ஆட்சியில் எழுந்துள்ள விமர்சனங்களையும் தி.மு.க தீவிரமாக பிரசாரத்தில் முன்வைக்கும்.
சட்டமன்றத்தில் விஜய்யின் செயல்பாடு, அரசு நிர்வாகத்தில் அதிகாரிகளின் மேலாதிக்கம், வெளிநாட்டு முதலீடு தொடர்பான அரசின் நடவடிக்கைகள் போன்றவற்றையும் தி.மு.க கேள்விக்கு உட்படுத்தும். ஆனால், தி.மு.க முன்பு இருக்கும் முக்கியமான சவால், தனது எதிர்ப்பு வாக்குகள் முழுவதும் அ.தி.மு.க-வுக்குச் சென்றுவிடாமல் பார்த்துக்கொள்வது. அதனால், முன்னாள் அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் தொடர்பான சர்ச்சையை மட்டும் மையப்படுத்தாமல், த.வெ.க ஆட்சியின் செயல்பாடுகளையே முக்கியப் பிரச்னையாக மாற்ற தி.மு.க முயற்சி செய்யும்.
இந்த இடைத்தேர்தல்களில், த.வெ.க, தி.மு.க. அ.தி.மு.க ஆகிய கட்சிகள் மட்டுமின்றி, நாம் தமிழர் கட்சியும், சி.பி.ஐ., சி.பி.எம் கட்சிகளும் போட்டியிடுகின்றன. கடந்த தேர்தல்களில் குறிப்பிட்ட அளவு வாக்குகளைப் பெற்ற நா.த.க., இந்தத் தேர்தலிலும் சில சதவிகித வாக்குகளைப் பெறும். இடதுசாரிக் கட்சிகளுக்கு மதுராந்தகத்திலும், தாராபுரத்திலும் அமைப்பு ரீதியான செல்வாக்கு உள்ளது. த.வெ.க ஆட்சிக்கு வெளியிலிருந்து ஆதரவு அளித்து வந்தாலும், ஆட்சியின் சில நடவடிக்கைகளில் இடதுசாரிகளுக்கு அதிருப்தி இருக்கிறது.
இடதுசாரிகளின் முதன்மையான நோக்கம், இடைத்தேர்தலில் வெற்றி பெறுவதைவிட, தாங்கள் சுட்டிக்காட்டும் பிரச்னைகளை மக்கள் முன் வைப்பதை முக்கியமாகக் கருதுவார்கள். இத்தகைய சூழலில், தி.மு.க, அ.தி.மு.க, நாம் தமிழர், இடதுசாரிகள் எனப் பல திசைகளிலும் தவெக-வுக்கு எதிரான வாக்குகள் பிரிவதற்கு வாய்ப்பு உள்ளது.
தாராபுரத்தில் சமூகக் கணக்கு மட்டும் போதுமா?
விஜய் பிரசாரத்தின் தாக்கம்!
கடந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில், விஜய் பல தொகுதிகளுக்குச் செல்லாமலேயே த.வெ.க கணிசமான வாக்குகளைப் பெற்றது. இப்போது ஆட்சியில் இருக்கும் நிலையில், அவர் நேரடியாகப் பிரசாரம் செய்வது கட்சியின் வாக்குகளை ஒருங்கிணைப்பதற்கு உதவ வாய்ப்பு இருக்கிறது.
மதுராந்தகத்தில் கடந்த தேர்தலில் த.வெ.க பெற்ற வாக்குகளும், அ.தி.மு.க பெற்ற வாக்குகளும் கணிசமானவை. ஆனால், கடந்த தேர்தலில் அ.தி.மு.க பெற்ற முழு வாக்குகளும் அப்படியே மீண்டும் அதற்குக் கிடைக்கும் என்று கருத முடியாது. முன்னாள் அ.தி.மு.க நிர்வாகிகள் த.வெ.க-வுக்குச் சென்றிருப்பது உள்ளிட்ட அம்சங்கள், அந்தக் கணக்கை மாற்றக்கூடியவை. அதேபோல், த.வெ.க வாக்காளர்களில் ‘மாற்றம் வேண்டும்’ என்ற எண்ணத்தில் வாக்களித்தவர்கள் எந்த முடிவை எடுக்கிறார்கள் என்பதும் முக்கியம்.
இங்கே இன்னொரு முக்கியமான அரசியல் உண்மையையும் கவனிக்க வேண்டும். தமிழ்நாட்டில் பல இடைத்தேர்தல்களில் ஆளுங்கட்சிகள் வெற்றி பெற்றிருக்கின்றன. ஆனால், அதே முடிவு அடுத்த பொதுத்தேர்தலில் அப்படியே பிரதிபலித்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. கடந்த காலத்தில் ஆளுங்கட்சிகள் இடைத்தேர்தல்களில் வெற்றி பெற்ற பின்னரும் பொதுத்தேர்தல்களில் வேறு முடிவுகளைச் சந்தித்துள்ளன.
எனவே, இந்த இரண்டு தொகுதிகளின் முடிவை மட்டும் வைத்து த.வெ.க ஆட்சிக்கான இறுதித் தீர்ப்பாகப் பார்க்க முடியாது. த.வெ.க வெற்றி பெற்றால், ‘எங்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை மக்கள் ஏற்கவில்லை; எங்களுடைய அரசியல் முடிவை மக்கள் அங்கீகரித்திருக்கிறார்கள்’ என்று அக்கட்சி பிரசாரம் செய்யலாம்.
அ.தி.மு.க வெற்றி பெற்றால், ‘கட்சித் தாவலையும் எம்.எல்.ஏ-க்கள் பதவி விலகியதையும் மக்கள் ஏற்கவில்லை’ என்ற அரசியல் செய்தியை அந்தக் கட்சி முன்வைக்கும். தி.மு.க வெற்றி பெற்றால், ‘புதிய ஆட்சியின் செயல்பாடுகள் குறித்து மக்கள் கேள்வி எழுப்பத் தொடங்கிவிட்டார்கள்’ என்ற வாதத்தை அந்தக் கட்சி வலுப்படுத்தும்.
அதிகமான அரசியல் நெருக்கடி யாருக்கு?
இந்தத் தேர்தலில் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் மூன்று கட்சிகளுக்கும் வெவ்வேறு காரணங்களால் இருக்கிறது. த.வெ.க-வுக்கு, சட்டமன்றத்தில் எண்ணிக்கையை உயர்த்தி, ஆட்சிக்கு மக்களின் ஆதரவு தொடர்வதாகக் காட்ட வேண்டிய தேவை இருக்கிறது. தி.மு.க-வுக்கு – எதிர்க்கட்சியாக அரசின் செயல்பாடுகளை மக்களிடம் கொண்டுசென்று, தனது வாக்கு தளத்தை மீண்டும் உறுதிப்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது.
அ.தி.மு.க-வுக்கு ஏற்கெனவே கட்சி எதிர்கொண்டுள்ள உள்கட்சி சிக்கல்களுக்கு மத்தியில், தான் வெற்றி பெற்ற தொகுதிகளைத் தக்கவைத்துக்கொண்டு கட்சியின் அமைப்பையும் தலைமையையும் பாதுகாக்க வேண்டிய தேவை இருக்கிறது.
பா.ம.க-வின் கணக்கு என்ன?
பா.ம.க கடந்த தேர்தலில் அ.தி.மு.க-வுடன் கூட்டணியில் இருந்தது. அதனால், மதுராந்தகத்தில் அ.தி.மு.க வெற்றி பெற்றதற்கு பா.ம.க-வின் ஓட்டும் ஒரு காரணமாக இருந்தது. 2016 தேர்தலில் பா.ம.க தனித்துப் போட்டியிட்டபோது, மதுராந்தகத்தில் சுமார் 9 சதவிகித வாக்குகளைப் பெற்றிருந்தது. அப்படி இருக்கும்போது, இந்த முறை கடந்த தேர்தலைப் போல பா.ம.க தங்களுக்கு ஆதரவாக இருக்கும் என்று அ.தி.மு.க எதிர்பார்த்தது. அ.தி.மு.க-வும் பலமுறை அன்புமணியைத் தொடர்புகொண்டு ஆதரவு கேட்டதாகச் சொல்லப்படுகிறது. ஆனால், யாருக்கும் ஆதரவு இல்லை என்ற நிலைப்பாட்டை பா.ம.க எடுத்திருக்கிறது.
பா.ம.க எடுத்திருக்கும் இந்த நிலைப்பாடு அ.தி.மு.க-வுக்கு கடுமையான பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. பா.ம.க சமீபகாலமாக த.வெ.க-வுடன் ஒரு மென்மையான போக்கைக் கடைப்பிடித்து வருவதைப் பார்க்க முடிகிறது. சில இடங்களில் த.வெ.க-வுடன் நெருக்கமான அணுகுமுறையும் இருக்கிறது.
சமீபத்தில் சௌமியாவும் அன்புமணியும் த.வெ.க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தைச் சந்தித்துவிட்டுச் சென்றிருக்கிறார்கள்.
த.வெ.க அரசின் நடவடிக்கைகளுக்கு பா.ம.க ஆதரவு தெரிவித்திருக்கிறது. அதே நேரத்தில், புதிய தலைமைச் செயலகம் உள்ளிட்ட பல்வேறு சட்டமன்ற நிகழ்வுகளிலும், மின்வெட்டு போன்ற பிரச்னைகளிலும் அன்புமணி கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருக்கிறார். இருந்தாலும், பா.ம.கவைப் பொறுத்தவரை, அவர்களுடைய கணக்கு வேறாக இருக்கிறது என்று தெரிகிறது.
குறிப்பாக, போலூர், திருவண்ணாமலை, தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் அ.தி.மு.க-வின் வாக்குகள் பாமகவுக்கு முழுமையாகக் கைமாறவில்லை என்ற எண்ணம் பா.ம.க-வினரிடம் இருக்கிறது.
‘நாம் ஏன் இப்போது இவர்களுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும்? இந்தத் தேர்தல் எந்த மாற்றத்தையும் கொண்டு வரப்போவதில்லை. நாம் ஆதரித்தும் அ.தி.மு.க தோற்றுவிட்டால், பா.ம.க ஆதரித்தும் தோற்றது என்ற நிலை உருவாகும். அதனால் நமக்கும் செல்வாக்கு இல்லை என்ற பிம்பம் ஏற்பட்டுவிடும். எனவே, அமைதியாக இருப்பதே நல்லது’ என்ற எண்ணம் பா.ம.க தரப்பில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
பா.ம.க-வின் ஓட்டுகள் எங்கே செல்லும் என்ற கேள்வி எழுகிறது. நிச்சயமாக அவை அ.தி.மு.க-வுக்குச் செல்லாது என்பதுதான் தற்போதைய சூழலில் தெளிவாகத் தெரிகிறது. அப்படியானால், அந்த ஓட்டுகள் யாருக்குச் செல்லும்?
அதில் கணிசமான பகுதி த.வெ.க-வுக்குச் செல்ல வாய்ப்பு இருக்கிறது. அதே சமயம், நாம் தமிழர் கட்சிக்கும், ஓரளவு சிபிஐ(எம்) உள்ளிட்ட கட்சிகளுக்கும் செல்லக்கூடிய வாய்ப்பு இருக்கிறது.
பா.ம.க தனது கட்சித் தொண்டர்களுக்கு ஏதேனும் குறிப்பிட்ட அறிவுறுத்தலை வழங்கினால் மட்டுமே இந்த வாக்குகள் ஒரே திசையில் செல்லும். இல்லையென்றால், பா.ம.க-வின் வாக்குகள் பல்வேறு கட்சிகளுக்குப் பிரிந்து செல்லும். ஆனால், அ.தி.மு.க-வுக்குச் செல்வதற்கான வாய்ப்பு குறைவாகவே இருக்கிறது.
பா.ம.க எடுத்திருக்கும் இந்த முடிவு எதிர்காலத்தில் த.வெ.க அமைச்சரவையில் பா.ம.க இடம்பெறுவதற்கான ஒரு கதவைத் திறந்து வைத்திருப்பது போன்ற சூழலையும் உருவாக்குகிறது.
இன்னொரு முக்கியமான விஷயம், பொதுத் தேர்தலுக்குப் பிறகு அ.தி.மு.க ஏற்கெனவே பலவீனமடைந்திருக்கிறது. அந்தக் கட்சியில் இருந்து பலர் வெளியேறியிருக்கிறார்கள். இந்த இடைத்தேர்தலில் இரண்டு தொகுதிகளிலும் த.வெ.க வெற்றி பெற்றால், அ.தி.மு.க-வில் இருக்கும் மேலும் பல எம்.எல்.ஏ-க்கள் த.வெ.க-வுக்குச் செல்லக்கூடிய வாய்ப்பு இருக்கிறது என்ற பேச்சும் இருக்கிறது.
அப்படிப்பட்ட சூழலில், ஏற்கெனவே பலவீனமாகிக்கொண்டிருக்கும் அ.தி.மு.க-வுக்கு நாம் ஏன் மீண்டும் உயிர் கொடுக்க வேண்டும் என்ற எண்ணமும் பா.ம.க-விடம் இருக்கலாம்.
இந்த இரண்டு தொகுதிகளைத் தாண்டி...
இந்த இடைத்தேர்தல்கள் வெறும் இரண்டு தொகுதிகளுக்கான போட்டியாக மட்டும் முடிந்துவிடாமல், அடுத்தடுத்த அரசியல் நகர்வுகளுக்கும் தொடக்கப்புள்ளியாக அமையலாம். த.வெ.க வெற்றி பெற்று, அடுத்தடுத்து வரும் இடைத்தேர்தல்களிலும் தனது சட்டமன்ற எண்ணிக்கையை உயர்த்தினால், கூட்டணி கட்சிகளுடனான அதன் உறவு, தனிப்பெரும்பான்மை குறித்த அதன் அரசியல் கணக்கு, 2029 நாடாளுமன்றத் தேர்தலை அது எவ்வாறு எதிர்கொள்ளும் என்பவை முக்கியமான கேள்விகளாக மாறும்.
மறுபுறம், அ.தி.மு.க மீண்டும் தோல்வியடைந்தால், கட்சிக்குள் ஏற்கெனவே இருக்கும் அதிருப்திகள் தீவிரமடையுமா என்ற கேள்வியும் எழும். தி.மு.க-வைப் பொறுத்தவரை, இந்தத் தேர்தலில் வெற்றி கிடைக்காவிட்டாலும், ‘எதிர்க்கட்சியாக ஆட்சியின் குறைகளை மக்களிடம் கொண்டு சென்றோம்’ என்ற அரசியல் அணுகுமுறையுடன் அடுத்த கட்டப் போராட்டங்களை முன்னெடுக்கலாம்.